புதன், 10 ஏப்ரல், 2013

THIRUPATHI


பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்




திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில.........1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.







திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


 4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.



8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ,ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.



13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.



17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன
                                               -------facebook -ல் இருந்து

பாக்கவேண்டிய இடங்கள் :

அநேகபேர் திருமலைக்கு மட்டும் சாமியை பார்த்துட்டு வந்தாலே போதும் அதுக்கே நேரம் ஆகிடும்னு திருமலையை சுற்றி பாக்க வேண்டிய இடங்களை பாக்காம போயிடுறோம் .ஒரு தரம் போய் தான் பாருங்களேன் எல்லா இடத்துக்கும் .

  • முதல்ல திருமலையில் இருந்து பாபநாசம் போகுற வழியில வேணுகோபால சுவாமி திருக்கோயில் இருக்கு.

இங்க ராமர்,லக்ஷ்மர்,சீதா தெய்வங்களுக்கு சன்னதியும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும் இருக்கு.









  • இதுக்கு அடுத்தது ,ஜேப்பலி ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. 

இந்த கோவிலுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்ங்க ,அதுவும் செங்குத்தான பாதைல நிறையா படிக்கட்டுகள் ஏறி போனா ,சமதளமான பாதை வரும் அதுக்கு அடுத்து மறுபடியும் செங்குத்தான பாதைல இறங்கணும், கோவிலுக்கு பக்கத்துல பாதை வந்ததும் படிகட்டுகளோ சிமென்ட் தரைகளோ இல்லாம வெறும் கல்,பாறைகலால பாதை இருக்கு அதை கடந்து போனோம்னா அழகான ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம்.




இங்க அர்ச்சனை செய்ய பொருள்கள் வாங்க கடைகள் இருக்கு,எப்போ போனாலும் பிரசாதம்(பொங்கல்,தயிர் சாதம்,புலி சாதம்,சாம்பார் சாதம்-னு எதாவது ஒண்ணு ) தந்துகிடே இருக்காங்க.இந்த கோவிலின் அடிவாரத்துல ஆகாசகங்கா அணை இருக்கு.






  • அடுத்து ஒரு பத்து நிமிஷ பயணத்துல ஆகாசகங்கா-ங்கற இடத்தை அடையலாம்.

வரலாறு : 

தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த மகா புருவா ஆர்ய பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடிதிருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டுவந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார்.வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ,ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு,நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டுபோகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகிவிட்டான்.நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள்
கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார்.அதற்க்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டுவர தொடங்கினார்.அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யதிர்க்காக கொண்டுவருகிறார்கள் .

  • அடுத்து ,பத்து நிமிஷ பயணத்துல ,பாபநாசத்தை அடையலாம்.
பாபநாசம் (அ ) பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்பரதால இந்த இடத்துக்கு இப்படி பேர் வந்துச்சாம். இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டிருக்குர அணைகட்டுல இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்குது.அதனால திருமலைல எங்க குளிச்சாலும் பாபனாசத்துல குளிச்ச புண்ணியம் கிடைக்கும்னு சொல்றாங்க.

திருப்பதியில் மொத்த 14 தீர்த்தங்கள் இருக்காம். அது என்ன என்னனு தெரியுமா?

1.  சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடமாம் இங்கதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளி இருக்கார் . மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகுதாம்.

2.  பாபவிநாசம்: மலையிலேயே இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்றனவாம். அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் போய்டும் அப்படீங்குறது ஐதீகம்.   


3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலைல பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தாலே வெங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறுதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷமாம்.

4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.

5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.

 6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,

7, வைகுண்ட தீர்த்தம்,

8. ஜடாயு தீர்த்தம்,

9. சகஸ்ந்தன தீர்த்தம்,

10. கோனேரி தீர்த்தம்,

11. சக்ர தீர்த்தம்,

12.வகுள தீர்த்தம்,

13. சேஷ தீர்த்தம்,

14. மொரதீர்த்தம்

என பதினான்கு வகை தீர்த்தங்கள் மலை மீது இருக்காம்.
.
  • ஸ்ரீவாரி பாதம் :

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இங்க இருந்து பார்த்தா திருமலையோட முழு வ்யூ -ம் அவ்ளோ அழகா தெரியும்.




  • அன்னப்பிரசாதம் :

திருமலைல அன்னப்பிரசாதம் ,விசேஷமான ஒண்ணு.தினமும் பல ஆயிர கணக்கான பேர் வந்து சாப்பிடுறாங்க.கவுண்ட்டர் 1,கவுண்ட்டர் 2-னு நிறையா கவுண்ட்டர்கள் இருக்கு.ஒரு கவுண்ட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் உக்காந்து சாப்படற அளவுக்கு பெரிய ஹால். அப்போ அங்க இருக்குற அத்தனை கவுண்ட்டர்லையும் எவ்ளோ பேர் சாப்பிட்ராங்கனு பாருங்க.அங்கேயே இந்த வருஷத்துக்கான அன்னப்ப்ரசாத ஸ்பான்சர்கள் யார் யார்னு LED டிஸ்ப்ளே வச்சுருக்காங்க.

தானத்துலையே சிறந்த தானம் அன்னதானம்னு சும்மாவா சொன்னாங்க.

திருப்தி போயிட்டு திருமாலை மட்டும் பாத்துட்டு வராம,அங்க இருக்குற மத்த கோவிலுக்கும் போய்ட்டு ,இயற்க்கை அழகை ரசிச்சிட்டு கடவுளோட +  இயற்கையோட அருள் பெற்று வாங்க..

AUTO BIOGRAPHY OF SRI VETHATHIRI MAHARISHI


GURU


SRI வேதாத்ரி மகரிஷி
Apr2004-19b
எனது அறிவோடு அறிவாய் உயிரோடு உயிராய்க் கலந்து கொண்டு அன்பு காட்டும் என் நண்பர்கள், மாணவர்கள் பலர் விருப்பப்படி எனது வரலாற்றை யானே எழுதுகிறேன். எனது வரலாற்றை முழுமையாக அறிந்துி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையோர்கள் உள்ளம் நிறைவு பெற வேண்டுமென்று கருதி என் கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.
எந்தப் பேராற்றலுடைய சக்தியின் அகத்திலே பல கோடி அண்டங்கள் மிதந்து உருண்டு ஓடி இயங்கிப் பேரியக்க மண்டலமாக அமைந்திருக்கிறதோ, அந்த எல்லாம் வல்ல பெரு நிலையை நினைவுகொண்டு எனது வரலாற்றை யானே எழுத முற்படுகிறேன்.
எல்லா உயிர்களுக்கும் அமைத்தது போன்றே, எனக்கும் யான் பிறக்கும் போதே என் வாழ்நாட்கள் முழுமைக்கும் தேவையானவற்றை எல்லாம் அமைத்து எனது பிறப்போடு இணைத்து வைத்திருக்கும் தெய்வீக ஒழுங்கமைப்பை, அதன் பெருமையை நினைந்து, நினைந்து, கனிந்து, கனிந்து, மகிழ்ந்து, மகிழ்ந்து, என் வரலாற்றை நண்பர்களுக்குக் கூற விழைகிறேன்.
எந்த மனித சமுதாயம் என்னை உருவாக்கி, இந்த உலகில் பலவிடத்திலும் தோன்றும் பொருட்களை எனது வாழ்வின் வளத்திற்காகத் தந்து என்னை வாழ வைக்கின்றதோ, அந்த அன்புச் சமுதாயத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்தும், அதனை உளம் நிறைவோடு வாழ்த்தியும், என் வாழ்கைக் குறுப்புகளை வரையத் தொடங்குகிறேன்.
தங்கள் உயிரிலும் உடலிலும் பங்கு பிரித்து, ஒன்று கூட்டி, என் உடலாக மலர்த்தி, வளர்த்து, இவ்வுலகுக்கு எனை அளித்த என் அருமை அன்னையையும் தந்தையையும் வணங்கி, அவர்கள் எனக்காக ஏற்ற துன்பங்களை நினைந்து நினைந்து, கசிந்து உருகி, என் வாழ்க்கை வரலாற்றினை எழுதத் தொடங்குகிறேன்.
எழுத்தறிவும், தொழிலறிவும், இயற்கைத் தத்துவ அறிவும், ஒழுக்கப் பழக்கங்களும், உள்ளுிணர்வும், தவமும் அறிவித்த எனது, ஆசிரியர்கள் எல்லோருடைய தாள்களையும், உள்ளத் தமர்த்திப் பணிவோடு வணங்கி, எனது வாழ்வின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நண்பர்கள் அறிய எழுதத் தொடங்குகிறேன்.
என் வாழ்க்கைத் துணைவிகளாகி, எனது இன்ப துன்பங்களில் கூட்டு சேர்ந்து, எனக்கு ஏற்ற தொண்டாற்றி உதவி புிரிந்து வரும் என் மனைவியர் இருவரையும், உளம் நிறைவோடு வாழ்த்தி, எனது கதையை யானே எழுதத் தொடங்குகிறேன்.
எனது வாழ்க்கை விளக்கம் – குழந்தைப் பருவம்
எனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாது. ஆகையால் என் மூத்த அக்காள் வாயிலாகக் கேட்டறிந்தபடி எழுதுகிறேன்.
இந்த வரலாற்றில் வரும் சில நிகழ்ச்சிகளை என் அன்னையே எனக்குச் சொல்லியும் உள்ளார்கள்.
இந்திய நாட்டில் சென்னை மாநிலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி என்னும் பெயருடைய சிற்றூர்தான், நான் பிறந்த ஊர். என் அருமை அன்னையின் பெயர் சின்னம்மாள். என் மதிப்பு மிக்க தந்தையின் பெயர் வரதப்ப முதலியார். செங்குந்தர் குலம். என் தந்தை கை நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். என் பெற்றோருக்கு நான் எட்டாவது குழந்தை. எனக்கு முன்னர்ப் பிறந்த ஆண் மகன், ஏழாவது வயதில் இயற்கை எய்தி விட்டான். எனக்கு முன் பிறந்த பெண்கள் ஆறுபேர். அவர்களில் இப்போது மூவர்தான் உள்ளனர். அவர்கள் பெயர்கள் முறையே கற்பகம், சின்னம்மாள், நாகம்மாள். எனக்கு இளையவன் ஒருவன். அவன் பெயர் தெய்வசிகாமணி. இப்போது சைதாப்பேட்டையில் வாழ்ந்து வருகிறான். இந்தக் குறிப்புகளை விளக்கும் கவிகள் கீழே உள்ளன. படியுங்கள்.
“கோயில்குளம் சென்று பலநோன்பு நோற்றுக்
குலத்திற்கோர் மகன் வேண்டித் தவம்புரிந்த
தாயின் பெயர் சின்னம்மாள்; பரம ஏழை;
தந்தை பெயர் வரதப்பன்; இவர்களுக்கு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினொன் றாண்டில்,
ஆகஸ்டு பதினான்கு திங்கள் காலை,
போயின நூற்றிருபத்தியொரு விநாடி
பிறந்தேன் யான்; கூடுவாஞ்சேரி ஊரில்”
“மீன இராசிச், சிம்ம இலக்கனத்தில்,
மேடத்தில், இராகு சனி செவ்வாய் நிற்க,
பானு கடகம் புதனோ இலக்கினத்தில்
பலமிழந்து கன்னியிலே சுக்கிரன் நிற்க,
வானகுரு கேது துலா இராசி நிற்க,
வந்த உத்திரட்டாதி மீன் சனி திசையில்,
போன மிச்சம் மூன்றாண்டு, ஐந்து திங்கள்,
பொழுதைந்து; இதுவே என் பிறந்த காலம்.”
“எனக்கு முன்னம் பிறந்தோர்கள் பெண்கள் ஆறு
ஏறுஒன்று இருபெண் ஓர் ஆண் இறந்தார்
மனக்கவலை வறுமை இவைக் கிடையே வாழ்ந்து,
மகனாக எனைப் பெற்றோர், மறந்தார் துன்பம்;
தனக்கில்லா விடினும், தன் மக்கட் கிட்டுத்
தாய்க்கடமை செய்வோரில் தலை என் அன்னை;
இனத் தொழிலாம் கை நெசவில் ஈடுபட்டு
இரவுபகலாய் உழைத்தார் எனது தந்தை.”
ஆறு பொண்களைப் பெற்ற பெற்றோர்கட்கு, ஏழாவது ஆண் மகவு பிறந்து, அதுவும் ஏழு வயதில் இறந்துவிட்டால், அவர்கள் மனம் எவ்வாறிருக்கும்? எப்போதும் தெய்வத்தை நினைந்து நினைந்து உருகினார்கள். பல நோன்புகளை நோற்றார்கள். தரையை மெழுகி, சாப்பாடு அதன் மேல் போட்டுக்குனிந்து வாயினால் சாப்பிடும் ஒரு நோன்பைக்கூட சிலநாள் என் அன்னை கடைப்பிடித்ததாகச் சொன்னார்கள். என் பெற்றோர் பக்தியில் ஆழ்ந்தவர்கள். அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பதாக வேண்டிக்கொண்டால், ஆண் மகவு பிறக்கும் என்று யாரோ சொன்னார்களாம். கூடுவாஞ்சேரியில் அப்போது அரசு வேம்பு இணைந்த மேடை கிடையாது. என் தந்தையார் ஒரு அரச மரச் செடியையும், வேம்பு மரச் செடியையும் தேடிக் கொண்டுவந்து, கூடுவாஞ்சேரிக் குளக்கரையில் மேற்கு பக்கத்தில் வைத்து வளர்த்தார். அதை வளர்க்க அவர் பட்ட தொல்லைகளை ஒரு நாள் விளக்கிக் கூறினார். என் கண்களில் நீர் கலகலவென்று சொரிந்தது. அந்த இரண்டு செடிளும் மரமாகும் வரைக்கும், ஒரு ஏழை நெசவாளி தனது பிழைப்பிற்குத் தொழில் செய்து கொண்டே, அவற்றை காவல் காத்துத் தண்ணீர் ஊற்றி வரவேண்டுமெனில் எவ்வளவு உழைப்பு உழைத்திருக்க வேண்டும்? அந்த மரங்கள் வளர்ந்தன. இப்போது கூட, நான் பார்க்க நேர்ந்தால், அவை ஏதோ என்னோடு பேசுவதாகவே தோன்றுகிறது. ஆலய வழிபாட்டிலும், மதச் சடங்குகளிலும் உள்ள தேவையற்ற செயல்களை விளக்கி அவற்றை ஒழித்துத் தெளிவோடு வாழவேண்டும் என்று சீர்திருத்தம் பேசும் என்னை நோக்கி, அந்த மரங்கள் உங்கள் பெற்றோர் எங்கள் வாழ்வோடு, உனது பிறப்பை இணைத்து வைத்தனர் என்று கூறுவது போல், ஒரு நினைவு எழுகின்றது. அவர்கள் உள்ளத்தின் நிலை அது. சிம்ம லக்கினத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று, அறிந்த எனது தந்தைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஊர் முழுவதும் சர்க்கரை வழங்கி அவர் உள்ளப் பூரிப்பை வெளிகாட்டினார். குழந்தைப் பருவத்தில் மிகவும் அழகாக இருந்தேனாம். நான்கு வயதிற்குமேல் நடந்த சம்பவங்கள்தான் எனக்குச் சுமாராக நினைவுக்கு வருகின்றன. என்னைக் கீழே நடக்க விடமாட்டார்கள். என் அன்னையாரும், தந்தையாரும் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நான் எந்த உவமைகொண்டு கூறுவேன். மூன்று வயதில் ஒருநாள் என்னைத் தனது வயிற்றின் மீது கிடத்திக்கொண்டு, மல்லாந்து படுத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் என் அன்னை. அப்போது நான் முன்னோக்கி விரைவாக அவர்கள் வாயில் தலையால் மோதிவிட்டேனாம். முன் பல்லில் ஒன்று பெயர்ந்து விட்டதால், இரத்தம் கொட்டிக் கொண்டிருந்ததைக் கூடப் பாராமல், தனது வாயைப் பொத்திக்கொண்டு குழந்தை தலையில் அடிபட்டிருக்குமே, எவ்வளவு வலி குழந்தைக்கு இருக்குமோ என்று கதறி அழுதார்களாம். என்னைக் கீழே கிடத்திவிட்டுத் தூங்கினால், எறும்பு கடிக்குமோ என்று வயிற்றின் மீது போட்டுக்கொண்டு தூங்கினார்கள் என்றால், ஒரு மகனுக்காக ஒரு தாய் ஆற்றும் தொண்டு எத்தகையது? தாய் அன்புக்கு இணையாகச் சொல்லக்கூடிய ஒன்று வேறு ஏதும் உண்டா?
குறிப்பு: இக்கட்டுரை “அன்பொளி” மாத இதழில் 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுதப்பெற்றது. அப்போது என் உடன் பிறந்தவர்கள் அக்காள்கள் மூவர், தம்பி ஒருவன். ஆக நால்வர் இருந்தனர். 1980-ஆம் ஆண்டு எனது வாழ்க்கை வரலாறு தனி நூலாக வெளியிடும் போது எனது உடன்பிறந்தோர்களில் நாகம்மாள் மாத்திரமே, உயிருடன் உள்ளார். மற்ற இரண்டு அக்காள்களும், ஒரு தம்பியும் இயற்கையெய்திவிட்டனர்.
எனது வாழ்க்கை விளக்கம் – பள்ளிப் பருவம்
எனக்கு ஐந்து வயது நிரம்பியது. என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதைப் பற்றி, நாள்தோறும் என் பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழ்மையின் அடிதளத்தில் அவர்கள் பொருளாதார நிலை எனினும், ஒரு ஆண் குழந்தை அவர்களுக்கு இருக்கிறது என்ற நினைவில், மகிழ்ச்சியின் உச்சத்தில், என் பெற்றோர் வாழ்ந்து வந்தனர். என்னிடம் அவர்கள் கொண்டிருந்த பாசத்தை நான் எவ்வாறு விளக்குவேன். அந்த வயதில் அது பாசமென்றுகூட எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்ப்பார்கள். புன்னகை பூக்கும் அவர்கள் முகத்தில், நானும் சிரிப்பேன். உடனே என்னை வாரி அணைத்துக் கொள்வார்கள்; இந்த நிகழ்ச்சிகள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன.
ஐந்து வயது வரையில் எனக்குச் சோற்றை ஊட்டியே வளர்த்தார்கள். என் அன்னைதான் என்னைத் தூக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டுவார்கள். கோழி, காக்கை, பல்லி இவற்றை நேரில் காட்டுவார்கள். குரங்கு, யானை, புலி, கரடி இவற்றையெல்லாம் கதைகள் மூலம் வரவழைத்துக் காட்டுவார்கள். அடிக்கடி அவர்கள் சொன்ன “கஜேந்திர மோஷம்” என்னும் கதை என்னைக் கூடுதலாகச் சோறு சாப்பிட வைக்கும். மற்ற கதைகளைவிட அந்தக் கதையில்தான், நான் அதிகமாக மயங்கி விடுவேன். ஒரு பெரிய குளம், அதிலே வாயைத் திறந்து கொண்டு நிற்கும் முதலை, தண்ணீர் குடிக்க வரும் பெரிய யானை, யானையின் காலை முதலை கவ்விக் கொள்வது, யானை “ஆதிமூலமே” என்று அலறுவது, ஆகாயத்திலே சங்கு சக்கர தாரியாக மகாவிஷ்ணு நின்று கொண்டு கையை ஆட்டுவது, இந்தக் கற்பனைக் காட்சிகள் எனது பிஞ்சு உள்ளத்தில் ஆழ்ந்து பதிவு கொண்டன. நான் பல கேள்விகள் எழுப்புவேன். எனக்கு யானை மீதுதான் அதிக இரக்கம்; பாசம். பாவம்! யானை ஏனம்மா முதலையிருக்கும் குளத்திற்கு வந்தது? அந்த முதலையை யாரும் அடித்துத் துரத்தவில்லையா? யானைக்கு வேறு குளம் தண்ணீர் குடிக்கக் கிடையாதா? அந்த யானைக்கு அம்மா அப்பா இல்லையா? இவ்வாறெல்லாம் வினாக்கள் எழும். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டே, ஒரு வாய் சோற்றை உள்ளே தள்ளுவார்கள். என் அன்னை ஒரு அளவு வைத்திருந்தார். அந்த அளவுப்படி நான் சாப்பிட்டு விட்டால், கதைகள் காட்சிகள் எல்லாம் முடிந்து விடும். ஆயினும் எனக்கு மட்டும் “கஜேந்திர மோஷம்” உள்ளத்தில் திரும்பத் திரும்பக் காட்சி அளித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கதையைப் பற்றி எனது ஏழு வயதில் ஒரு முடிவு கிடைத்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.
எனது வாழ்க்கை விளக்கம் – பள்ளிக்கூட நுழைவு, பிள்ளையார் பூசை
பள்ளிக்கூட நுழைவு
1916-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தை என் தந்தையார் எதிர்பார்த்திருந்தார். அவருக்கு ஒரு சோதிட நண்பர் எதிர் வீட்டில் இருந்தார். அவரிடம் சென்று நேரம் குறித்துக் கொண்டார். எனக்கு ஒரு தொப்பி, சட்டை, துணி இவையெல்லாம் புதியதாக வாங்கி வைத்திருந்தார்கள். அவர்கள் பொருளாதார நிலையில் இவற்றையெல்லாம் எவ்வாறு வாங்கினார்களோ? அதற்கு அவர்கள் எடுத்த முயற்சி அவர்களுக்குத்தான் தெரியும். எனக்கென்ன தெரியும்? ஏழ்மையோ, கடனோ முதலோ ஏதும் எனது உள்ளத்தில் அப்போது எவ்வாறு இடம்பிடிக்கும்? கடன் என்ற ஒரு மாய விலங்கில் தன்னை மனிதன் மாட்ட வைத்துக் கொள்ளாத பருவம் அதுதானே! ஏழ்மை என்ற தாழ்வு மனப்பான்மை கூட, அப்போது ஏது? அப்பா அம்மா காட்டும் பரிவே பெரும் செல்வமாகவன்றோ குழந்தை வயதில் இருக்கின்றது? மற்றெந்தச் செல்வமும் அந்த இன்ப ஊற்றுக்கு இணையேது?
பிள்ளையார் பூசைApr2004-19b
குறித்த நேரத்தில் என்னைப் பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். நாள்தோறும் அக்கோயிலை என் தந்தையாருடன் சுற்றி வருவது வழக்கம். என் தந்தையார் இரண்டு கைகளாலும் குட்டிக் கொண்டு, கைகளை மாற்றிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட காட்சி, இன்னும் எனது உள்ளத்தில் இனிமையான நினைவாக இருக்கின்றது. நானும் குட்டிக் கொண்டேன். எனினும், நான் முதல் முதல் பள்ளிக்கூடம் போவதற்காகத் தொப்பி, புதுத் துணி, சட்டை இவற்றோடு கோயிலுக்குப் போய், அந்தப் பிள்ளையாரைப் பார்த்தபோது அன்று ஒரு புதுமையாகவே இருந்தது. பிள்ளையார் என்னை மகிழ்ச்சியோடு பார்த்து, ஆசி கூறுவது போலவே, எனது கற்பனை இருந்தது. என் தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தேன். நான் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பிள்ளையாரை வணங்கிய போது தேங்காய், பழம், சரக்கரை எல்லாம் வைத்து என் தந்தை விநாயகரை வேண்டிக் கொண்டார். அந்தச் சிறு வயதிலேயே சில துதிப்பாடல்களை எனக்குச் சொல்லி வைத்திருந்தார். மழலை மொழியில் அடிக்கடி நான் பாடுவேன். அதைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்தார்கள் எனது சிறுவயதில். யானோ இப்போதுகூட அவர்களை நினைத்தால், என் கண்களில் நீர் ததும்புகின்றது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர்கள் கடைசி வரையில் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து விடுவிக்கும் வயதும், சூழ்நிலையும் கிட்டியபோது, அவர்கள் தெய்வங்களாகி விட்டார்கள். எனது 22 வயதில் தந்தை இயற்கை எய்தினார். அன்னை எனது 35-வது வயதில் தெய்வமாகி விட்டார். அன்னை மாத்திரம் கடைசி காலத்தில், ஒரு பத்தாண்டு காலம் ஒருவாறு பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட்டு, இருக்க முடிந்தது.
இந்த இடத்தில் என் தந்தை அன்னை இருவரைப் பற்றிச் சில குறிப்புகள் கொடுக்க விரும்புகின்றேன்.
பெற்றோர் மேன்மை – 1 (Greatness of Parents -1)
இரண்டு பேரும் ஊருக்குப் பொதுத் தொண்டர்கள். எந்த வீட்டில் எவர் நோயுற்றிருந்தாலும், அங்கு என் தந்தை அடிக்கடி போய், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். நாடி பார்ப்பதில் நிபுணர். கையில் மருந்து கிடையாது. எனினும் மூலிகை மருத்துவம் அவருக்கு நன்றாகத் தெரியும். நாட்டுச் சரக்குகளைக் கொண்டே கஷாயம், கலிகம், சூரணம் தயாரித்து நோயாளிகளுக்குக் கொடுத்து வருவார். அவர் எவரிடமும் மருந்துக்காகக் காசு வாங்கியதே இல்லை. எனது அன்னை தந்தை இருவருக்குமே படிக்கத் தெரியாது. எப்படியோ என் தந்தை தமிழில் கையொப்பமிடத் தெரிந்து கொண்டார். “கூ.நா. வரதப்ப முதலியார்” என்று, அவர் கையொப்பமிடச் சுமார் ஐந்து நிமிடங்களாவது ஆகும். அவர் பெயரில் அடங்கிய பதினான்கு எழுத்துக்களும், ஒன்றைப் பார்த்து ஒன்று கூத்தாடுவது போல் இருக்கும். சிரசாசனம் தவிர மற்ற ஆசனங்களில் பல அந்த எழுத்துகளில் காட்சி அளிக்கும். அவர் கையெழுத்திடும் போது நான் இருக்க நேர்ந்தால் எனக்குச் சிரிப்பு தாங்காது. என் தந்தைக்குக் தெரியாமல் சிரிப்பேன். சில சமயம் மறைவாக ஓடிப்போய்ச் சிரிப்பைச் சமாளித்துப் பின்னர்வருவேன். அவர் கோபங்கொள்ளமாட்டாராயினும், நான் அவரிடம் வைத்திருந்த மதிப்பு அவ்வாறு.
எந் தந்தை, ஏழை என்பதுதான் ஒரு குறை. சத்தியந்தவறாதவர். பொய் பேசவே மாட்டார். ஒருவரையும் மனம் நோகப் பேசமாட்டார். பண்பாடு ஒழுக்கம் இவற்றின் உச்சத்தில், அவர் ஆயுட்காலம் வரையில் வாழ்ந்தார். தனது 63-வது வயதில் அவர் முடிவு எய்தினார்.
அவரைப் போலவேதான், என் அன்னையும் ஊர்த் தொண்டாற்றி வந்தார். ஊருக்கெல்லாம் அவர் அன்னைதான். திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் எந்த நிகழ்ச்சி ஊரில் எவர் இல்லத்தில் நடந்தாலும், என் அன்னையின் தொண்டு அங்கெல்லாம் சிறந்து விளங்கும். குழந்தை மருத்துவம், பெண்கள் மருத்துவம் இவற்றில் கைதேர்ந்தவர் எனது அன்னை. அவர் ஆயுட்காலம் வரையில் எவரிடமும் மருத்துவத்திற்குக் காசு வாங்கியதில்லை. இருவருமே சலியா உழைப்பாளிகள். இத்தகைய தியாக சீலர்களுக்கு நான் மகனாகப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன். நினைந்து நினைந்து மகிழ்சிக் கண்ணீர் பெருக்குகிறேன்.
நான் படித்த பள்ளி, கிறிஸ்துவ மிஷினைச் சேர்ந்தது. இன்னும் கூடுவாஞ்சேரிக் குளத்தின் வடகிழக்கு மூலையில், அந்தக் கட்டிடம் இருக்கிறது. எனக்கு எழுத்தறிவு தந்த அந்தத் திருக்கோயில் இன்று கிறிஸ்துவர்கள் ஆலயமாகத் திகழ்கின்றது.
நான் பள்ளிக்கூடம் செல்லும் போது என்னைக் கூடவே அழைத்துப் போய் விடுவார் என் தந்தை. வரும்போது சில நாள் அங்கு வந்து அழைத்து வருவார். எனக்குப் படிப்பில் மிகவும் விருப்பமாகவே இருந்தது. அப்போது புளியங் கொட்டைகளைக் கொடுத்து அவற்றை அடுக்கி “அ, ஆ” போடச் சொல்வார்கள். மிகவும் பொறுமையோடும் யூகத்தோடும் கொட்டைகளை அடுக்கி எழுதுவேன். என்னிடம் ஆசிரியர்களுக்கு மிகவும் பிரியம். நான் பயபக்தியோடு நடந்து கொள்வேன். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் படிப்பு உயர்வு. இவ்வாறு எட்டு வயது முடிந்தது. நான் மூன்றாவது வகுப்புப் படித்து முடித்து விட்டேன். என் தந்தைக்குப் பிறர் உதவியின்றி நெசவுத் தொழிலைச் செய்ய முடியவில்லை. எனவே, என்னை வீட்டிலேயே நிறித்திக் கொண்டார். பள்ளிப் படிப்பு மூன்றாவது வகுப்போடு முடிவு பெற்றது.
ஏழாவது வயது முதலே நான் நெசவுத் தொழிலில் சில்லரை வேலைகளில் காலை மாலை ஈடுபட்டிருந்தேன். பாவு போடுவதில் என் தந்தைக்கு உதவியாக இருந்தேன். நூல் இழைப்பதில் என் அன்னைக்கு உதவினேன். பள்ளிக்கூடம் விட்டு நின்றபின் நெசவு நெய்யக் கற்கலானேன். என் உயரம் தறி நெசவிற்குப் போதவில்லை. லுங்கி நெசவிற்குக் குழித்தறிகள் தான் பொருத்தமானது. தறிக்குழியில் இறங்கினால் தலை மாத்திரம்தான் வெளியே தெரியும். எட்டி எட்டிக் கைக்கயிறு பிடித்து இழுத்து நாடாவை ஓட்டுவேன். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் மட்டும் நெசவில் எனக்கு அனுமதி. அதுவும் நான் பழகிக் கொள்ள மிகவும் விருப்பம் காட்டியதால். மேலும் இரண்டு ஆண்டுகள் சென்றது. நன்றாக நெசவு நெய்யக் கற்றுக் கொண்டேன். அந்த வயதில்தான், நான் என் பெற்றோரின் வறுமையை உணரும் நாள் ஒன்று வந்தது. அந்த நாள், அன்று நடந்த நிகழ்ச்சி, என்னைக் கண்கலங்கி உருக வைத்தது. என் உள்ளத்தில் ஆழப் பதிந்த அந்த நிகழ்ச்சிப் பதிவுதான், என்னைப் பிற்காலத்தில் ஒரு கடமை வீரனாக மாற்றியது என்றால், அது மிகையன்று. இரவு பகலாக எனது முயற்சியை ஓங்கச் செய்து பல துறைகளில் அறிவு பெறச் செய்த உருக்கமான நிகழ்ச்சி தான் அது. அதைப் பற்றி பிற்காலத்தில் நான் எழுதிய கவியிலும் குறிப்பு இருக்கிறது.
கவி
“ஐந்து வயதில் பள்ளி சென்றேன்; எட்டு
ஆண்டில் மூன்றாம் வகுப்பு முடித்து விட்டேன்;
நொந்து வறுமை மீறிப் பருத்திப் பஞ்சு
நூல் நெசவில் எனைப் பெற்றோர் பழக்கிவைத்தார்;
இந்தத் தொழிலைச் செம்மையாகக் கற்று
ஏதோ ஓர் அளவுக்குக் கூலி பெற்றேன்;
வெந்து உள்ளம் உருகி ஏழ்மை தோன்றும்
விதம், தெய்வம், உயிர் இவற்றைப் பற்றி ஆய்ந்தேன்;
பெற்றோர் மேன்மை – 2 (Greatness of parents – 2)
எனக்கு காலையில் ஒரு தம்பிடி தோசை, சிறிது தயிர், ஒரு சிறு கட்டி வெல்லம் உணவாகக் கிடைக்கும். காலை சுமார் 9 மணிக்குக் கேழ்வரகு கூழ் கரைத்துக் கொடுப்பார்கள். அப்போது அது அமிர்தம் போல உடலுக்கும் உள்ளத்திற்கும் இனிமையாகவே இருந்தது. பகலில் சோறு சில நாட்களில் கிடைக்கும். சில நாட்களில் கூழ்தான் கிடைக்கும். மாலையில் நிச்சயமாக அரிசிச் சோறுதான்.
எனக்குப் பத்து வயதில் ஒரு நாள் பகல் 12-45 இருக்கும். நான் தறியில் நெசவு நெய்து கொண்டிருந்தேன். என் அன்னை வழக்கமாகப் பகல் 12-30-க்கு என்னைச் சாப்பிட அழைப்பார்கள். அன்று அதுவரையில் என்னைக் கூப்பிடவில்லை. நாங்கள் அப்போது ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்திருந்தோம். தறிகள் இரண்டு மேற்குப் புறம். நடுவே நாலடி உயரமுள்ள ஒரு சுவர். அதன் மறைவில் சமையல் சாப்பாடு எல்லாம்- சமையல் செய்யும் இடத்தில், என் அன்னையும் தந்தையும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என் அன்னை தனது முந்தானையை எடுத்துத் தனது கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்-நான் பார்த்து விட்டேன். என்னால் பொறுக்க முடியவில்லை. அந்த நாள் வரையில் என் அன்னை கண் கலங்கியதை யான் கண்டதே இல்லை. தறியை விட்டு எழுந்து துணியை எடுத்து உடுத்திக் கொண்டேன். நேராக என் அன்னையும் தந்தையும் இருந்த இடத்திற்கு வந்தேன். அம்மாவைப் பார்த்தேன். கண்களில் நீர் பெருக ஏனம்மா அழுகிறீர்கள். சொல்லம்மா! சொல்லம்மா! என்று, அவர்களைச் சேர்த்துக் காலைக் கட்டிக் கொண்டு வினவினேன். என் அன்னை என்னை இறுக அணைத்துக் கொண்டு “என் செல்வமே! நாங்கள் உன்னைத் தவமா தவமிருந்து பெற்றோமடா! இன்று உன் பசிக்கு ஒரு சோடுதலைக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கோவென்று கத்தி விட்டார்கள். நானும் வாய்விட்டு அழுதுவிட்டேன். என் தந்தையோ என் வலது கையைப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு அழுதுவிட்டார்.
அவர்கள் இருவரது வயிறும் ஒட்டிப் போயிருந்தது. உணவு கிட்டாமல் பட்டினி கிடந்திருந்தனர். சிறிது நேரம்தான் இவ்வாறு கழிந்தது. உடனே என்னை விடுவித்து என் தந்தையாரைப் பார்த்து “நீங்கள் சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ஒரு தகர சோடுதலையைக் கையில் எடுத்துக் கொண்டு போனார்கள். சில நிமிடங்களில் அந்த சோடுதலை நிரம்பக் கேழ்வரகு கூழோடு திரும்பி வந்தார்கள். “கண்ணா, இதைச் சாப்பிடுடா” இன்றைக்குச் சாயங்காலம் சீக்கிரமாகச் சோறாக்கி உனக்குச் சாப்பிடக் கொடுக்கிறேன்” என்றார். நான் அந்தக் கூழை உடனே குடிக்கவில்லை. நீங்கள் சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் செய்தேன். “நீங்கள் பசியோடிருக்கும் போது நான் மட்டும் எப்படியம்மா சாப்பிடுவேன்” என்றேன். எனக்கு ஆறுதல் கூறி ஒரு சிறு விழுங்கு வீதம் என் தந்தையும் அன்னையும் இருவரும் குடித்தார்கள். பின் நான் அந்தக் கூழை-என் வாழ்வில் நீங்கா நினைவாக இடம்பெற்ற அந்த ஒரு சிறிய தகர சோடுதலைக் கூழைக் குடித்தேன். பிறகு அம்மா அப்பா அருகில் உட்கார்ந்து கொண்டு, ஏன் நமக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்ற காரணத்தை வினவி, பல கேள்விகள் கேட்டேன். எனக்கு எவ்வாறு அவர்கள் வறுமையைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்? ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிச் சரிப்படுத்தினார்கள். ஆனாலும், அன்று வறுமை என்ற நிலையைப் பற்றிச் சிறிது புரிந்து கொண்டேன். இனி என் பெற்றோருக்கு வறுமை நீங்க, நான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்தேன். அதிக அளவு நெசவு நெய்தால், கூலி அதிகம் கிடைக்கும். அதைக் கொண்டு வறுமையைப் போக்கி விடலாம் என்று தெரிந்தது. அன்று முதல் இரவும் பகலாய் நெசவுத் தொழிலைச் செய்தேன். இரண்டு நாட்கள் ஒருவர் செய்யும் வேலையை ஒரே நாளில் திறமையோடு செய்து முடிக்கும் ஆற்றல் எனக்கு வந்து விட்டது. உழைத்தேன், ஓயாமல் உழைத்தேன்.
எனது முதல் ஆசான் (My First Guru)
பத்து வயது வரையில் எனக்கு வறுமை என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தெரியாது. உலகமே மகிழ்ச்சி பொங்கும் அரங்கமாக இருந்தது. முன் கட்டுரையில் எழுதப்பெற்ற ஒரு நிகழ்ச்சியினை நான் என் வாழ்வில் சந்தித்தபோது எனது மனதிலே ஒரு மாற்றம். இன்பத்தோடு துன்பம் கலந்து இருப்பதாக உலக வாழ்வை உணர்ந்தேன். வறுமையைப் போக்க ஊக்கத்தோடு உழைத்தேன். காலை 6 மணிக்குத் தறிக்குழியில் இறங்கினால், இரவு 9 மணி வரையில் தொடர்ந்து நெசவு நெய்வேன். மத்தியில் தறியில் இருந்தபடியே காலை உணவு கொள்வேன். கேழ்வரகுக் கூழ், அதை இரண்டு நிமிடங்களில் குடித்து விடுவேன். பகல் உணவு கொள்வதற்காகத் தறியை விட்டு எழுந்து வருவேன். இருபது நிமிடங்களில் சாப்பாடு ஓய்வு எல்லாம் முடிந்துவிடும். மீண்டும் நெசவு. என் அருமை அன்னையும், தந்தையும் என்னைக் கெஞ்சிச் சொல்வார்கள். “கண்ணா! அதிகமாக நெசவு நெய்யாதேடா, உடல் இளைத்துவிடும்; உன்னைப் பெற்ற அருமை, எங்களுக்குத் தானே தெரியும்” என்பார்கள். அவர்களுக்கு உருக்கமாகவும் பணிவாகவும் பதில் சொல்வேன். தறி நெய்வதில் எனக்கு மிகவும் ஆசை இருந்ததை எடுத்துக் காட்டி “அந்த ஆசை நம் குடும்பத்துக்கு நன்மைதானே அம்மா தருகிறது” என்பேன். நான் இத்தகைய பதில் சொல்லும்போது, என் அன்னை, பலதடவை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தறியில் இருந்தபடியே எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.
எனது முதல் ஆசான்
இந்த வயதில்தான் எனக்கு ஒரு குரு கிடைத்தார். எனது வயதுக்கு ஏற்ப அவர் பக்தி மார்க்கத்திலேயே எனது நினைவை ஆழ்த்தி வைத்தார். சில சமயம் சுத்த அத்வைத தத்துவம் பேசினாலும், எனக்கு அது புரியவில்லை. அவருக்கு அப்போது வயது எழுபத்தைந்து. அவர் பெயர் ஏ. பாலகிருஷ்ணன். அவருடைய நற்போதனைகள் என் சிந்தையைத் தூண்டிவிட்டன. அவர் சொற்படி ஒழுக்கத்தோடும், அடக்கத்தோடும் நடந்து வந்தேன். பஜனை செய்வதில் மிகவும் ஆர்வம் பெற்றேன். எனினும் அவர் விளக்கும் கருத்துக்களின் அடிப்படை உண்மை அறிய, எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். எனக்குப் பன்னிரெண்டு வயதிற்குள் எனது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியது. அவை
1. இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? இவற்றின் மூலமும் முடிவும் என்ன?
2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது? நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?
3. கடவுள் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?
4. ஏழ்மை ஏன்? எப்படி உண்டாயிற்று? அதைப் போக்குவது எப்படி?
இவ்வினாக்கள் தான் என் சிந்தனையை ஆட்கொண்டன. அப்போது கிடைத்த குரு, எனக்குப் பஜனைப் பாடல்கள், சதகங்கள் இவற்றைத்தான் போதித்தார். ஆயினும் எனது வினாக்களில் ஒன்றுக்குக்கூட அவரால் விடை கூற முடியவில்லை. எனினும் எனக்கு இவ்வினாக்களை ஒட்டிய விளக்கங்கள் சில கிடைத்தன. அவை:
1. கடவுளை வழிபட்டு நமது குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கடவுளே காட்சியாகி, நமக்கு அவர் நிலையை விளக்குவார்.
2. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்ய வேண்டும். அதன் மூலம் வறுமை போகும். தறி நெசவின் மூலம் வறுமை மிகுமே அன்றி, அது போகாது.
3. ஒரு ஞானகுருவை அடையவேண்டும். அவர் மூலம் உயிரைப் பற்றிய விளக்கம், அறிவைப் பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இவையே என் உள்ளொளி காட்டிய விளக்கம்.
இந்த முடிவின்படி செயல்புரியத் தொடங்கினேன். வயது பதினான்கு ஆகிவிட்டது.
vethathiribwநல்ல திருப்பம் (Great turning point)
முதலில் வறுமையிலிருந்து விடுபடவேண்டும். அதில் வெற்றி பெற நெசவுத் தொழிலை விட்டு, வேறு உத்யோகம் பார்க்க வேண்டும். அதற்கு ஆங்கிலம் படிக்க வேண்டும். இந்த முடிவில் கூடுவாஞ்சேரிப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரை அணுகி, எனக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினேன். அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் மாதம் எட்டணா சம்பளம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். அதுபோலப் பணம் கொடுத்துச் சிலர் “பிரைவேட்” படித்துக் கொண்டிருந்தார்கள். எட்டணா மாதா மாதம் யார் கொடுப்பார்கள்? அதற்கு ஒரு வழி கண்டேன். தந்தைக்குச் செலவுப் பளு ஏற்படக் கூடாது எனவும் நினைத்தேன். எனக்கு அப்போது நாள் ஒன்றுக்குத் தோசை வாங்கிச் சாப்பிடக் காலனா கொடுப்பார்கள். அதை மீதப்படுத்தினால் முப்பது நாளைக்கு 71/2 அணா கிடைக்கும். தந்தையைக் கேட்டு அரையணா வாங்கிக் கொள்ளலாம். சேர்த்து எளிதாக ஆசிரியர் சம்பளம் கொடுத்து விடலாம். இவையே என் முடிவு. என் அன்னை தந்தையார் ஒப்புதலுக்கு முனைந்தேன். வேறு பிள்ளைகளோடு சேர்ந்து கெட்டு விடுவானோ மகன் என்ற நினைவில், அவ்வளவு எளிதில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. பத்துத் தினங்களுக்குமேல் கழிந்துவிட்டன. என்னிடம் மூன்று அணா இருப்பு சேர்ந்துவிட்டது. காலையில் தோசையோடு தயிர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
அந்த நாளில் இரண்டு தம்பிடி கொடுத்தால் ஒரு பெரிய தோசை கிடைக்கும். அது என் போன்றவர்களுக்குக் காலையில் சாப்பிடப் போதும், குழந்தைகளுக்கு ஒரு தம்பிடி தோசையே போதும். அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கொட்டாங்கச்சி நிறைய ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். தோசையும் தயிரும் சேர்த்து உண்பது எனக்கு மிகவும் விருப்பமானது. ஆங்கிலம் கற்றுக்கொண்டு உத்தியோகம் பார்க்க வேண்டும் என்னும் விழைவில், காலையில் தயிரும் தோசையும் விலக்க வேண்டியவையாகிவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் காலை உணவாகிய கேழ்வரகுக் கூழைச் சாப்பிட்டு விடுவேன். படிப்பிற்குச் சம்பளம் சேர்க்க அன்றே தொடங்கி விட்டேன். மூன்றணா சேர்ந்தபின் மீண்டும் எனது அன்னையைக் கெஞ்சினேன். அவர்களுக்கு நான் படிப்பது விருப்பம்தான். ஆயினும் ஒரு சிறு குழப்பம் அவர்களுக்கு _ கிறித்தவர்கள் இல்லம் சென்று இரவில் படித்தால், ஒரு வேளை அவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிச் சாப்பிட்டு விடுவேனோ என்று சந்தேகப்பட்டார்கள். அந்த நாளில் அவ்வளவு வேறிபாடு கிறித்தவர்களுக்கும், இந்துக்களுக்குமிடையே இருந்தது. அப்படி ஏதும் தவறு செய்ய மாட்டேன் என்று உறிதி கூறினேன். பிறகு எனக்கு இரவில் படிக்க அனுமதி கிடைத்தது. அதனால் என் வேலையின் அளவு குறையாதபடி பார்க்க காலை நேரத்தில் சுமார் 5 மணக்கெல்லாம் தறியில் இறங்கி, விளக்கு வைத்து நெசவு நெய்யத் தொடங்கினேன். வேலையின் அளவைச் சரிக்கட்டிக் கொண்டேன்.
என் தந்தையார் கையினாலேயே நாடா ஓட்டும் தறி நெய்தார். நான் கயிறு இழுத்து நாடா ஓட்டும் முறையைக் கற்றுக் கொண்டேன். அவர் நெசவின் அளவைப் போல் மூன்று மடங்கு நான் நெய்து விடுவேன். நான் அதிகமாக உழைப்பதைப் பற்றி எண்ணி எண்ணி வருந்துவார்கள் என் பெற்றோர். ஆயினும் ஒரு புறம் வறுமை. அவ்வறுமைக்கு என் உழைப்பே ஈடுகட்டி வந்தது. ஓரளவு நாங்கள் போதிய உணவுகொள்ள முடிந்தது. எப்போதும் பிறர் உதவியை எவ்விதத்திலும் நாடாமல் கண்ணியமாக வாழவேண்டும் என்ற கருத்து உடையவர்கள் என் பெற்றோர்; அவ்விதமே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
பிள்ளையார் பூசை (Lord Ganesha worship)
வறுமையைப் போக்க வேண்டுமென்ற திட்டத்தின்படி ஆங்கிலம் படிக்கத் தொடங்கி விட்டேன். கடவுளைக் காண வேண்டுமே? அதற்கு இறை வழி பாட்டில் ஆழ்ந்த நிலையை செலுத்தினேன். பிள்ளையார் வணக்கம் எளிதில் எல்லா வெற்றிகளையும் அளிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் வீட்டில் பிள்ளையார் இல்லை. காரணம் அதை வைக்க தனி இடம் இல்லை. மேலும் ஒரு பிள்ளையார், மணையோடு வாங்க அக்காலத்தில் ரூபாய் இரண்டரை வேண்டியிருந்தது. அதற்கு ஒரு முடிவெடுத்தேன். கோயில் பிள்ளையாருக்கே பூசை செய்வது என்று முடிவு கட்டினேன். கூடுவாஞ்சேரி கிராமத்தில் பிள்ளையார் கோயில் சிறியது. அதன் சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டேன். காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் பிள்ளையார் சிலைக்குத் தண்ணீர் ஊற்றித் தேய்த்து கழுவுவேன். அதற்கெனத் துணி இரண்டு துண்டுகள் இருந்தன. தினம் ஒன்றை அவிழ்த்துத் தோய்த்துக் காய வைப்பேன். காய்ந்த துண்டை உடுத்துவேன்.
ஒருநாள் தண்ணீர் ஊற்றும்போது பிள்ளையார் சிலையைப் பார்த்தேன். அதில் செதில் செதிலாக அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அது பிள்ளையாருக்கு வலிக்கும்போல் தோன்றியது. கதவைச் சாத்திவிட்டு ஒரு கொட்டாங்கச்சி ஓடு கொண்டு பருக் பருக்கென்று சுரண்டிக் கொண்டிருந்தேன். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், கதவைத் தட்டித் திறக்கச் செய்தார். “நீ என்ன செய்கிறாய்” எனக் கேட்டார். நான் உண்மையைச் சொன்னேன். அவர் என் மேல் சீறி விழுந்தார். “கொட்டாங்கச்சி எடுத்து பிள்ளையாரை சுரண்டுகிறாயே, அறிவு கெட்டவனே” என்று கத்தினார். எனக்கு அவர் கோபித்ததில் ஒன்றும் வருத்தமில்லை. பிள்ளையாருக்கு அபசாரம் செய்து விட்டானே என்று, எனது பிஞ்சு உள்ளம் மிகவும் வருந்தியது.
மார்கழி மாதம் 4 மணிக்குப் பிள்ளையார் பூசை செய்தேன். குளத்து நீரில் நான் குளிக்கும்போது குளிர் என்னால் தாங்க முடியவில்லை. இதுபோலத்தான் பிள்ளையாருக்கும் குளிரும் என்று பரிதாபப் பட்டேன். அன்று வந்து என் தந்தையிடம் வினவினேன். “அப்பா! பிள்ளையாருக்கு மார்கழி மாதத்தில் வெந்நீரில் முழுக்காட்டினால் என்ன? என்றேன். புன்சிரிப்போடு என்னைப் பார்த்தார். “அப்படி செய்யக்கூடாதப்பா! நீ நினைப்பது போலப் பிள்ளையாருக்குக் குளிராது” என்று எனக்குச் சமாதானம் கூறினார். சிந்தனையோடு பல வினாக்களை எழுப்பும் எனக்குக் கற்சிலைக்குக் குளிர் ஏது? என்று தெரியவில்லை.
உணவு மாற்றம் (Change in food style)
கிராமங்களில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் கோயில் உள்ள ஊர்களுக்குச் சென்று இரண்டு மூன்று தினங்கள் அங்கேயே உல்லாசமாகச் சமைத்து உண்டு, உற்சவம் பார்த்து விட்டுத் திரும்புவார்கள். என் பெற்றோரும் ஆண்டு தோறும் திருப்போருர், மகாபலிபுரம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் போவார்கள். அதுபோல அவ்வாண்டும் என்னையும், என் தம்பியையும், அழைத்துக் கொண்டு, திருப்போரூர் சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் இருந்து, பிறகு மகாபலிபுரம் சென்றார்கள். எங்கள் குடும்பத்தில் மாமிச உணவு கொள்ளும் பழக்கம் இருந்தது. எனக்குச் சிறுவயது முதல் அவ்வளவு பிடிப்பதில்லை. ஆயினும் அடியோடு நிறுத்திவிடவில்லை. மகாபலிபுரத்தில் ஒரு திருவிழா, புத்தகக் கடை இருந்தது. அதில் ஒருசிறு புத்தகம் குறிப்பாக என் கண்ணில் பட்டது. அது “புலால் உணவின் கேடுகள்” என்ற தலைப்போடு இருந்தது. அதை ஒன்றே காலணா கொடுத்து வாங்கினேன். உடனே அதைப் படிக்கத் தொடங்கினேன். அதில் என் உள்ளத்தை நெகிழ வைக்கும் சில கவிகள் இருந்தன. அவற்றில் ஒன்று,
அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்தி
இம்மானிட ரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்
அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்
பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவதே!
என்ற கவி.
மாபெருந் தவசியாயினும், ஒரு ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும்போது வெளியிடும் “அம்மா”வெனும் ஓசையைக் கேட்டு விட்டால் அதை அக்கொடுந் துன்பத்திலிருந்து விடுவிக்காமல், அவ்விடத்தை விட்டு அகன்று போனால் அவருக்குப் பொய்ம்மா நரகம் கிட்டும். அவ்வாறாயின் அக்கொலைச் செயல் மூலம் கிடைத்த புலாலை உண்டவர்கள் எத்தகைய பாவத்துக்கு உள்ளாவார்கள்? என்பதே இதன் கருத்து. இதைப் படித்தேன். எனது சிந்தனை விரைவாக ஓடியது. தெய்வ நினைவு எழுந்தது. நான் அதுவரையில் தெரியாமல் மாமிச உணவு உண்டு ஏற்றுக்கொண்ட பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினேன். கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அன்று முதல் புலால் உண்ணா நோன்பை ஏற்றேன். என் அன்னையாரும், தந்தையாரும் எனது மனமாற்றத்திற்கு உளம் நிறைந்த ஆதரவு தந்தனர். பிறகு என் வாழ்நாளில் பரஞ்சோதி என்பவரோடு தொடர்பு கொண்ட காலத்தில் சில சமயம் உணவில் குழப்பங்கள் ஏற்பட்டன. எனினும் நான் மீண்டும் திருந்திக் கொண்டு உறுதியோடு புலால் தவிர்த்த உணவில் நிலைத்து விட்டேன்.
பதினாறு வயது தொடங்கி நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் காண முனைந்தேன். பண்டிகை நாட்களில் படையல் போடுவது எதற்காக? இந்தக் கேள்விக்கு என் பெற்றோரால் சரியானபடி விடையளிக்க முடியவில்லை. கடவுள்தான் நமக்கு வாழ்வளிக்கிறார். அதனால் அவருக்கு நாம் உணவு படைக்கிறோம் என்பார்கள். எனக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. உடல் உள்ளவர்களுக்குத்தான் பசி உண்டு, உணவு தேவை. கடவுளுக்கு உடலில்லை. அவர் அரூபம். ஆகவே அவருக்கு உணவு தேவையில்லை. ஆயினும் கடவுளை நினைந்து நாம் உணவு கொள்ள வேண்டும். இதுவே படையலுக்கு அருத்தமாக இருக்கும் என்று எனது விளக்கத்தை என் பெற்றோருக்குச் சொன்னேன். அவர்கள் உள்ளப் பூரிப்பெய்தினர். நீ சொல்வதுதான் சரியப்பா என்று ஒத்துக் கொண்டார்கள். எனக்கு அது ஒரு பெரிய வெற்றியாகவே இருந்தது. ஊரில் சனிக்கிழமைகளில் பலர் கூடிப் பஜனை பாடிக் கொண்டு தெருக்களை சுற்றுவது வழக்கம். அடிக்கடி தாயுமானவர் பாடல்களில் ஒன்றான “அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தப் பாட்டில் எனது உள்ளம் முழுவதும் லயித்து விடும். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் எனும் தெளிவு. இந்தப் பாடலே எனது உள்ளுணர்வைத் தூண்டி, தத்துவத்திலே தெளிவை அளித்து, இறைநிலையை யான் உணர உதவியது. தைமாதம் பொங்கல் தினம்! அன்று ஒரு அடை சுட்டுச் சூரியனுக்குப் படைத்தனர். அதில் உப்பில்லை. இது ஏன் என்று என் அன்னையைக் கேட்டேன். சூரிய பகவானுக்குச் செய்யும் இந்த அடையில் உப்புப் போடக்கூடாது. போட்டால் தவறு என்று கூறினார்கள். அவர்கள் கருத்துத் தவறு என்று எடுத்துக் காட்டினேன். நமது குடும்பத்தில் எப்போதோ ஒரு மாமியார் மறதியாக உப்புப் போடாமல் அடை சுட்டுவிட்டிருப்பாள். படையல் ஆனபின், அடையில் உப்பில்லையே என்று மருமகள் கேட்டிருப்பாள். சூரியனுக்குப் படைக்கும் அடையில் உப்புப் போடக்கூடாது என்று கூறி, தன் தவற்றை மாமியார் மறைத்திருப்பாள். பிற்காலத்தில் மருமகளும் அவ்வாறே உப்புப் போடாமல் அடை செய்திருக்கலாம். இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டிருக்கும் என்று கூறினேன். என் அன்னையும் தந்தையும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்த காட்சியை, நான் எவ்வாறு விளக்குவேன். அதன் பிறகு நடந்த பொங்கல் விழாக்களில் உப்பிட்டே அடை சுட்டுப் படைத்தனர்.
எனது பதினெட்டு வயது வரையில், நான் இரவுப் பள்ளி சென்று ஆங்கிலம், தமிழ், கணக்கு இவற்றைக் கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் ஆண்டுதோறும் மாறினார்கள். மாதச் சம்பளம் ரூ.11/2 வரையில் உயர்ந்தது. அப்போது படிப்பு நான்காவது பாரத்திற்குச் (IV Form) சமம் என்று எனது ஆசிரியர் கூறினார். இந்த நிலைமையில்தான் நான் நெசவுத் தொழிலை விட்டு வேறு ஏதேனும் வேலை தேடிப் பெற வேண்டும் என விழைந்தேன். இந்த விருப்பத்தை என் அக்காளிடம் தெரிவித்தேன். கற்பகம் எனும் பெயருடைய மூத்த அக்காளும், அவர் கணவர் சித்த மருத்துவர் ஷண்முக முதலியாரும், மயிலாப்பூரில் இருந்தார்கள். அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் எனக்கு ஏதேனும் வேலை தேடித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் பற்றி நான் எழுதி உள்ள கவிகள் வருமாறு:
“எந்த ஒரு மனிதனுமிவ் வுலகமீது
இன்ப துன்ப அனுபவத்தின் இயல்பென் னென்று
சிந்திக்கும் ஆற்றல் அவர்க்குயரும் போது
சிவன் சீவன் இருநிலைகள் இருப்பியக்கம்
இந்த உலகில் மக்களிடையே காணும்
ஏழ்மை நோய்மரண இயல்பு அறியவென்றே
உந்தப்படுவர்; எனக்கும் ஏழ்மை, தெய்வம்,
உயிர்பற்றி அறிய அவா உண்டாயிற்று.”
“இம்மூன்று கேள்விகளை எழுப்பிக்கொண்டு
இரவு பகலாய்ச் சிந்தித்து அறிந்திடாமல்
நிம்மதியை இழந்தறிஞர் மன்றம் நோக்கி
நீங்கள் சொல்லுங்கள் எனக் கேட்ட புத்தர்
செம்மையுள நேர்பதிலைப் பெறாததாலே
சிறந்த அரசப் பதவி உதறித்தள்ளி
எம்முறையில் துன்புற்றார்? எனக்கு மட்டும்
எவ்விதத்தில் பதில் விளங்கும் எளிதில் அந்நாள்.”
“ஓலைக்குடிசை வாழ்க்கை, உணவோ, சொற்பம்,
உள்ளத்தில் முன்னேற வென்ற வேகம்,
ஆலை, வாணிபம் அரசியல் தொழில் செய்தற்கு
ஆசையினால் ஆங்கிலம் படிக்கலானேன்;
வேலை செய்தேன் பகல் நேரம்; இரவில் சென்று
விரும்பித்தமிழ் ஆங்கிலம் பயின்று வந்தேன்;
காலையிலே எனக்கென்று பெற்றோர் தந்த
காலனா, ஆசான் சம்பள மாயிற்று.”
“படிக்க எழுதத் தமிழோ டாங்கிலத் தைப்
பதினெட்டு வயதிற்குள் கற்றுக் கொண்டேன்;
பிடிக்கவில்லை தொடர்ந்து செய்ய நெசவுவேலை;
போய்விட்டேன் சென்னைக்கு வேலைதேடி
நொடித்தமனம் ஊக்கமுற எனக்கோர் வேலை
நுங்கம்பாக்கத்தில் அஞ்சல் அகத்தில்கிட்ட,
வடித்த கண்ணீ ரதனைத் துடைத்து, என்றன்
வாழ்வில் முன்னேறக் கடும் உழப்பை ஏற்றேன்.”
எனது வாழ்க்கை விளக்கம்
ஒருவர் வாழ்க்கை வரலாற்றைப் பிறர் எழுதும்போது அவர் கையாளும் முறை வேறு. உள்ளத்திலெழும் பக்தியால், அன்பால் வரவாற்றுக்குரியவர் புகழ் ஓங்க வேண்டுமெனும் நோக்கத்தோடுதான், எழுதுவார். சில இடங்களில் அவர் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், படிப்பவர்களுக்குப் படிப்பினையாக அமையவும் கூடும். வரலாற்றுக்குரியவர் ஆற்றிய தவறுகளோ, இழிவான செயல்களோ, அவர் பிறருக்குப் புரிந்த கொடுமைகளோ, மற்றும் அவர் சிறுமை விளக்கும் நிகழ்ச்சிகளோ, எழுத்திற்கு வராது. அப்படி எடுத்துக் காட்டி எழுதுவதும் முறையன்று. ஆனால் ஒருவர் தானே தனது வரலாற்றை எழுதும்போது, எல்லா உண்மைகளையும் எழுதியே ஆகவேண்டும். பெருமைக்கோ சிறுமைக்கோ அங்கே இடமில்லை. இத்தகைய வரலாறுகளைப் படிக்கும் போது, அது படிப்போர் சிந்தனையை உயர்த்தும் இலக்கியமாகிவிடும். அறிவிற்கு வளம்தரும் வலிவூட்டும் மருந்தாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் பல அமைந்த உலக இயல்பை வெளிப்படுத்தும் சிக்கல்களால் பின்னப்பட்ட சம்பவங்கள் நிறைந்திருக்கும். இத்தகைய வரலாறுகளைப் படிப்பவர்களுக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி தோன்றும். ஆட்சிச் சட்டம், மதச் சட்டம் இரண்டால் அமைக்கப் பெற்ற சமுதாயத்தில் கட்டுப்பட்டு வாழும் மனிதனுக்கு வாழ்வில் சிக்கல்கள் பல தோன்றுவது இயல்பு. சிந்தனையாளர்கள், அறிஞர்கள், மெய்ஞ்ஞானிகள் இவர்களால் எழுதப் பெற்ற சொந்த வாழ்க்கை வரலாறுகள், வாழ்வின் சிக்கல்களை அவிழ்க்க வழிகாட்டிகளாக இருக்கின்றன. எந்த ஒரு பேரறிஞரும் அவர் குழந்தையாக இருந்த காலமுண்டு. கற்பனையில் மயங்கி வாழ்ந்த காலமுண்டு. கற்பனைக்கும் தெளிவிற்கும் இடையே, பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே சிக்கித் தவித்த காலமுண்டு. அந்த அந்த அறிவு நிலைகளிலும் சிலர் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம். அவர் அறிவிலே முழுமை பெற்றபின், அவரே வெளியிட்ட கருத்துக்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கு வேறுபட்டிருக்கலாம். இவையெல்லாம் வாழ்வின் இயல்பைக் காட்டுகின்றன. அவர் முன்னேற்றமடைந்த வழிகளைக் காட்டுகின்றன. எனது வரலாற்றிலும் வாழ்க்கைச் சிக்கல்கள் பல அமைந்துள்ளன. ஏற்றத்தாழ்வுகள், பெருமை, இழிவு, நன்மை, வன்மை எல்லாம் இருக்கும். என் வரலாற்றை நானே எழுதப் புகுந்ததால், அத்தனையும் இடம்பெறும். அன்பர்கள் மனம் தளராமல் சிந்தனையோடு படித்துப் பயன்பெற வேண்டும்.
எனது வயது பதினெட்டு வரையில்தான் நான் எனது பெற்றோரோடு இருந்தேன். அதற்குள் அவர்களைக் கேள்விகள் மூலமும், விளக்கங்கள் மூலமும் திணறச் செய்துவிட்டேன். வினா எழுப்புவேன் ஏதோ பதில் சொல்வார்கள். எனக்கு நிறைவு தந்தால் ஒப்புக் கொள்வேன். இல்லையேல் அது தவறானது என்று காரணத்தோடு எடுத்துக் காட்டுவேன். என் விளக்கத்தைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்துப் போவார்கள். அவர்கள் ஏழ்மை நினைவு, வாழ்க்கைத் துன்பங்கள் எல்லாம் என் பேச்சுக்களாலேயே மறந்து போவதாகக் கூறுவார்கள். எனக்கு உணவு ஊட்டுவதற்காகச் சொல்லி வந்த கஜேந்திர மோட்சக் கதையில் களிப்புக் கவர்ச்சி கொண்டிருந்தேன். எனக்கு ஏழு வயதில் அதே கதையில் ஒரு சந்தேகம் பிறந்தது. கூடுவாஞ்சேரியில், பத்தாவது நாள் மரணச் சடங்கு ஒருவருக்கு நடந்தது. அதை மோட்ச தீபம் என்று சொன்னார்கள். மோட்சம் என்றால் என்ன என்று, என் அன்னையை வினவினேன். இறந்து விடுகிறார்களே அதைத்தான் மோட்சம் என்று சொல்லுகிறோம் என்று பதில் அளித்தார்கள். என் சிந்தனை விரைவாக ஓடியது. “அம்மா கஜேந்திர மோட்சத்தில் வரும் யானையும் செத்துத்தான் போனது” என்றேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. முக்தி என்றால் என்ன வென்றேன். முக்தி மோட்சம் எல்லாம் ஒன்றுதான் என்றார்கள். அப்போது முதலைக்கு முக்தி, யானைக்கு மோட்சம் என்று நீங்கள் சொன்னவை, இரண்டுமே சண்டையிலே செத்துப்போய்விட்டன என்றுதானே விளங்குகின்றது? என்றேன். என் அன்னை கூர்ந்த அறிவு படைத்தவர். எனது மனநிலையைப் புரிந்து கொண்டார். “எனக்குப் பெரியவர்கள் சொன்ன கதையை அப்படியே உனக்குச் சொன்னேன் மற்றவை எனக்குத் தெரியாதப்பா” என்றார்கள். பிறகு எனது தந்தை வந்தார். நான் விடவில்லை. அப்பாவிடமும் இதே பேச்சு. அவரும் அன்னையைப் போன்றே பதில் அளித்தார். நானும் என் கருத்தையே எடுத்துச் சொன்னேன். என் தந்தைக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவரால் தாங்க முடியவில்லை. எனது அன்னையை நோக்கினார். “என்ன! இவன் நமக்கு ஒரு முருகனாகவே பிறந்திருக்கிறான்! பார்த்தாயா? குழந்தை வயதிலேயே பிரணவத்திற்கு அப்பனையே விளக்கம் கேட்டுப் பின் அவனே தந்தைக்குப் பிரணவ இரகசியத்தை விவரித்துக் கூறினான் முருகன். தந்தையையே முருகன் வியப்பில் ஆழ்த்தினான். அதுபோல்தான் இருக்கிறது இவன் நமக்கு விளக்கம் கூறுவது என்றார். இருவர் உள்ளங்களும் பெற்ற மகிழ்ச்சியினை, யானே அறிவேன். அப்போதை விட, 62 ஆண்டுகட்குப் பின் கூட, இப்போதும் அக்காட்சியை நினைந்து இன்புறுகிறேன்.
இந்த முறையில் பல கற்பனைக் கதைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். என் மனோ நிலைமை தெரிந்த என் தந்தை ஒரு மாற்று வழி கண்டார். எனக்குச் சதகங்களைச் சொல்லிக் கொடுத்தார். படிக்கத் தெரியாத அவர், அறப்பளீசுர சதகம், தண்டலையார் சதகம், குமரேச சதகம் இவையெல்லாம் எப்படியோ மனப்பாடம் செய்து வைத்திருந்தார். முதலில் அவற்றைப் புத்தகமில்லாமலே சொல்லிக் கொடுத்தார். பிறகு எனக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் செய்தார். கொண்டாடும் பண்டிகைகளுக்கு விளக்கம் கேட்பேன். அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்வார்கள். சில சமயம் எனக்கு மனநிறைவு ஏற்படாது. ஆயினும் அவர்கள் பக்தி முறையில் தெய்வ வழிபாடு நடத்தும்போது மன உருக்கத்தோடு அவரகள் உடனிருந்து தெய்வ வணக்கம் செய்து வந்தேன். சிந்தனை, தொழில், “பிரைவேட் படிப்பு” இவ்வாறு என் காலம் ஓடியது. பதினெட்டாவது வயது முடிவில் சென்னை சென்றுவிட்டேன். அங்கு எனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தேன்.
என் மைத்துனர் எனக்காக வேலை தேடி அலைந்தார். சுமார் ஒரு மாத காலத்திற்குள் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயங்களுக்கு வெளியிலேயே அதற்கென அமைந்த கிளப்புகளில் பணம் கட்டும் முறை இருந்தது. அத்தகைய கிளப்புகள் இருந்தன. மவுண்ட் ரோட்டில் “ராயல் ரேஸிங் கிளப்” என்ற ஒரு நிறுவனத்தில் நான் அமர்ந்தேன். மாதச் சம்பளம் ரூபாய் ஐம்பது. வாரத்திற்கு இரண்டு ரேஸ்கள் நடக்கும். ஒன்று புதன் கிழமை, மற்றது சனிக்கிழமை. குதிரைப் பந்தய தினத்தின் முன் நாள், மாலை 3 மணிக்குப் போய் 7 மணி வரையில் வேலை செய்ய வேண்டும். பந்தய தினத்தில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையில் வேலை. மறுநாள் காலை 8 மணி முதல் பகல் 1மணி வரையில் வேலை. வேலை செய்யும் தினங்களில் அரை நாட்களுக்கு ஒரு ரூபாயும், முழு நாட்களுக்கு ஒன்றரை ரூபாயும், சிற்றுண்டி அலவன்ஸ் என்று கொஞ்சம் காசும் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் நான் படித்த படிப்பிற்கு மாதம் ரூ.75-க்கு குறையாமல் கிடைத்தது. அதிகம் எதிர்பாராத உயர்ந்த ஊதியம். எனது பெற்றோருக்கு ரூபாய் 10 செலவுக்குக் கொடுப்பேன். ரூபாய் 10 சீட்டுக் கட்டி வந்தேன். மிகுதியை அப்படியே எனது அக்காள் கணவரிடம் கொடுத்து விடுவேன்.
என் அறிவுக் கண்ணைத் திறந்த மகான்
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் எனக்கு ஒரு மகான், இல்லற ஞானி, ஆசானாகக் கிடைத்தார். என் பெற்றோர் செய்த தவப் பயன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பெயர் வைத்திய பூபதி எஸ். கிருஷ்ணாராவ். அவர் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். தத்துவ ஞானத்தில் ஒரு மேதை. அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடீஸ் ரோடில், மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். அவர் முதலில் மயிலாப்பூர் நடுத் தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு என்னும் தாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்தார். மாலை வேளைகளில் மாத்திரம் மந்தைவெளிக் கடைத்தெரு மருந்தகத்தில் இருப்பார். ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்தேன். அவர் வேறு யாருடனோ தத்துவ ஞானத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். நான் கடை ஓரத்தில் நின்று கொண்டு கூர்மையாக அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து “நீ யாரப்பா, இங்கு ஏன் நிற்கிறாய்” என்றார். “ஐயா, நான் கூடுவாஞ்சேரியில் இருந்தவன். இங்கு வைத்தியர் ஷண்முக முதலியார் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவர் எனது அக்காள் கணவர். எனக்கு ரேஸ் கிளப்பில் வேலை” என்றேன். “உள்ளே வா அப்பா, உட்கார்” என்று கனிவோடு கூறினார். அந்த மொழி, என் பெற்றோரை நினைவூட்டியது. உட்சென்று உட்கார்ந்தேன். அவர்கள் பேச்சை முடித்து விட்டு, என்னை நோக்கி, “நீ விரும்பினால், உனக்கு ஓய்விருக்கும் போதெல்லாம் இங்கு வந்து கொண்டிரு அப்பா” என்றார். அப்படியே செய்வதாகக் கூறி வீடு சென்றேன். பிறகு வாரத்தில் நான்கு நாட்களிலும் அவரைச் சந்திப்பேன். எனது ஓய்வு நேரம் எல்லாம் அவர் மருந்தகங்களிலும் வீட்டிலும் இருந்து வந்தேன். பல இரவுகளில் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது அவருக்கு வயது 65. எனக்கு ஆயுர்வேத மருத்துவத்தை முறையாகச் சொல்லிக் கொடுத்தார். சித்த மருத்துவம் இடையிடையே இடம்பெறும். தத்துவ விளக்கம் நன்றாகப் போதித்தார். சரக சம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம் மொழி பெயர்த்துப் போதித்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையையும் போதித்தார்.
இரண்டு ஆண்டுகளில் நான் மருத்துவத்தில் தேர்ந்த அறிவைப் பெற்றுவிட்டேன். தத்துவ அறிவிலும் தெளிவு பெற்றேன். தியானத்திலும் நல்ல பற்று உண்டாயிற்று. அவருக்கு என்னால் எந்த உதவியுமில்லை. ஆயினும் அவர் மகனைப் போல் என்னை ஏற்று, ஓர் சிறந்த மனிதனாக்கினார். அவரைப் போற்றுகிறேன். வணங்குகிறேன்.
——————————————————————————–
இயற்கை நியதி
மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்
மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்
நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்
சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்
குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.
பெண்ணின் பெருமை
பெண் வயிற்றி லுருவாகிப் பின்னு மந்த
பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து; மேலும்
பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு
பெண்மைக்கே பெருமதிப்பு தந்து உள்ளோம்
பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்
பெருமைகுன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்
பெண்மைக்கு நமது கடன் ஆற்றவாரீர்
பெருந்திரளாய் கூடி ஒரு முடிவு செய்வோம்.
வளமாக வாழ வழி வகுப்போம்
வாழவேண்டும் என்றெண்ணி உலக மீது
வந்ததில்லை எனினும் நாம் பிறந்துவிட்டோம
வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
வாழ்ந்தோர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி
வாழவென்ற உரிமை எல்லார்க்கும் உண்டு
வாழ்வோர்க்கும் சாதகமாய் வாாழும் மட்டும்
வாழ உள்ளோர் அனைவருமே ஒன்று கூடி
வகுத்திடுவோம் ஒரு திட்டம் வளமாய் வாழ.
எனது வாழ்க்கை விளக்கம் – 4
வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் அவர்கள், எனக்குப் போதனை செய்த ஆயுர்வேத பாடங்கள், என் உள்ளத்தில் தெளிவாக இடம் பெற்றன. இதோடு என் அக்காள் கணவரும், ஆயுர்வேத சித்த மருந்துகளைக் கையாளும் ஒரு மருத்துவராக இருந்தார். நேர்முறையில் பலவகையான சூர்ணம், பஸ்பம், எண்ணை, லேகியம் இவற்றைச் செய்யும் திறனும் எனக்கு உணடாயிற்று. என் மருத்துவ திறமையில் மகிழ்ச்சி பெற்ற வைத்யபூபதி அவர்கள் என்னை ஒரு பட்டம் பெற்ற மருத்துவனாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்தில் “அகில இந்திய ஆயுர்வேத மகா மண்டல் அண்டு வித்யாபீடம்” என்ற ஒரு நிறுவனத்தின் கிளை, சென்னையில் இருந்தது. அதன் தலைமை நிறுவனத்தில் இந்திய நாட்டு ஆயுர்வேத மருத்துவ மேதைகள் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஆங்காங்கு ஆயுர்வேதக் கல்லூரிகள் நடத்தியும், பரிட்சைகள் வைத்து வெற்றி பெறுவோர்க்கு நற்சான்றிதழ் வழங்கியும், வந்தனர். அந்த மருத்துவச் சான்றிதழுக்கு நல்லதோர் மதிப்பு அக்காலத்தில் இருந்தது. வடமொழியில் பரீட்சை எழுதுவோர்களுக்கு வைத்திய விசாரதா என்ற பட்டம் கிடைக்கும். அதே பரீட்சையை மற்ற எந்த மொழியில் எழுதினாலும் “வைத்திய பிஷக்” என்ற பட்டம் கிடைக்கும், தமிழ் நாட்டில் அந்தக் காலத்தில் கேப்டன் டாக்டர் சீனுவாசமூர்த்தி அவர்களும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், அகில இந்திய ஆயுர்வேத மகாமண்டலில் முக்கிய பொறுப்பேற்றிருந்தனர். என்னை எனது ஆசான் அந்தப் பரீட்சை எழுதும்படி தூண்டினார். அவ்வாறே எழுதினேன். மொத்தம் ஒன்பது பிரிவுகள். முதல் ஆண்டில் ஆறு பிரிவுகளை நல்ல மார்க்குகளுடன் பாஸ் செய்துவிட்டேன். மறு ஆண்டு நான் பரீட்சைக்குப் போகவில்லை. மூன்றாவது ஆண்டு பரீட்சை எழுதி விடுபட்ட மூன்று பிரிவுகளையும் பாஸ் செய்தேன். எனது வெற்றியைக் கண்டு, எனது அன்பு ஆசான் கொண்ட மகிழ்ச்சியை, என்னைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொண்டிருக்க முடியாுது. வளமாக வாழ ஒரு நல்லதோர் வழியை நாடி நிற்கும் ஒரு இளைஞனுக்கு, ஏற்றதோர் வழிகாட்டிவிட்ட நிறைவை, அவர் பேச்சிலும் பார்வையிலும் புன்முறுவலிலும் என்னால் காண முடிந்தது. நான்கு ஆண்டுகள் அதற்கென அமைந்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் அந்தப் பரீட்சையில் தேற முடியும். அவ்வளவு பாடங்களும், நேர்முறைப் பயிற்சிகளும் உடையன.
எனது வாழ்க்கை விளக்கம் – 4
இந்த இடைக்காலத்தில், குதிரைப் பந்தயத்தை ஒட்டி, ரேஸ் திடல் தவிர மற்ற இடங்களில் பணம் வாங்கக் கூடாது என்ற ஒரு சட்டம், நகர எல்லை வரையில் அமுலாகியது. டோல் கேட்டைத் தாண்டிச் சைதாப்பேட்டையில் பல ரேஸ் கிளப்புகள் நடத்தப் பெற்றன. அங்கும் நான் வேலை செய்து வந்தேன். மீண்டும் சில மாதங்களில் மாகாணம் முழுவதும், எல்லா இடங்களுக்கும் குதிரைப் பந்தயச் சூதாட்டத் தடைச் சட்டம் விரிவடைந்தது. எனக்கு அந்த வேலை அதோடு நின்று போயிற்று. எனக்கு வேலை தேடும் பொறுப்பு, என் அக்காள் கணவருக்கு மீண்டும் ஏற்பட்டு விட்டது. வயிற்றுப் புண்ணுக்காக ஒருவர் என் மாமாவிடம் மருந்து சாப்பிட்டு வந்தார். அவர் பெயர் நடேச ஐயர். அவர் போஸ்டல் ஆடிட் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரிடம் என் மாமா என் நிலையை விளக்கிச் சொன்னார். என்னை உற்று நோக்கிய அவருக்கு, எனக்கு ஏதேனும் நன்மைபுரிய வேண்டுமென அழுத்தமான ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதனை வெளிப்படையாகவே அவர் சொன்னார். அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை ஒரு இடத்திற்கு அழைத்துப் போய் வேலைக்குத் தக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதே போன்று அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை, என்னை அவர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் பெயர் இராஜகோபால் நாயுடு. எனக்குத் தக்கதோர் வேலை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மிகவும் அக்கரையோடு நடேச ஐயர் அவர்கள் கூறினார்கள். என்னை மறுநாள் அவர் காரியாலயத்திற்கு அழைத்து வரும்படி கூறினார்.
மறுநாள் காலை 10-30 மணிக்கு, என்னை நடேச ஐயர் அவர்கள் அழைத்துக்கொண்டு, ஒரு காரியாலயத்தில் நுழைந்தார். அது மவுண்ட் ரோட்டை அடுத்த உட்ஸ் ரோடில் இருந்தது. எனக்கு ஒரே வியப்பு. அதற்கு முன் சென்ற இரண்டு ஆண்டுகளாகப் பலதடவை அந்த வழியே மவுண்ட்ரோடிலிருந்து மயிலாப்பூருக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நூற்றுக் கணக்கில் உத்யோகஸ்தர்கள் உட்ச்செல்வதையும், வெளிவருவதையும் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி ஒரு காரியலாயத்தில் எனக்கு ஒரு வேலை கிடைத்தால், எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நான் எண்ணியது உண்டு. இவ்வாறு பல தடவை எண்ணியிருக்கிறேன். எந்தக் காரியாலயத்தில் எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென எண்ணியிருந்தேனோ, அதே இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றதை நினைந்தே வியப்படைந்தேன்.
ஒரு மனு எழுதிக் கொடுத்தார் நடேச ஐயர். கையொப்பமிட்டேன். ரிக்கார்டு செக் ஷன் தலைவர் இராஜகோபால் நாயுடு, தலைமைக் குமாஸ்தாவிடம், ஏதோ சிறிது நேரம் பேசினார். மனுவில் சிபாரிசு எழுதிக் கையொப்பமிட்டுக் காரியாலயத் தலைவருக்கு (dy. Accountant General, posts & Telegraphs) அனுப்பி வைத்தார். பத்து நிமிடங்களில், ஒரு அட்டையில் கட்டி அனுப்பிய அந்த மனு, எனக்கு வேலை அளிப்பதை ஒப்புக்கொண்ட அடையாளக் கையெழுத்தோடு திரும்பி வந்தது. எனக்கு வேலை என்ன? சம்பளம் என்ன? என்றெல்லாம் எந்த விவரமும் தெரியாது. பகல் ஒரு மணிக்கு மேல் எனக்கு ஒரு வேலை கொடுத்தார்கள். வெளியிலிருந்து வரும் பதிவு செய்த கடிதங்களைத் திறக்க வேண்டும். பதிவு நெம்பர், அனுப்பியவர்கள் முகவரி கடிதத்தின் நெம்பர், தேதி இவற்றை அதற்கென வைத்திருந்த பதிவுப் புத்தகத்தில் எழுத வேண்டும். அன்று மாலை வரையில் இதையே செய்தேன். மணி ஐந்தாயிற்று. நடேச ஐயர் அவர்கள் செக் ஷனுக்கு வந்தார். என்னை அழைத்தக்கொண்டு மயிலாப்பூருக்கு என் மாமாவிடம் வந்தார்.
“நான் கோரியபடி குறிப்பிட்ட வேலை தம்பிக்கு கிடைக்கவில்லை. ஒரு கடைநிலை ஊழியர் வேலையே காலியிருந்தது. தற்காலத்தில் அந்த வேலையில் அமர்த்திக்கொண்டார்கள். அண்மையில் நாம் குறித்த வேலை காலியாகும் போது அதைத் தருவதாக உறுதியளித்தார்கள்” என்று எனது மாமாவிடம் நடேச ஐயர் அவர்கள் தெரிவித்தார். எனக்குச் சிறிது வருத்தமாகவே இருந்தது. சம்பளம் ரூ.15 தான். அவ்வேலை வேண்டாமென்று மறுத்தால், எனது மாமாவுக்கும் நடேச ஐயருக்கும் என் மீது வருத்தமுண்டாகும் என எண்ணினேன். அதை ஒப்புக்கொள்வதாகச் சம்மதம் தெரிவித்தேன். அன்று முதல் மிக்க பணிவோட காரியாலயத்தில் வேலை செய்தேன். அவர்கள் வாக்களித்தபடி, எனக்கு மேல் வேலை காலியானவுடன் கொடுத்து நல்ல முறையில் நடத்தினார்கள். அந்தக் காலத்தில் ரூ.23 தான் சம்பளமாக எனது வேலைக்குக் கிடைத்தது.
இந்தச் சம்பளம் போதவில்லை. சில நாட்கள் பற்றாக்குறையை, எவ்வாறு சரிபடுத்திக் கொள்வது என்றே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் நாம் நாள்தோறும் தறிவேலை செய்யக்கூடாது? அதன் மூலம் மாதம் பத்து ரூாபாய் சம்பாதிக்க முடியுமே என்ற எண்ணமே அது. அந்த எண்ணத்தைச் செயலில் கொண்டுவந்தேன். மாமா வீட்டிற்குச் சுமார் நான்கு பர்லாங்கு தூரத்தில், “துலுக்கச்சி தோட்டம்” என்ற ஒரு நெசவுப் பேட்டை இருந்தது. அதற்கு இப்போது பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். அங்கு சென்று கூலிக்கு ஒரு தறி அமர்த்திக்கொண்டேன். அங்கும் ஒரு குழப்பம். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நெய்பவருக்குத் தறி கொடுத்தால், எங்களுக்கு வாடகை கட்டாது. மாதம் தறி ஒன்றுக்கு வாடகை ஒரு ரூபாய் ஆகிறது, என்று தறிசொந்தக்காரர் கூறினார். அந்த வாடகையை நான் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு, தறியை அமர்த்திக் கொண்டேன். எனக்குத் தறி கொடுத்து உதவிய மாஸ்டர் வீவர் திரு. தங்கவேலு முதலியார் அவர்கள். அவர் ஒரு தீவிரமான திராவிடக் கழக அன்பர். வேலை, கூலி, தவிர, மற்ற அரசியல் சமூக நிலைமைகளைப் பற்றி நாம் ஒன்றுமே அவரிடம் பேசிக்கொள்வது கிடையாது. ஆன்மீகத் துறையில் ஆழ்ந்த நான் அதை அடியோடு வெறுக்கும் ஒரு அன்பரிடத்தில் இவ்வாறு இரண்டாண்டுகள் தொடர்ந்து சிறு பிணக்குமின்றி வேலை செய்துவந்தேன். காலை 6 மணி முதல் 9 மணி வரையில் தறி நெசவு, பின்னர் குளியல், சாப்பாடு எல்லாம், பதினோரு மணிக்குள் காரியாலயம். மீண்டும் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரையில் விளக்கு வைத்துத் தறி நெசவு நெய்வது, இவ்வாறு மாதம் ரூபாய் பத்து சம்பாதித்து, செலவுக்கு வேண்டிய பொருள் ஈட்டி வந்தேன். அதன் பிறகு ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்தது. காலையில் மாத்திரம் வேலை. ரூபாய் ஏழு சம்பளம். உடல் உழைப்பு ஓரளவு குறைந்தது.
எனது வாழ்க்கை விளக்கம் – 4
எனது வயது இருபத்திரண்டு ஆயிற்று. அப்போது ஒரு மறக்கமுடியாத சம்பவம் நிகழ்ந்தது. என் அக்காள் வீட்டுக்கு எதிர் வீட்டில் பத்தாவது படித்து வந்த மாணவன் பெயர் நாராயணசாமி. அவன் எனக்கு உயிர்த்தோழனாக இருந்தான். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். மாலை வேளைகளில் நாங்கள் மற்றும் சில மாணவர்களோடு கடற்கரைக்குச் செல்வோம். மந்தைவெளியிலிருந்து நான்கு பர்லாங்கு தூாரம் தான் கடற்கரை. வெயிற்காலத்தில் நாள்தோறும் கடலில் இறங்கிக் குளித்துவிட்டு மலை ஏழு மணிக்குள் வீட்டுக்கு வருவோம். குறிப்பிட்ட நாள் நானும் நாராயணசாமியும் மாத்திரம், கடலில் இறங்கிக் குளித்தோம். மற்ற மாணவர்கள் கரையில் உட்கார்ந்திருந்தனர். சுமார் பதினைந்து நிமிடங்கள் சென்றன. நாராயணா போதும் வா என்று அவனை அழைத்தேன். அன்று அலைகள் உயரமாக எழும்பி வந்தன. ஒவ்வொரு அலையும் ஒரு ஆள் உயரத்தில் எங்களைத் தூக்கிப்பின் தாழ்த்தியது இயற்கை ஊஞ்சல்போல் இருந்தது. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டியது. நான் கூப்பிட்டபோது அருகே ஒரு அலை உயரமாக வந்தது. அதைப் பார்த்து “This is the last wave. We will enjoy it. இதுதான் கடைசி அலை, இதை ரசித்து விட்டுச் செல்லலாம்” என்றான். அதற்குள் அந்தப் பேரலை எங்கள் இருவரையும் மிகவும் உயரத்தில் தூக்கிவிட்டது. மீண்டும் அவ்வலை தனியும்போது நாங்கள் சில கெஜ தூரம் கடலுக்குள் சென்று விட்டோம். காலில் தரை தட்டவில்லை. மிதந்து நீந்தினோம். ஒன்றும் முடியவில்லை. ஏதோ ஒரு வலியாக நாம் ஒரு பத்தடி தூரம் கரைப் பக்கம் வந்தேன். காலில் தரை தட்டியது. எனினும் ஏதோ ஒரு சுழல் இருப்பதாக உணர்ந்தேன். சமாளித்துக்கொண்டு விரைவாகக் கரையேறி விட்டேன். நாராயணசாமி தவித்துக் கொண்டிருக்கிறான். நான் நண்பர்களிடம் நாராயணன் இருக்கும் நெருக்கடி நிலையைக் கூறி, உடனே மீனவர் யாரையேனும் அழைத்து வரும்படி சொல்லி விட்டு, கரையில் வைத்திருந்த எனது துணியையும் நாராயணன் துணியையும் முடிபோட்டு நீளக்கயிறு போலாக்கிக்கொண்டு, மீண்டும் கடலில் இறங்கினேன். என்னால் நிலைத்து நிற்க முடிந்த ஆழம் வரையில் சென்று, துணியை வீசினேன். ஒரு பத்தடி தூரமே எட்டவில்ல. அவன் கைகளால் துணியைப் பிடிக்க முயன்றான். நான் மேலும் சில அடி தூரம் கடலுக்குள் சென்றேன். என்ன சோதனை? மீண்டும் நான் அதை சுழலில் சிக்கிக் கொண்டேன். முழுமுயற்சியோடு நீந்தினேன். ஒரு நிமிட நேரத்தில் கால் தரையைத் தொடும் இடத்திற்கு வந்துவிட்டேன். திரும்பி நாராயணனைப் பார்த்தேன். அப்படியே முழுகி விட்டான். அவன் கை ஐந்து விரல்கள் மட்டும் சிறிது நேரம் மேலே தெரிந்தது. பிறகு அந்தக் கையும் தெரியவில்லை. எனக்குத் தாங்கொணாத் துயரம். என் அருமை நண்பன், உயிர்த்தோழன் வேலை நேரம் போக மற்ற நேரத்தை என்னோடு கழித்து வந்த தோழன் கடலில் முழுகிவிட்டான். நான் மாத்திரம் வாழ வேண்டுமா? ஏன் அவனோடு மூழ்கி விட்டால் என்ன? என்ற துடிப்பு எழுந்தது. “ஐயோ நாராயணா! என்னை விட்டுப் பிரிந்து விட்டாயே?” என்று, உரக்க கூவினேன். உடனே என் அன்னை நினைவும் தந்தையார் நினைவும் வந்தது. கடல் ஆழம் பாய வேண்டுமென்ற விரைவு குறைந்தது. அழுது கொண்டே திரும்பிப் பார்த்தேன். அதற்குள் மீனவர் இருவரை அழைத்துக் கொண்டு நண்பர்கள் வந்தனர். நான் அவன் மூழ்கிய இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டினேன். மீனவர்கள் மூழ்கித் தேடினார்கள். ஆள் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் சென்றது. மாலை 7.30-க்கு வீடு திரும்பினோம். வழியிலே சென்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு, நாராயணன் துணிகளை அவர்கள் வீட்டில் கொடுத்து, நாங்கள் எல்லோரும் தாங்கொணாத் துயரத்தோடு நடந்ததைச் சொன்னோம், நாராயணனின் அருமை அக்காள் கதறிய கதறல், இன்றைக்கு நினைத்தாலும் எனது உள்ளத்தை உருக்கிறது. ஐந்து மணிக்குக் கடற்கரைக்குச் சென்றவன், 7.30-க்கு இறந்துவிட்டான் என்ற செய்தி வந்தால், உடன் பிறந்தவளுக்கு எப்படி இருக்கும். மறுநாள் சென்னைத் துறைமுகம் அருகே அவன் உடல் கண்டு பிடிக்கப் பெற்றது.
எனது வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத சோக நிகழ்ச்சி, நண்பனை இழந்த வருத்தம் என்னை நீண்ட நாட்கள் வாட்டியது. அவ்வப்போது என்னை நானே தேற்றிக்கொள்வேன். அவன் வாழ்க்கைத் துயரங்கள் எல்லாவற்றையும் தாண்டிச் சென்று விட்டான். அதிலிருந்து வருந்திக் கொண்டிருக்கும் நான், அவனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்கும் ஒருநாள் அத்தகைய பேறு கிட்டத்தானே போகிறது. இந்தச் சிந்தனையில் என்னை தேற்றிக் கொண்டு மற்ற கடமைகளைச் செய்யத் தொடர்ந்தேன்.
மூன்றுவித வறுமை
பண்டங்கள் உடல் வெப்ப தட்பம் காக்க
பசிதீர்க்க அவசியமே மனிதர்கட்கு
பண்டங்கள் இல்லாமை வறுமை மேலும்
பலபண்டம் அனுபவித்தும்; பழக்கத்தாலே
பண்டங்கள் தேவை மிகுந்ததனால் பாரில்
பலர் வறுமைக் குள்ளானார், அறிவின் தாழ்வால்
பண்டங்கள் தமை அளவுமுறை யில்லாமல்
பதுக்குவதால் வேறு வறுமை கண்டோம்.
ஒழுக்கம் அறம் நீதி
இயற்கை துன்பங்கள் எனும் வெப்ப தட்ப
ஏற்றங்கள் பசி உடலின் கழிவு உந்தல்
முயற்சியால் காலா காலத்தில் தீர்க்க
முடையற்ற வாற்ப்புதான் சுதந்திரம் ஆம்.
செயற்கையில் ஒருவர் பிறர் சுதந்திரத்தை
சீர்குலையச் செய்யாத முறையில் வாழும்
பயிற்சியும் நல்நடத்தையும் ஒன்றிணைந்த
பண்பாடே ஒழுக்கம், அறம் நீதியாகும்.
நோன்பு
பிறர் செயலில் வாழ்க்கையினில் குறுக்கிட்டேதன்
பெருமையினைத் தன்முனைப்பை வளர்க்க வேண்டாம்
பிறர் ஏழ்மை எளிமையிலே வாழ்ந்தபோதும்
பேராற்றல் மனஅலைக்கு உண்டுஉண்டு
பிறரஉள்ளம் வருத்தச் செய்துலகில் வாழும்
பேதைமனம் பெற்றவர்க்கு அமைதி கிட்டா
பிறர்மகிழத் தான்மகிழ்ந்து சலிப்பில்லாத
பேரின்ப வாழ்வடையும் நோன்பை ஏற்போம்.
என் வயது இருபத்திரண்டுக்குப் பிறகு, எனது வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்ப்பட்டன. பொருளாதாரத் துறையில் உயர வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், தத்துவத்துறையில் உயிரின் நிலை என்ன? தெய்வம் எவ்வாறு உளது? என்று அறிந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், என் அறிவை ஆட்க்கொண்டன. எப்போதுமே சிந்தனைதான். முயற்சிதான் பொருள் துறையை உயர்த்துமென்பதில் அசைவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆராய்ந்து கொண்டேயிருந்தால், கடவுளையும் கண்டுவிடலாம் என்ற ஒரு திண்ணமான எண்ணமும் எனக்கிருந்தது.
போஸ்டல் ஆடிட் ஆபிஸில் கிடைத்த வேலை எனக்குச் சிறிதுகூடச் சம்மதமில்லை. எனினும் அந்த வேலையையும் விட்டு விட்டு என்ன செய்வது? வேறு வேலை கிடைத்தால் பின்னர் அதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தொடர்ந்து வேலை செய்து வந்தேன். ரூாபாய் பதினைந்து என் வேலைக்குச் சம்பளம். தறி நெசவில் மாதம் சுமார் பத்து ரூாபாய் கிடைக்கும். மொத்தம் கூட்டினால் ரூாபாய் இருபத்தைந்து, அந்தக் காலத்தில் என் தேவைக்குப் போதும். என் உணவுக்கும், பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும், அத்தொகை போதுமானதாக இருந்தது. எனினும் எதிர்கால முன்னேற்றம் எப்படி? மேலும் காலையிலும் மாலையிலும் நான்கு பர்லாங்கு தூரம் சென்று, தறி நெய்துவிட்டு வருவதென்பது, எனக்குத் தாங்கொணாத் துன்பமாக இருந்தது. முதலில் தறி நெசவிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இந்த நினைவில் மிக அழுத்தமாக இருந்தபோது, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பகுதி நேெர வேலை கிடைத்தது. இரத்தினம் என்னும் பெயருடைய ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். என்னிடம் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியன். காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் பத்து, நெசவுத் தொழிலைவிட சிறிது சுலமாக இருந்தது. எனினும், முன்னேற்றம் எவ்வாறு?
எனது பொருள் துறை வளர்ச்சியைப் பற்றி, ஒருநாள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எண்ணம் தோன்றியது. “ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் தெரிந்திருக்கும் நான், ஏன் மருத்துவம் செய்யக் கூடாது?” இந்தத் துறை எனக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி தரும் என்று நினைத்தேன். முதலில் எவ்வாறு தொடங்குவது? என்ற சிந்தனை. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தேன். பல் பொடியும், தாம்பூல மாத்திரையையும் செய்து விற்பது என்று முடிவு செய்தேன். அப்படியே தாம்பூல மாத்திரையைத் தயார் செய்தேன். அதில் கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூ, இவையெல்லாம் இருக்கும். ஒரு உயர்ந்த முறை அது. எனது ஆசான் வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் செய்முறை அது. ஒரு புட்டி நூறு மாத்திரைகள் விலை நாலு அணா. போஸ்டல் ஆடிட் ஆபிசிலேயே, அதை விற்கத் தொடங்கினேன். சிறுகச் சிறுக விற்பனை அதிகமாயிற்று. ஒரு முறை செய்தால் ரூபாய் பத்து செலவாகும். வரவு ரூபாய் நாற்பது. ஒரு மாதத்தில் விற்றுவிடும். இதோடு பல்பொடியும் செய்தேன். “சிகாமணி நாயுருவி பல்பொடி” என்பது அதன் பெயர். இரண்டு விற்பனைகளும் சேர்ந்து, மாதம் ஐம்பது வருவாய் அளித்தது. எனது நம்பிக்கை வலுப்பெற்றது. பொருள் துறையில் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்ற ஒரு எண்ணமும் உறுதியும் எனக்கு உண்டாகிவிட்டன.
இருபத்துமூன்றில் எனக்குத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர்கள் முனைந்தனர். எனது அக்காள் மகளையே எனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி, என் மாமாவை என் தந்தையார் கேட்டார். எனது மாமாவுக்குத் தனது மகளை ஒரு செல்வ வளமிக்க ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். எனக்கு என் அக்காள் மகளையே மணக்க வேண்டுமென்ற விருப்பம். என் மாமாவின் முடிவு கண்டு என் பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலாமா என்று, என்னை வினவினார்கள். குழந்தை வயது முதலே என்னோடு பழகி என் உள்ளத்தில் நீங்கா நினைவு பெற்றபின், வயது வந்த பிறகும் அவளையே மணக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு, வேறு எந்தப் பெண்ணையும் மணக்க விருப்பமில்லை. திருமணப் பேச்சு நின்று விட்டது.
சுமார் ஆறு மாதங்கள் சென்று விட்டன, இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு பேரிடி. என் தந்தைக்கு காய்ச்சல் கண்டு மிகவும் அபாய நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்குப் போய் என் தந்தைக்கு வேண்டிய கடமைகளைச் செய்யலாம் என்று இருந்தேன். மறுநாள் காலையே, என் தந்தை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. செய்தியைக் கேட்ட இடத்திலேயே, அப்பா என்று கூவிக் கதறிக் கதறி அழுதேன். எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். என்மீது பரிதாபம் கொண்ட அவர், என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியும் அவரும் என்னைத் தேற்றினார்கள். அவரைப் பார்த்து என் அப்பாவை நான் இழந்துவிட்டேனே என்று மீண்டும் ஒரு முறைக் கதறினேன். “அப்பா! வேதாத்திரி, கவலைப்படாதேடா! உனக்கு நான் தந்தையாக இருந்து ஆகவேண்டிய அனைத்தும் செய்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு நீ மூன்றாவது பிள்ளையாக இரு அப்பா” என்று உள்ளக் குழைவோடு ஆறுதல் கூறினார்கள்.
பிறகு ஊருக்குச் சென்று என் தந்தைக்கு இறுதிக் கடன் ஆற்றினேன். பிரிவாற்றாமை என்ற அனுபவம், எனக்கு அது தான் முதல் தடவை. மீண்டும் மயிலாப்பூருக்கு வந்து எனது கடமைகளை ஆற்றத் தொடங்கினேன். தாம்பூல மாத்திரை, பல்பொடி விற்பனை எனக்குப் போதிய பணம் அளித்ததால் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன்.
எனது அக்காள் வீட்டு பக்கத்து வீட்டில் சொக்கலிங்க கிராமணி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் என்னை அழைத்து தனது இரண்டு மகன்களுக்கும் பிரைவேட் பாடம் சொல்லிக் கொடுக்கும்படியும் மாதம் ரூபாய் ஏழு தருவதாகவும் கூறினார். சிறிது தயங்கிப் பின் ஒத்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் சென்றன. ஒருநாள் அவர் என்னை நோக்கி “ஏன் திருமணம் செய்துகொள்ளத் தாமதம்” என்று வினவினார். “எனக்கு போதிய பணம் இல்லை” என்று பதிலளித்தேன். நான் ஒரு சீட்டுக் கட்டி வந்தேன். ரூபாய் நூறுதான் அதன் மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு என் திட்டப்படி ரூாபாய் இருநூறு வேண்டும், இந்த நிலைமைகளை விளக்கிச் சொன்னேன். வட்டி இல்லாமல் நூறு எனக்கு கடனாகக் கொடுப்பதாகவும் உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் ஊக்கமளித்தார்.
இந்தப் பேச்சுக்கள் அனைத்தையும் எதிர் வீட்டு அப்பாவிடம் சொன்னேன். உடனே அவரும் அவர் மனைவியும் வந்து, என் மாமாவைப் பெண் கேட்டார்கள். உடனே பதில் தரவில்லை. அவர்களும் விடவில்லை. எப்படியோ ஒருவாறு நான் விரும்பியவளையே எனக்கு மணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள், பணமும் தயார் செய்துவிட்டேன்.
எனது வாழ்க்கை விளக்கம் – 5
என் வயது இருபத்திரண்டுக்குப் பிறகு, எனது வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்ப்பட்டன. பொருளாதாரத் துறையில் உயர வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், தத்துவத்துறையில் உயிரின் நிலை என்ன? தெய்வம் எவ்வாறு உளது? என்று அறிந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், என் அறிவை ஆட்க்கொண்டன. எப்போதுமே சிந்தனைதான். முயற்சிதான் பொருள் துறையை உயர்த்துமென்பதில் அசைவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆராய்ந்து கொண்டேயிருந்தால், கடவுளையும் கண்டுவிடலாம் என்ற ஒரு திண்ணமான எண்ணமும் எனக்கிருந்தது.
போஸ்டல் ஆடிட் ஆபிஸில் கிடைத்த வேலை எனக்குச் சிறிதுகூடச் சம்மதமில்லை. எனினும் அந்த வேலையையும் விட்டு விட்டு என்ன செய்வது? வேறு வேலை கிடைத்தால் பின்னர் அதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தொடர்ந்து வேலை செய்து வந்தேன். ரூாபாய் பதினைந்து என் வேலைக்குச் சம்பளம். தறி நெசவில் மாதம் சுமார் பத்து ரூாபாய் கிடைக்கும். மொத்தம் கூட்டினால் ரூாபாய் இருபத்தைந்து, அந்தக் காலத்தில் என் தேவைக்குப் போதும். என் உணவுக்கும், பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும், அத்தொகை போதுமானதாக இருந்தது. எனினும் எதிர்கால முன்னேற்றம் எப்படி? மேலும் காலையிலும் மாலையிலும் நான்கு பர்லாங்கு தூரம் சென்று, தறி நெய்துவிட்டு வருவதென்பது, எனக்குத் தாங்கொணாத் துன்பமாக இருந்தது. முதலில் தறி நெசவிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இந்த நினைவில் மிக அழுத்தமாக இருந்தபோது, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பகுதி நேெர வேலை கிடைத்தது. இரத்தினம் என்னும் பெயருடைய ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். என்னிடம் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியன். காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் பத்து, நெசவுத் தொழிலைவிட சிறிது சுலமாக இருந்தது. எனினும், முன்னேற்றம் எவ்வாறு?
எனது பொருள் துறை வளர்ச்சியைப் பற்றி, ஒருநாள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எண்ணம் தோன்றியது. “ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் தெரிந்திருக்கும் நான், ஏன் மருத்துவம் செய்யக் கூடாது?” இந்தத் துறை எனக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி தரும் என்று நினைத்தேன். முதலில் எவ்வாறு தொடங்குவது? என்ற சிந்தனை. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தேன். பல் பொடியும், தாம்பூல மாத்திரையையும் செய்து விற்பது என்று முடிவு செய்தேன். அப்படியே தாம்பூல மாத்திரையைத் தயார் செய்தேன். அதில் கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூ, இவையெல்லாம் இருக்கும். ஒரு உயர்ந்த முறை அது. எனது ஆசான் வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் செய்முறை அது. ஒரு புட்டி நூறு மாத்திரைகள் விலை நாலு அணா. போஸ்டல் ஆடிட் ஆபிசிலேயே, அதை விற்கத் தொடங்கினேன். சிறுகச் சிறுக விற்பனை அதிகமாயிற்று. ஒரு முறை செய்தால் ரூபாய் பத்து செலவாகும். வரவு ரூபாய் நாற்பது. ஒரு மாதத்தில் விற்றுவிடும். இதோடு பல்பொடியும் செய்தேன். “சிகாமணி நாயுருவி பல்பொடி” என்பது அதன் பெயர். இரண்டு விற்பனைகளும் சேர்ந்து, மாதம் ஐம்பது வருவாய் அளித்தது. எனது நம்பிக்கை வலுப்பெற்றது. பொருள் துறையில் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்ற ஒரு எண்ணமும் உறுதியும் எனக்கு உண்டாகிவிட்டன.
இருபத்துமூன்றில் எனக்குத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர்கள் முனைந்தனர். எனது அக்காள் மகளையே எனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி, என் மாமாவை என் தந்தையார் கேட்டார். எனது மாமாவுக்குத் தனது மகளை ஒரு செல்வ வளமிக்க ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். எனக்கு என் அக்காள் மகளையே மணக்க வேண்டுமென்ற விருப்பம். என் மாமாவின் முடிவு கண்டு என் பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலாமா என்று, என்னை வினவினார்கள். குழந்தை வயது முதலே என்னோடு பழகி என் உள்ளத்தில் நீங்கா நினைவு பெற்றபின், வயது வந்த பிறகும் அவளையே மணக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு, வேறு எந்தப் பெண்ணையும் மணக்க விருப்பமில்லை. திருமணப் பேச்சு நின்று விட்டது.
சுமார் ஆறு மாதங்கள் சென்று விட்டன, இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு பேரிடி. என் தந்தைக்கு காய்ச்சல் கண்டு மிகவும் அபாய நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்குப் போய் என் தந்தைக்கு வேண்டிய கடமைகளைச் செய்யலாம் என்று இருந்தேன். மறுநாள் காலையே, என் தந்தை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. செய்தியைக் கேட்ட இடத்திலேயே, அப்பா என்று கூவிக் கதறிக் கதறி அழுதேன். எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். என்மீது பரிதாபம் கொண்ட அவர், என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியும் அவரும் என்னைத் தேற்றினார்கள். அவரைப் பார்த்து என் அப்பாவை நான் இழந்துவிட்டேனே என்று மீண்டும் ஒரு முறைக் கதறினேன். “அப்பா! வேதாத்திரி, கவலைப்படாதேடா! உனக்கு நான் தந்தையாக இருந்து ஆகவேண்டிய அனைத்தும் செய்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு நீ மூன்றாவது பிள்ளையாக இரு அப்பா” என்று உள்ளக் குழைவோடு ஆறுதல் கூறினார்கள்.
பிறகு ஊருக்குச் சென்று என் தந்தைக்கு இறுதிக் கடன் ஆற்றினேன். பிரிவாற்றாமை என்ற அனுபவம், எனக்கு அது தான் முதல் தடவை. மீண்டும் மயிலாப்பூருக்கு வந்து எனது கடமைகளை ஆற்றத் தொடங்கினேன். தாம்பூல மாத்திரை, பல்பொடி விற்பனை எனக்குப் போதிய பணம் அளித்ததால் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன்.
எனது அக்காள் வீட்டு பக்கத்து வீட்டில் சொக்கலிங்க கிராமணி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் என்னை அழைத்து தனது இரண்டு மகன்களுக்கும் பிரைவேட் பாடம் சொல்லிக் கொடுக்கும்படியும் மாதம் ரூபாய் ஏழு தருவதாகவும் கூறினார். சிறிது தயங்கிப் பின் ஒத்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் சென்றன. ஒருநாள் அவர் என்னை நோக்கி “ஏன் திருமணம் செய்துகொள்ளத் தாமதம்” என்று வினவினார். “எனக்கு போதிய பணம் இல்லை” என்று பதிலளித்தேன். நான் ஒரு சீட்டுக் கட்டி வந்தேன். ரூபாய் நூறுதான் அதன் மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு என் திட்டப்படி ரூாபாய் இருநூறு வேண்டும், இந்த நிலைமைகளை விளக்கிச் சொன்னேன். வட்டி இல்லாமல் நூறு எனக்கு கடனாகக் கொடுப்பதாகவும் உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் ஊக்கமளித்தார்.
இந்தப் பேச்சுக்கள் அனைத்தையும் எதிர் வீட்டு அப்பாவிடம் சொன்னேன். உடனே அவரும் அவர் மனைவியும் வந்து, என் மாமாவைப் பெண் கேட்டார்கள். உடனே பதில் தரவில்லை. அவர்களும் விடவில்லை. எப்படியோ ஒருவாறு நான் விரும்பியவளையே எனக்கு மணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள், பணமும் தயார் செய்துவிட்டேன்.
மற்றுமொரு திருப்பம்
ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
Vethathiri1
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.
பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்
பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்
பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்
புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்
பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,
பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்
பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்
பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.
பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்று
சகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்
மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழே
மாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டு
வினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கி
வேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்ட
இனியேது பொருளாதாரத்தில் எங்கும்
ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.
முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழ
உலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?
உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கி
ஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?
உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடி
உருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?
உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கி
ஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
ஒழுக்கம், உழைப்பு, சிந்தனை, உயர்ந்தோர்களிடம் மதிப்பு இவற்றை மூலதனமாக வைத்தே எனது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள, இடைவிடா முயற்சியை மேற் கொண்டேன். எனினும் எனக்குப் போதிய அளவு நிறைவு கிட்டவில்லை. அடுத்தடுத்துச் சிக்கல்கள் ஏதேனும் உருவாகும். அதைச் சமாளித்து வெற்றி பெறுவதற்குள் மீண்டும் வேறு சிக்கல் கிளம்பும். மனித வாழ்வே சிக்கலுடையதுதான். அறிவாளி, மூடன், செல்வந்தன், ஏழை, வலியவன், எளியவன், படித்தவன், படிக்காதவன், இளைஞன், முதியவன், இல்லறத்தான், துறவறத்தான், ஆண்பெண் எவரென்றாலும் என்ன? வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒன்று அல்லது பல சிக்கல்களுக்குள்ளாகித் தவித்துக் கொண்டு தான், வாழ்வை நடத்துகின்றனர், நடத்தவேண்டும். சமுதாயச் சூழ்நிலை அமைப்புதான் வாழ்க்கைச் சிக்கலுக்கு முதல் காரணம். அந்தச் சமுதாய அமைப்பு என்ற வலுவுள்ள சக்கரத்தின் சுழலில், ஒவ்வொரு மனிதனும் அவன் பொறுப்புணர்ச்சியின் அளவிற்கு அமுக்கப்பெற்றுத் தவித்துக்கொண்டே வாழ்ந்துவருகின்றான். நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிக்கலைக் களைந்து வாழ்வில் முன்னேற்ற மடைந்து, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை அடைய வேண்டுமென நான் விரும்புனேன். சமுதாயச் சூாழ்நிலை சறுக்கு மரம் போல் என்னைக் கீழ்தள்ளும். எனினும் எக்காலத்திலும் முயற்சியை நான் தளரவிட்டதில்லை. எனக்கு ஒரு முடிவு உள்ளத்தில் அமைந்திருந்தது. “நாம் வெற்றியை நாடிப் பாடுபடுகிறோம். முறையாக முயன்றால் கட்டாயம் அது கிடைக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் கால நீளக் கணக்கு உண்டு. இடைக் காலத்தில் வெற்றி கிட்டவில்லையே என்று நினைத்தால், அது தோல்வியாகத் தோன்றும், எனவே, வெற்றி கிட்டும் வரை முயற்சி, உழைப்பு, சிந்தனை, ஒழுக்கம் இவற்றைக் கொண்டு பாடுபட வேண்டும்” என்ற முடிவு என்னிடம் அசைக்க முடியாததாக இருந்தது.
எனது திருமணம் நடந்து எட்டு மாதங்களில் எனது தம்பிக்குக் குடல் இறக்கநோய் கண்டுவிட்டது. அவனால் தறி நெய்ய முடியவில்லை. குடும்பம் பெருகி விட்டது. பொருளாதாரத்தில் அப்போதைய வாழ்விற்குப் பற்றாக்குறை அதிகமில்லை என்றாலும், முன்னேற முடியாத சறுக்கல் இருந்தது. எனது தம்பி நோய் வாய்ப்பட்டது, குடும்பப் பெருக்கம், இவை என் வாழ்விலும் பெரும்பாரமாகித் தவிர்க்க முடியாத சிக்கலாகி விட்டது. என் செய்வது? கடும் உழைப்பை ஏற்றேன், கடமைகள் ஆற்றினேன். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கழிந்தன. என் வாழ்வில் தோன்றிய அத்தனைத் துன்பங்களையும் எளிதில் களையவும், எழும் சிக்கல்களைச் சமாளித்து வெற்றி பெறவும், என் வாழ்க்கைத் துணைவி யமைந்தது எனது பெற்றோர்கள் செய்த தவம் என்றே, அடிக்கடி நினைந்து மகிழ்வேன். என்றாலும் சாதாரண மனிதன் சபலம் கொள்வது போல் அடிக்கடி நானும் கொள்வதுண்டு. என் மனைவியின் நிலைமை பற்றித்தான் அந்தச் சபலம். அவள் நல்ல செல்வத்தில் வளர்ந்தவள். அவள் தந்தை குதிரைப் பந்தயத்திற்குப் போகும் பழக்கம் உள்ளவர். அதிலிருந்து அவரை எவராலும் திருப்ப முடியவில்லை. பொருள் அழிந்து வறுமை எய்தியதோடு, மருத்துவத் துறையில் அவர் போதிய நினைவைச் செலுத்த முடியாமல் வருவாயும் குறைந்தது. அந்தக் காலத்தில் தான் அவள் பூப்பு அடைந்தாள். அதன்பின் மூன்று ஆண்டுகள் சென்றுதான் திருமணம் நடந்தது. வறுமையிலேயே திருமணம். வறுமையில் வாழ்பவர்கள் ஓரளவு அதைத் தாங்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள். செல்வத்தில் இருந்து வறுமைக்கு வந்தால், அதுதான் தாங்கொணா நிலைைமை. திருமணத்திற்குப் பின்னும் அவளுக்கு என்னிடமும் அதே நிலை நீடிக்கிறதே என்று வருந்தினேன். ஆயினும் அவள் சோர்வோ சலிப்போ குறையோ வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இரவு பகலாக என்னுடன் பொருள் துறையை வளமாக்குவதில் நன்கு உழைத்தாள். எளிய வாழ்க்கை நடத்தினோம். ஆயினும் எனக்கு அவள் பெருநிதி. அவளுக்கு நான் ஒரு ஒப்பற்ற நிதி. இந்த மனோநிலையில் நாங்கள் எல்லாம் உடையவர்களாக எல்லாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நன்கு ஆற்றி வாழ்ந்து வந்தோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
எனக்கு வயது இருபத்தேழு. அப்போது ஒரு முடிவு எனக்கு ஏற்ப்பட்டது. “கூடுவாஞ்சேரிக்கு குடிபோய்விட வேண்டும். கிராம வாழ்வில் செலவு குறையும். சீசன் டிக்கெட் அப்போது மாதம் ஒன்பது ரூபாய்தான். அதற்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து இரண்டு படி பால் வாங்கி வந்து சென்னையில் எந்த ஓட்டலிலாகிலும் கொடுத்துவிட்டால், ரூ. 15/- கிடைக்கும். அதனால் இரயில் வண்டிச் செலவும் தள்ளிப் போகும்” என்று ஒரு நினைவு தோன்றியது. போஸ்டல் ஆடிட் ஆபிஸில் ஒரு கான்டீன் இருந்தது. இதன் செயலாளரை அணுகி, என் விருப்பத்தைத் தெரிவித்து நாள்தோறும் இரண்டுபடி பால் என்னிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி கேட்டேன். அவர் அன்போடும் மகிழ்ச்சியோடும் எனக்கு அத்தகைய உதவியைச் செய்வதாகக் கூறினார்.
நான் மட்டும் ஒரு மாதத்திற்கு இரயில் பிரயாண சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். கூடுவாஞ்சேரியில் இருந்த எனது மற்றொரு அக்காள் வீட்டில் இரவில் தங்கி காலையில் 2 படி பால் எடுத்துக் கொண்டு எழும்பூர் வந்து அங்கிருந்து, ஒரு மைல் தொலைவில் உள்ள ஆபிசுக்கு நடந்து வருவேன். என் கணக்குப்படி நாட்தோறும் எட்டு அணா கிடைத்தது. பால் நன்றாக இருப்பதையும், கூடுவாஞ்சேரி பாலில் போட்ட காப்பி மிகவும் சுவையாக இருப்பதையும் கண்டு, மேலும் நான்கு படி ஆர்டர்கொடுத்தார்கள். அடுத்த மாதம் எனது குடும்பத்தைக் கூடுவாஞ்சேரிக்கே அழைத்து வந்து விட்டேன். மாதம் ரூ. 11/2க்கு ஒரு முழு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பலவிடங்களில் ஓட்டைகள் தான் என்றாலும், அதுவே எங்களுக்கு அச்சமயம் மேலாக இருந்தது. மாதம் ரூ. 50/- வீதம் பால் விற்பதில் கிடைத்தது.
அப்போது எனக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்பு ஒன்று ஆபீசில் உருவாகியது. கார்டு பையில்கள் (Guard Files) வெளியிலிருந்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் கழிவுத்தாள்களைக் கொண்டே பைல்கள் தயாரித்துக் கொள்ள ஒரு திட்டம் உருவாகியது. அதன்மூலம் நல்ல வருவாய் கிடைக்குமென்றும், அதை நானே கான்ட்ராக்ட் எடுத்துக் கொள்வது நல்லதென்றும், என்னிடம் அன்பு கொண்ட ஆபீஸ் சூப்பரின்டென்டென்ட் ஒருவர் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை! ‘புக்பைண்டிங் திறமை பெற்றவன்’ என்று ஒரு அத்தாட்சித் தாள் கொடுக்க வேண்டும். நான் ஒப்புக்கொண்டேன். ஒரு பைண்டரைக் கொண்டு ஒரு வாரத்தில் இரவு பகலாக உழைத்துப் புக்பைண்டிங் கற்றுக்கொண்டேன். ஒரு அச்சகத்தில் எனது வேலையை நிரூபித்து அங்கிருந்து அத்தாட்சித்தாளும் வாங்கிக் கொடுத்தேன். ஆபீசில் அந்த கான்ட்ராக்டை என் பேருக்கே கொடுத்து விட்டார்கள்.
எனது வாழ்க்கை விளக்கம் – 6
கழிவுத்தாள்கள், அட்டைகள் இவற்றை ஆபீசிலிருந்து, கூடுவாஞ்சேரிக்கு நாள்தோறும் எடுத்துக்கொண்டு வந்து சேர்ப்பேன். எனது துணைவி அவற்றை ஒழுங்காக அடுக்கித் தைத்து வைப்பாள். நான் இரவில் வந்தபின் வச்சிரம் பூசி அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டி, கோப்புகளாகச் செய்வோம். இவ்வாறு வருடம் ஒன்றுக்கு 1500, அல்லது 2000 பைல்கள் தயாராகும். ஆண்டுதோறும் ரூ. 300/-லிருந்து ரூ. 500/- வரையில் மொத்தமாகக் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ. 600/- கொடுத்துக் கூடுவாஞ்சேரியில் ஒரு வீடு வாங்கினோம். பொருள் துறையில் முதல் வெற்றி வீடு வாங்கப்பட்டது. பைல்கள் செய்வதில் வருவாயும் சற்றுக் கூடியது. பால் விற்பனையும் ஓங்கியது. ஓரளவு பணவு மீதியிருந்தது. பால் வியாபாரத்தில் அதிக சங்கடம். வெயில் காலத்தில் சில குடங்கள் பால் முறிந்துவிடும், அவற்றிற்குப் பதில் நல்ல பால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்கென ஆள் வைத்திருந்தேன். எனினும், அவனாலும் சமாளிக்க முடியவில்லை. அந்த வியாபாரத்தை நிறுத்திவிட எண்ணினேன். அப்போது நாள் ஒன்றுக்கு ரூ. 25/- பால் மூலம் இலாப வரவு இருந்தது. எனது நண்பர் கபூர் சாயபு என்பவர் பால் விற்பனை செய்து வந்தார். அவரிடம் பால் வியபாரத்தை முழுமையாக ஒப்புவித்து விட்டேன். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. இதை வைத்துக் கொண்டு, லுங்கி உற்பத்தி விற்பனை நடத்த எண்ணினேன். சென்னையில் அங்கப்ப நாய்க்கன் தெருவில் மெளலானா லுங்கிக் கம்பெனி பலர் அறிந்த ஒன்று. அங்குச் சென்று லுங்கி நெசவுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டேன். எனக்கு ஞாயிற்றுக்கிழமைதான், துணி பார்வைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அப்படியே ஒப்புக் கொண்டார்கள். லுங்கி உற்பத்தி விற்பனைக்கு என் தம்பியையே நியமித்து, நான் ஆபீஸ் வேலைகளோடு, வியாபாரத்தையும் கவனித்து வந்தேன்.
நாளுக்கு நாள் பொருள் துறையில் முன்னேற்றம் கண்டேன். ஆயினும் உயிர், தெய்வம் என்ற இரண்டைப்பற்றி அறியாது திகைத்தேன். சிந்தனை மிகுந்து ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. எனக்கு என் ஆசான் எஸ். கிருஷ்ணாராவ் விளக்கி வைத்த பஞ்ச பூத தத்துவம் வர வர மிகத் தெளிவாக விளக்கியது, ஒரு நாள் இரவு மணி மூன்று இருக்கும்; விழித்துக்கொண்டேன். சிந்தனை மிகுந்தது, ஒரு முடிவு தோன்றியது.
“பிரபஞ்சம் ஐந்து பூதங்களும், ஆதியான தெய்வ நிலையும் சேர்ந்த, ஆறு நிலைகள் தானே கொண்டது. ஐந்து பூதங்களுக்கு அப்பால் சுத்த வெளியைத் தவிர வேறு ஏது? எனவே சுத்த வெளியேதான் தெய்வம் என்று கூறப்படுவதாக இருக்க வேண்டும். தாயுமானார் பாடியுள்ள அங்கிங்கெனாதபடி என்ற கருத்தோடு இணைத்தால், அதுதான் சரி. ஆயினும் உயிர் என்பது இந்த ஆறு நிலைகளில் எதுவாக இருக்கும். இயக்க நிலையில் உள்ளதே உயிர். ஆகவே அது பஞ்ச பூதங்களில் ஒன்றான விண்ணாகத்தான் இருக்க வேண்டும்” என்ற ஒளி போன்ற கருத்து விளங்கியது. இந்த அடிப்படையான உள்ளுணர்வை வைத்துக்கொண்டே, மேலும் சிந்திக்கத் தொடங்கினேன். என்ன வியப்பு? எனக்கு வர வர உலகமே முன்னைவிட வேறுபட்டுத் தோன்றியது. காலையிலிருந்து உறங்கப்போகும் வரையில், நான் ஈடுபடும் வேலைகளில் எல்லாம் தெய்வம், உயிர் நிலைகளின் விளக்கத்தை ஒப்பிட்டு ஆராய்வேன். ஒவ்வொரு செயலும், காட்சியும், மனிதரும், எனக்கு அவ்வப்போது மெய்விளக்கப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நூல்களாகத் தோன்றின. இந்தத் துறையில் உள்ளம் பூரித்து, மனம் அமைதி கொண்டது. எனினும் பழைய நூல்கள், புராணங்கள், கட்டுக்கதைகள், சடங்குமுறைகள், இவற்றில் அமைந்த கருத்துகட்கும், எனது விளக்கத்திற்கும், வேறுபாடுகள் இருந்தன. இவை எல்லாவற்றிற்கும் நிறைவு காண வேண்டும். உள்ளத்தின் பூரிப்போடு சில ஆண்டுகள் “பஞ்ச பூத தத்துவ விளக்கம்” என்ற பூங்காவில், அறிவைச் செலுத்தி மகிழ்ந்திருந்தேன். எந்தச் சமயத்திலும் பொருள்துறை வளர்ச்சியில், என் முயற்சியைக் குறைத்துக் கொள்ளவில்லை. காலை மணி நான்கு முதல் இரவு மணி பத்து வரையில், அயராது உழைத்தேன்.
எனது வயது முப்பத்திரண்டு ஆகியது. அப்போது, என் உள்ளத்தை மோத ஒரு நிலைமை உருவாகியது. திருமணமாகியும் எங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதைக் குறிப்பிட்டுக்காட்டி என் துணைவியை யார் யாரோ மனத்தைப் புண்படுத்தி விட்டார்கள். மலடி என்று இழித்துக் கூறும் வார்த்தை அவள் காதில் விழுந்தது. அதோடு மற்றும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் தான், அவர்களுக்குக் குழந்தை என்றும் சொல்லி விட்டார்கள். பாவம் கபடமற்ற உள்ளம், வசைச்சொற் கேட்டறியாகவள், உள்ளம் வெந்து துடித்தாள். என்னிடம் இவற்றை யெல்லாம் கூறிய போது தக்க ஆறுதல் கூறினேன். எவர் என்ன சொன்னாலும், நீ காதில் போட்டுக் கொள்ளாதே. நாம் பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது. மேலும் இயன்ற வரை பிறருக்கு உதவி செய்து வரவேண்டும். இந்த லட்சியத்தோடு நாம் வாழ்கிறோம். இயற்கையாக நிலவும் குழந்தைப் பேறின்மைக்கு, நாம் வருந்தவும் கூடாது. அதைப் பொருளாக வைத்து நம்மைத் தூற்றுபவர் பேச்சுக்கும், மதிப்பளிக்கக் கூடாது என்று, அடிக்கடி கூறினேன். எனினும் அவள் உள்ளம் பிறர் தூற்றும் பழிச்சொற்களால் அமைதியிழந்து தவித்தது. எனக்கு அவள் மனநிலை கண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை. இது ஒரு பெருஞ்சிக்கலாகி விட்டது. நாள் தோறும் நீங்கள் இரண்டாந் திருமணம் செய்து கொளளத்தான் வேண்டும் என்பாள். நான் ஆறுதல் கூறி வருவதோடு, காலையில் படுக்கை விட்டெழுந்தவுடன் கண்களை நெருடி விட்டுக் கொண்டு ஒரு பாட்டைப் பாடுவேன்.
அந்தப் பாட்டு இது தான்,
“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை;
பெருநெருப்பு சாமளவும் துக்கம்துக்கம்”
இதை விடாமல் பாடுவேன். என்றாலும் அவள் மனம் அமைதி பெறவில்லை. குருவிக் கூண்டைக் கலைத்துவிட்ட மாதிரி, எங்களைக் கலைத்துத் தவிக்கவிட திட்டமிட்டு விட்டது சமுதாயம்; உறவினர், சுற்றத்தார் என்ற உரிமையில். மனித வாழ்வில் எழும் சிக்கலைப் பாருங்கள்! எல்லாவற்றையும் தாங்கி வெற்றி பெற்றுத்தான் முன்னேறவேண்டும்.
சிறியது உடல் பெரியது மெய்
பெற்ற உடம்பின் பயனாய் ஊறு முதல் ஐந்து
புலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்
நற்றவத்தால் உயிரறிந்து அளவறிந்தபோது
நாம்பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்
சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லை
சிறியதுடல் பெரியதுமெய் சீவன்சிவன் உண்மை
பற்றின்றி வாழ்வில்லை அளவுமுறை கண்டால்
பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே.
விளைவறிந்த விழிப்பு
விறகதனை வாங்குகின்றோம் எரிப்பதற்கே
வேண்டிய போதல்லாது நெருப்பின் பக்கம்
மறதியினாலும் வையோம் அதுபோல் ஆண்பெண்
மணமாகா முன் நெருங்க விடக்கூடாது
உறவுகளில் பெற்றோர்கள் பெற்ற மக்கள்
உடன்பிறந்தார் குறிப்பிட்ட சுற்றம் அல்லால்
பிறருடனே ஆணோடு பெண் நட்பாகா
பிழையில்லை தொழில் வயது நாடு ஒத்தால்.
இனிது வாழ்க
உடல்நலம் நீள்ஆயுள் கல்வி செல்வம்
ஒழுக்கம் புகழ் மெய்ஞானம் இவற்றில் ஓங்கி
கடல்சூழ்ந்த நிலஉலக மக்களெல்லாம்
கடமையுணர்ந்தாற்றி பெருவாழ்வு வாழ்க
குடல்பசி யோடறிவுப்பசி நிறைவுபெற்று
குற்றமெழும் சூழ்நிலைகள் அனைத்தும் மாற்றி
இடல் காத்தல் ஈட்டல் என்ற துறைகள் மூன்றில்
ஏற்றம் பெற்றென்றென்றும் இனிதுவாழ்க.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
எனது வாழ்வின் அமைப்பே விசித்திரமானது. ஒருபுறம் குடும்பத்தில் சிக்கல்கள் மாறி மாறி உருவாகும்; வருந்துவேன். சிந்திப்பேன். தெளிவு பெறுவேன். துணிவு பெறுவேன். மற்றொரு புறம் தத்துவ ஆராய்ச்சியில் இடைவிடாத ஈடுபாடு. எப்போதும் சிந்திப்பேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், செயலிலும், விளைவிலும், இயற்கையின் ஒழுங்கமைப்பைக் கூர்ந்து ஆராய்ந்து தெளிவு பெறுவேன். இத்துறையில் எனக்கு நாளுக்கு நாள் இன்பம் மேலோங்கி வந்தது, இரண்டாந் திருமணம் குறித்து, என் துணைவியின் உறுத்தல், என் வாழ்வில் பெரும் சிக்கலாகிவிட்டது. எனினும் இந்தச் சிக்கல் காலத்தால் தீர்ந்துவிடும் என்று, அதை ஒதுக்கி வைத்தே மற்ற கடமைகளை ஆற்றிவந்தேன்.
பஞ்ச பூதத் தத்துவப் பூங்காவிலே அமர்ந்து, என் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வந்தேன். அப்போது என் அறிவு நாளுக்கு நாள் மேலும் மேலும் ஒளிபெற்று வந்தது. முன்னே விளக்கியபடி நான் காணும் தோற்றங்கள் அனைத்தும், பஞ்ச பூதக் கூட்டுக் காட்சிகளாகவே எனக்குத் தோன்றின. முதலில் சில நாட்கள் வரை “ஆகாசம்” என்ற நிலைதான் தெளிவாகப் புரியாமலிருந்து கடைசியாக அதைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்துவிட்டது. அணுவைப் பற்றி ஏதோ சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சில பல இயக்கத் துகள்கள், ஒன்று சேர்ந்து இயங்கும் ஒரு கூட்டமைப்பே அணுவென உணர்ந்தேன். விஞ்ஞானிகள் கூறும் அவ்வணுவின் அமைப்பில் சிந்தனை ஓடியது. ஒவ்வொரு அணுவிலும் கரு அணு (Neutron), துணைக்கரு அணு (Proton) மின்னணு (Electron) என்று ஒரு கூட்டு உள்ள இயக்கம் ஒன்று உள்ளது எனில் அக்கூட்டு அமையாத தனிநிலையும் இருக்கத்தானே வேண்டும்? இந்த மூன்று வகைத் துகள்களும் அவ்வமைப்பில் பெற்ற இயக்கச் சிறப்பால் பெற்ற பெயர்களே, கருவணு, துணைக்கருவணு, மின்னணு என்பதெல்லாம் என்ற விளக்கம் கிடைத்தது. அத்தகைய தனித்த இயக்க மூலக் கூறுதான் “ஆகாசம்” எனப்படும் நுண்ணியக்க நிலை என விளங்கிக் கொண்டேன். அதன்பின் பிரபஞ்சம் முழுவதையும் ஆகாசம் (Ether) எனும் பரமாணுக்களின் தொகுப்புக் களமாகவே கருதும் ஒழுங்கு முறை என் அறிவிற்கு ஏற்பட்டது. ஆகாசம் எனும் தனி மூலக் கூறுகளின் திரட்சியால் விஞ்ஞானிகள் கூறும் அணு அமைந்தது என்றும், அம்மூலக் கூறுகளின் எண்ணிக்கைக்கேற்ப அணுவின் மூலக மதிப்புகள் (Elemental Values) பலவாக கணிக்கப் பெற்றன என்றும் உணர்ந்தேன். எந்தத் தோற்றமும் ஆகாசமும் வெளியும் சேர்ந்த கூட்டு அமைப்பாகவும், வெளியின் விகித அளவு (Proportion) குறையக் குறைய தோற்றப் பொருட்களின் திண்மை மிகுகின்றது என்றும், திண்மை மிகமிக, விளைவுகள் – அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் முதலியவை – வேறு படுகின்றன வென்றும், இந்த விளைவு வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஆகாசத்தின் திரட்சி வேறுபாடுகளுக்குக் காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற பெயர்ப் பிரிவுகள் உண்டாயின வென்றும் உணர்ந்து கொண்டேன். ஆகாசமே, பிரபஞ்சம் எனும் பேரியக்கத் தொடர்க்களம் முழுமைக்கும் அடிப்படையான இயக்க மூலக்கூறாக இருக்க, அதன் முன்நிலை எது என்ற சிந்தனையில் மேலும் ஆழ்ந்தேன். ஆகாசத்திற்கு அப்பால் என்ன இருக்கின்றது? சுத்தவெளி தானே உள்ளது? இந்தச் சுத்தவெளிக்கும் பரமாணு எனும் ஆகாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்று ஆராயத் தொடங்கினேன். இதைப் பற்றிப் பலநாட்கள் சிந்தனை செய்து வந்தேன். எனக்கு அகத்தே ஒரு விளக்கமும் காட்சியும் கிடைத்தன, “வெட்ட வெளியே மெய்ப்பொருள். அதன் இயக்க நிலையே பரமாணுவெனும் ஆகாசம். தெய்வம் எனப்படுவதும் சிவம் எனப்படுவதும் சுத்தவெளியே; அதன் நுண்ணியக்க ஆற்றலே (Energy) ஆகாசம்.” மனம் விரிந்தது, நிலைத்தது. உள்ளுணர்வு மலர்ந்தது. அகத்தே எல்லையற்ற கடல் காட்சியாயிற்று. அலைகள் கோடாணு கோடி காட்சியாயின. ஒரு கவியும் உருவாயிற்று; அந்தக்கவிதான் இது.
“ஆதியெனும் மெய்ப்பொருளோ கடல்போ லொன்று;
அதிலெழுந்த இயக்கமெலாம் அலைகள் போலாம்;
பேதமுடன் அலைகளவை விரிந்த போதும்
பிரியாது கடலை விட்டுக்கடல் ஒன்றேனும்
வாதமிடும் பலகோடி அலைகளூடும்
வழுவாது நிறைந்து நின்று, முடிவில் தன்னுள்
நீதமொடு இணைத்துக்கொள் தன்மை போன்று,
நிலையற்ற இயக்கமெலாம் முடியும் மெய்யில்”
வெட்டவெளியே மெய்ப் பொருளாகவும், அதன் ஆற்றலே சக்தியெனும் ஆகாசமாகவும், அதன் திரட்சிநிலை வேறுபாடுகளே பஞ்ச பூதங்காளகவும், அவை இணைந்த கூட்டுக் காட்சிகளே பேரியக்கத் தொடர்க்களத் தோற்றங்களாகவும் விளக்கம் பெற்றேன்.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
சுத்தவெளி ஏதுமற்ற இடம்தானே, அதைப் பொருள் என்று எப்படிக் கூறுவது என்ற திகைப்பு முன்னர் ஏற்பட்டது. பின்னர் அதைப் பற்றிய ஐயமும் தெளிந்துவிட்டது. இயக்கத்தோடு இயக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் கணிப்பு நிலையிலுள்ள அறிவிற்கு, வெட்டவெளி ஏதுமற்றதாக இருக்கிறது. அறிவே சமாதிநிலையில் பொருளாகவும், இயக்க நிலையில் உயிராகவும், புலன் வழியிலான காட்சி நிலையில் எண்ணற்ற இயக்க வேறுபாடுகளாகவும், இயங்கும் உண்மையினைக் கூர்ந்து தவ நிலையின் அநுபவமாக உணரும்போது வெட்ட வெளியே பொருள் என்றும் அதன் இயக்க ஆற்றவான பரமாணு உயிர் என்றும், அணுக்களின் திரட்சி நிலைகள் பலவாறான வேறுபட்ட தோற்றங்கள் என்றும், விளங்கி விட்டது. மேலும் பேராற்றல் பெற்ற கோடான கோடி சூரியன்களும் (நட்சத்திரங்களும்) மற்ற கோள்களும் வெட்ட வெளியில்தான் மிதந்து உருண்டு ஓடி இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மை தெளிந்த விடத்தில், வெட்ட வெளியே, எல்லாம்வல்ல (Almighty) பரம்பொருள் என்னும் விளக்கம் உண்டாயிற்று. இடம், இயக்கம் இரண்டையும் ஒத்தப் பார்த்தால் இயக்கத்தைவிட இடம் வலிதாகவன்றோ இருக்க வேண்டும். இவ்வாறேல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் சமாதி நிலையிலும் (நிறைபேற்றுநிலை), துரிய நிலையிலும் (நிறைபேறுநிலை), புறக்காட்சி நிலையிலும் (புலனுணர்வு நிலையிலும்) நின்று நின்று பல நாட்கள் பல மாதங்கள் ஆராய்ந்து, பொருள் (Matter) ஆற்றல் (Energy), தோற்றம் (Mass), உணர்வு (Consciousness), ஆகிய நிலைகளை விளங்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல பரம்பொருளே ஆகாசமென்ற உயிர்த் துகள்களாய், அதன் திரட்சித் தோற்றமே உடலாய், உயிர்- உடல் கூட்டு இயக்கத்தால் உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோக, அனுபவ, ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற உயிரின் பத்து படித்தளப் படர்க்கை இயக்க ஆற்றலான மனமாய் இயங்கும் மறைபொருள் உண்மைகள், எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டன.
“ஒரே பொருள் எல்லாமாக இருக்கிறது” என்ற அத்வைத தத்துவம் விளங்கிவிட்டது. “அது மலர்ச்சிபெற்று இயக்கம் என்ற நிலை வேறுபாட்டோடு சித்து-உயிர்-ஆகாசம்-பரமாணு-சக்தி என்று பேசப்படும் ஆற்றலாக இயங்கித் திரட்சி நிலையில் உலகமாகி உயிர்களாகி அனந்தமாக இருக்கின்றன” என்ற தெளிவில் துவைத தத்துவமும் விளங்கிவிட்டது.
உயிர்களாகி, மனிதனாகி புலன் மயக்கின் தேவை, பழக்கம், சூழ்நிலைகள் நிர்ப்பந்தங்களில், சிக்கலுற்று துன்பங்களை விளைத்துக் கொண்டு தவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வாழவேண்டுமெனில், தனது அறிவை அகநோக்குப் பயிற்சியால் பண்படுத்தி, மனதின் இயக்க விதியறிந்து, உயிரின் நிலையறிந்து, அவ்வுயிரைப் பரநிலையோடு இணைத்து இணைத்து நின்று தவம் ஆற்றி, அறிவின் முழுமை பெற வேண்டும். பிறவிக் கடலைக் கடக்க இதுவே சரியான வழி. இதற்குப் பொருள்நிலை, நிகழ்ச்சி நிலையறிந்து, அகநோக்குத் தவத்தில் முழு ஆற்றல் பெற்ற ஆசான் அருளைநாடி அவர்மூலம் முறையாக நோன்பு ஆற்றியே மனிதன் உய்ய வேண்டும், என்ற விசிட்டாத்வைத தத்துவமும் எனக்கு விளங்கிவிட்டது.
எனது வாழ்க்கை விளக்கம் – 7
அறிவறியும் விளக்கத்தில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வந்தேனோ, அந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பல தடைகளும் சிக்கல்களும் உருவாகிக்கொண்டே இருந்தன. எனது இல்லத்தரசி என்னை இரண்டாந் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென, நாளுக்கு நாள் அழுத்தமாக வற்புறுத்திக் கொண்டிருந்தாள், நான் காலம் கடத்திக் கொண்டே வந்தேன்.
ஒருநாள் “காவேரி” எனும் மாத இதழில் ஒரு கதை வெளியாகி இருந்தது. அதைப் படித்து முடித்த என் துணைவி அவ்விதழை என்னிடம் கொடுத்து அந்தக் கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினாள். படித்தேன்; என் கண்களில் நீர் மல்கியது. அக்கதையின் சுருக்கம் இதுதான்;
அன்பு நிறைந்த கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திவருகிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. உற்றாரும் மற்றவர்களும் அப்பெண்ணைத் தூற்றுகிறார்கள். மலடி என்று மனம் நோகும்படி பழித்துக் கூறுகிறார்கள். அவள் உளம் நொந்து விட்டது. கணவனை வணங்கி, “அத்தான் நீங்கள் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். என்மீது பழிச்சுமையும் இறங்கும். நம்குடும்பத்துக்கும் ஒரு குழந்தைப் பேறு உண்டாகும்” என்கிறாள். கணவன் மறுத்துப்பேசி அவளுக்கு ஆறுதல் கூறிவருகிறான். உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை, என் வாழ்வில் பங்குகொள்ள விரும்பவில்லை” என்று உறுதியாகக் கூறிவிடுகிறான். ‘நான் இற்ந்துவிட்டால் அப்போது நீங்கள் மறுமணம் செய்து கொள்வீர்களல்லவா?’ என்று கேட்கிறாள். ‘இவ்வாறெல்லாம் வீண் கற்பனையில் ஏன் மனதைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய் அமைதியோடு இரு!’ என்று கூறிவிட்டுக் கணவன் வெளியே போய்விடுகிறான். அன்று இரவு அவன் வீட்டுக்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. தேடிப் பார்த்தார்கள். எங்கும் காணவில்லை, மறுநாள் காலையில் காவேரி ஆற்றோரத்தில் அவள் பிணம் ஒதுங்கியிருந்தது என்ற செய்தி வருகிறது. இதுதான் கதை. “உற்றார் உறவினர் பழிச் சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின; அந்த நிலைமையை உண்ர்ந்து இரண்டாந் திருமணம் செய்து தன்னைப் பழிச்சொற்களிலிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம் ஒருபுறம் அவளைப் புண்படுத்தியது. அவள் மேலும் இந்நிலையில் உயிர்வாழ விரும்பவில்லை” என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அக்கதையை எழுதினான்.
பிள்ளை இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து மலடி என்று உற்றார் உறவினர் தூற்றுவது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கவே, அந்த ஆசிரியர் அக்கதையை எழுதினார். ஆயினும் அவர் சிந்தனையை மேலும் விரித்துக் கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதைச் சற்று நீட்டி முடித்திருக்க வேண்டும். “கணவன் தனது அன்பு மனைவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறினவன் பின்னர் விடு திரும்பவே இல்லை. சில மாதங்கள் கழித்து ரிஷிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்கள்” என்று முடித்திருந்தால், என் கதையும் மாறி இருக்கும். முழுமை பெறாத அக்கதை தான், என் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கல் போல் நின்றது. கதையைப் படித்தேன். எனக்கு ஒரே திகைப்பு எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘கதையைப் படித்து விட்டீர்களா’ என ஒரு வெற்றிப் பார்வையோடு என்னைப் பார்த்துக் கேட்டாள் என் துணைவி. ஆழ்ந்த சிந்தனையோடு மெளனமாக ஒரு பெரு மூச்சு விட்டேன். அதற்குள் அவசரமாக அடுப்பண்டை போய் விட்டாள். இராஜம் என்று கூப்பிட்டேன். அவள் பெயர் லோகாம்பாள். ஆயினும் இராஜாம்பாள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். கூடுவாஞ்சேரியில் நாங்கள் விலைக்கு வாங்கிய வீட்டில்தான் அப்போது இருந்தோம். நான் கூப்பிட்டவுடன் அதற்காகக் காத்திருந்தவள்போல விரைவாக வந்தாள். அவள் முகத்தில் ஒரு வெற்றி ஒளி வீசியது. அவள் இருகரங்களைப் பற்றிக் கொண்டேன். எனது கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. “உன் மனநிலையைப் புரிந்துகொண்டேன். இனி நான் தடை சொல்வதற்கு இல்லை. உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்யையும் நிமிர்ந்துகூடப் பார்க்க விரும்பாத எனக்கு இத்தகைய நிலைவரக் கூடாது. வந்து விட்டது, விதியை ஓரளவு மதியால் வெல்லலாம். ஆனால் அந்த விதி ஒரு சிக்கலில்-சுழலில் கொண்டுவந்து விட்டு, என் அறிவு செயல்பட வொட்டாது செய்துவிட்டது. இரண்டாம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறேன். ஆவன செய்” என்று குரல் தழுதழுக்கக் கூறினேன். அவள் பிரிவாற்றாமையைக் காட்டி அவளும் அழுதுவிட்டாள். மேலும் கூறினாள். “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எந்த விதத்திலும் எங்களுக்குள் சண்டை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று.
அச்சமூட்டிய விபத்து
ஒருநாள் நான் ஆபிசுக்குப் போகப் பஸ் ஏறக் காத்திருந்தேன். இடம் மந்தைவெளி தபாலாபீசுக்கு எதிரே. அங்கு சக்கிலி இருந்தான் எப்போதாகிலும் எனது செருப்பு காது அறுந்துவிட்டால் அவன்தான் தைத்துத் தருவான். அன்றும் அந்த மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தேன். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது. “ஏனப்பா, காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா?” என வினவினேன். “இல்லை” என்றான். மேலும் சொன்னான். “நேற்றிரவுகூடச் சாப்பாடு கிடையாது சாமி” என்றான். இந்தச் சொல் என்னைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. “ஏன் என்றேன். “நேற்று வருவாய் இல்லை சாமி” என்றான். இந்தப் பரிதாபமான வார்த்தை என் உள்ளத்தை தொட்டுவிட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டியது அரையணா. ஒரு அணாவாகக் கொடுத்துவிட்டு அன்று ஆபிசுக்குப் போய்விட்டேன். “நேற்று இரவுகூட சாப்பாடு கிடையாது சாமி” என்னும் சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பட்டினியின் கொடுமையை நான் உணர்ந்து இருக்கிறேன்.
இதுபோல எத்தனையோ ஏழைகள் உணவு இன்றிப் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாறும்? இந்த சிந்தனை வலுத்தது. மாலை வீட்டிற்கு வந்தேன். அன்று எனது ஆசான் வீட்டுக்குக்கூடச் செல்லவில்லை. பட்டினியைப் பற்றிய நினைவு என்னை வாட்டியது. எனக்கு ஒரு முடிவு தோன்றியது. “எத்தனையோ ஏழைகள் ஒருவேளை உணவு கொண்டும், சில சமயம் அதுகூட இன்றியும், பட்டினி கிடக்கும் போது நான் மட்டும் இரண்டு வேளை ஏன் சாப்பிட வேண்டும்? ஒருவேளை மாத்திரம் சாப்பிட்டு வந்தால் போதாதா?” என்று வினவி, அதையே முடிவாகக் கொண்டேன். அன்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. மறுநாளும் எனக்கு இரவு உணவு வேண்டாம் என்றும், சில நாட்களுக்கு ஒரு விரதம் எடுத்திருப்பதாகவும், என் அக்காளிடம் கூறிவிட்டேன். காலையில் எழுந்தால் உடல் காற்றில் பறப்பதுபோல இருந்தது. சிறிது நேரம் சென்று பல் துலக்கிச் சிற்றுண்டி கொண்டபின்தான், வலிவு வரும். இதைச் சரிபடுத்திக் கொள்ள நினைத்தேன். மாலையில் காலணவுக்கு வருத்த வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். பத்து தினங்களில் நிலைமை சரியாகி விட்டது. மாலையில் சாப்பாட்டு நினைவு வராது. எனினும் “உலகில் வறுமை ஒழிய நான் என்ன செய்ய வேண்டும்? அது என்னால் எப்படி முடியும்?” என்ற சிந்தனை வலுத்துக் கொண்டே வந்தது. இருபத்து மூன்றாவது வயதில், இரவு உணவு விட்டேன். இன்றுவரை அதே பழக்கம் தொடர்ந்து வருகிறது. அன்பர்கள் வற்புறுத்தலால் ஏதேனும் சிற்றுண்டி சில சமயம் கொள்வதுண்டு. பால் மாத்திரம் இரவில் விடாமல் பருகி வருகிறேன்.
எனது திருமணம் நிச்சயமாகிவிட்டது. “என் மனதுக்கு ஒத்தவளை, என் உள்ளத்தைப் புரிந்து கொண்டவளை, உயர்ந்த பண்பும் சிறந்த அறிவும் உடையவளை, நான் மனைவியாகப் பெறப் போகிறேன்” என்று எண்ணுந்தோறும், களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு இலட்சிய வாாழ்க்கை நடத்த, ஏற்றதோர் வாழ்க்கைத் துணைவியை நாடினேன். அடைந்தேன். சிக்கனமாகவே, திருமணம் நடந்தேறியது. எனது அன்னையுள்ளம் குளிர்ந்தது. எனது தம்பிக்கும் அதே நாளில் திருமணம் நடத்திவிட்டேன். அன்னையை என்னோடு இருக்கும் படி அழைத்து வந்து விட்டேன். என் தம்பியும் என்னோடு இருந்தான். வேறு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாங்கள் வாழ்ந்தோம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த மனைவி கிடைத்தாள். போதிய வருவாய் இருந்தது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைதான். இந்தக் களிப்பில் நிறைவை எய்திவிடவில்லை. உயிர் எது? கடவுள் எங்கே? உலகில் வறுமை ஒழிவது எவ்வாறு?” இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே இருந்தன.
பருவத்திற்கேற்ற கடமை
பொருள்வேண்டும் எனினும் அது மக்கட்கெல்லாம்
பொது சொத்தாய் இருக்கட்டும்; இளைஞர் எங்கும்
பொருள் ஈட்ட உழைக்கட்டும்; முதியோர் தங்கள்
புத்தி நுட்பம் தொழில் நுட்பம் போிதிக்கட்டும்
பொருள், ஆட்சி, விஞ்ஞானம், அறிவின் தன்மை,
பூதஉடல் தரமுணர்ந்தோர் அரசாளட்டும்
பொருட்கள் எல்லாம் வாழ்விற்கே என்பதல்லால்
பொருட்கட்கே வாழ்வு என்ற கருத்து வேண்டாம்.
பொருளாதாரம்
தனிமனிதன் உரிமை என்ற பிடியினின்று
சகல தொழில் நலம், வீடும் நிலம், வியாபாரம்
மனிதர் பலர் இணைந்த கூட்டுறவின் கீழே
மாறிவிடும் திட்டத்தை அமுலாய்க் கொண்டு
வினியோகம் தொழில் பொருள் என்றிரண்டிலாக்கி
வேலையின்மை, வறுமை இவையொழித்துக் காட்ட
இனியேது பொருளாதாரத்தில் எங்கும்
ஏற்றத் தாழ்வெனும் நிலைமை ஆய்வீரே.
முழு சுதந்திரம்
உணவு, உடை, இடம்பெற்று சுதந்திரமாய் வாழ
உலகமக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு அன்றோ?
உணவு, உடை, இடம், பணத்தால் ஒருசிலரே முடக்கி
ஒருவர் பலர் சுதந்திரத்தைப் பறித்திடுதல் நன்றோ?
உணவு, உடை, இடம் முடக்கும் ஒழுங்கறியார் கூடி
உருவாக்கும் சட்டங்கள் நீதியெனில் சரியா?
உணவு, உடை, இடம் விடுவித்துலகப் பொதுவாக்கி
ஓருலக ஆட்சியின்கீழ் சுதந்திரமாய் வாழ்வோம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 8
இரண்டாம் உலகப் போர்க்காலம். உலகெங்கும் போர் அச்சம் மிகுந்திருந்தது. எனக்கு ஏதேனும் சமுதாயத்திற்குப் பயனுள்ள முறையில் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் செயின்ட்ஜான் ஆம்புலன்ஸ் (First Aid) குண்டு வீச்சுப் பாதுகாப்பு (Air Raid Precaution) ஆகிய இருதுறைகளிலும் பயிற்சி பெற்றேன். துப்பாக்கிச் சுடுவது தவிர மற்ற எல்லா வகையான இராணுவப் பயிய்சிகளும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படைக்கு உண்டு. எல்லாவற்றிலும் ஆர்வத்தோடு பயிற்சி பெற்றேன். உடை கூட இராணுவ உடைதான். வாரத்தில் இரண்டு நாட்கள் காரியாலயத்திற்கு அவ்வுடையிலேயே செல்ல வேண்டியிருக்கும். அப்போது போர்க்காலப் பாதுகாப்பாகச் சென்னையைக் காலி செய்ய உத்திரவாகிவிட்டது. போஸ்டல் ஆடிட் ஆபீஸ் கோயம்பத்தூருக்கு மாற்றப்பட்டது. நான் உடனே அங்கு செல்ல முடியாமல் ஆறு மாதங்களுக்கு லீவு எடுத்துக்கொண்டேன். அப்போது லுங்கி வியாபாரம் ஏற்றுமதித் தடை காரணமாகச் சிறிது மந்தமாக இருந்தது. துணி விற்பனை மட்டும் சற்று முனைப்பாக இருந்தது. லீவும் முடிந்தது. மேலும் லீவு நீட்ட முடியாமல், நான் மாத்திரம் கோயம்புத்தூருக்குச் சென்று வேலையில் சேர்ந்து கொண்டேன்.
ஓட்டல் சாப்பாடு, காரியாலயத்திலேயே படுக்கை. இவ்வாறு இரண்டு மாதங்கள் கழிந்தன. எனக்கு ஓட்டல் ஒத்துக் கொள்ளாமல் உடல் நலிவுற்றது. என் துணைவிக்கு என் நிலையை எழுதினேன். நீங்கள் வந்தால் நானும் உடன் வந்து விடுகிறேன் என்று பதில் எழுதினாள். எங்கேனும் ஒரு வீடு குடியிுுருக்க ஏற்பாடு செய்துவிட்டு உடனே வருமாறு கேட்டுக் கொண்டாள். அவ்வாறே கோவைக் கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, மூன்று நாள் லீவில் கூடுவாஞ்சேரி சென்றேன். துணிக்கடையை சரியாக என் தம்பி நடத்தவில்லை. மூலதனம் மிகவும் குறைந்து போயிருந்தது. அதைச் சிறிது ஒழுங்கு செய்துவிட்டு, என் துணைவியோடு கோவைக்குச் சென்றுவிட்டேன். அங்கு சில மாதங்கள்தான் இருந்தோம். இரண்டாந்திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் அங்கேயே உருவாக்கிக் கொண்டோம். என் அன்னைக்கு எங்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. மீண்டும் லீவு எடுத்துக்கொண்டு கூடுவாஞ்சேரிக்கு வந்துவிட்டேன். பதினோரு மாதங்கள் லீவில் இருந்தேன். இதற்குள் காரியாலயங்கள் மீண்டும் சென்னைக்கு வர உத்தரவாயிற்று. அந்தச் சமயத்தில் நான் வேலைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டேன். காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்டது. கோவையில் நாங்களும் கூடுவாஞ்சேரியில் என் அன்னையோடு மற்றவர்களுமாகக் குடும்பம் பிரிவுபட்டிருந்தபோது எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. செழித்து வந்த பொருளாதாரம் சிறிது சிதறுண்டது. காரியாலயம் சென்னைக்கு மாற்றப்பட்ட போது அந்தப் பெரும் சிக்கல் நீங்கியது. கூடுவாஞ்சேரிக்கு வந்தவுடன் இரண்டாந் திருமண ஏற்பாடு செய்ய முனைந்தோம். எனக்கு அப்போது வயது முப்பத்திரண்டு. முதல் திருமணமாகி பத்து ஆண்டுகள் முழுமை பெறவில்லை. திருமணத்திற்கு நாங்கள் ஒப்புதல் செய்து கொண்டோம். அதுவரையில் எனது துணைவியின் தந்தையார் ஒப்புதலைப் பெறவில்லை. அதற்காக நாங்கள் மயிலாப்பூருக்குப் போனோம். அப்போது என் மனைவியிடம் ஒரு கருத்தை தெரிவித்தேன். அவள் தந்தை ஒப்புக்கொள்ளாவிடில் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டுமென்றேன். “அவர்களைச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு” என்றாள். மேலும் கூறினாள். “அவர் உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், திருமணம் நடக்க வேண்டியது தான். அதன் பிறகு அவரைச் சமாதானப் படுத்துவது என் வேலை” என்றாள். எனது மாமனாரை நாங்கள் அனுமதி கேட்டபோது “உங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூிறிவிட்டார். இதை முனனமே என் துணைவி ஏற்பாடு செய்துவிட்டாள் போலும்.
எனது வாழ்க்கை விளக்கம் – 8 – II
கூடுவாஞ்சேரிக்கு அடுத்த நந்திவரம் கிராமத்தில் பெண் பார்த்தாயிற்று. எல்லாம் என் துணைவியின் ஏற்பாடுதான். வழக்கத்திற்கு மதிப்பளித்து, ஒரு நாள் நான் நேரில் போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தேன். எனக்குத் தத்துவ ஆராய்ச்சியால் மனம் எவ்வளவோ தெளிவும் உறுதியும் பெற்றிருந்தது. எனினும் எனது வருங்கால வாழ்வை நோக்கிச் சிந்தித்தபோது ஒரு பெரிய புயல் வீசத் தொடங்கியது. என் உயிருக்குயிரான கண்மணி, எனது உள்ளத்தின் போக்கிறிந்து எனக்கு உதவியும், தொண்டு செய்தும் காக்க வல்லவள் என் துணைவி. அவள் இடத்தில் மற்றொரு பெண்ணைக் கொண்டு வந்து அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து வருந்தினேன். கோவைக்குச் சென்றபோது தவிர மற்ற நாட்களில் நாங்கள் பிரிந்திருந்ததே கிடையாது. இரண்டாந் திருமணத்தின் மூலம் அவள் என் வாழ்விலிருந்து பெரும்பகுதி ஒதுங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைந்து நினைந்து உருகினேன்.
திருமணத்திற்கு நாள் நிச்சயமாயிற்று. திருமாங்கல்யம் செய்வதற்கு ஆச்சாரியிடம் பொன் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல நாளைக் குறிப்பிட்டிருந்தோம். அன்று நான் ஏதோ காரணத்தால் ஊரில் இல்லை. மாலைதான் வந்து சேர்ந்தேன். “நீங்கள் இன்று மாங்கல்யம் செய்ய ஆச்சாரிக்குப் பொன் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். நேரத்தோடு நீங்கள் வராததால் நானே ஆச்சாரியைக் கூப்பிட்டுப் பொன் கொடுத்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினாள் என் துணைவி. எனக்கு வியப்பாயிருந்தது. இவளிடம் பொன் ஏது? பணமும் இல்லையே? எப்படி பொன் வாங்கிக் கொடுத்திருப்பாள்? என்று யோசித்தேன். உடனே அவள் “பொன் ஏது என்று யோசிக்கிறீர்களா? என் வளையல்கள்தான்; இரண்டைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்” என்றாள். அவள் கைகளைப் பார்த்தேன். கைக்கு ஒரு வளையல்தான் இருந்தது. ஒரு சவரன் பொன்னில் நாலு கவரிங் வளையல்கள் போட்டிருந்தாள். அவற்றில் இரண்டுதான் அளிக்கப் பெற்றது. இரண்டாம் திருமணத் தாலியாக மாறியது. எனது உள்ளமே உருகிவிட்டது. அவள் ஒரு வெற்றிப் பார்வை வீசினாள். “என் வாழ்வில் பெரு நிதியான உங்கள் அன்பிலேயே ஒருத்திக்குப் பங்குகொடுக்கப் போகும் எனக்கு இந்தப்பொன் வளையல்களில் பங்கு கொடுப்பது பெரிய காரியமன்று” என்றாள். “வசதியிருக்கும் போது நான் மீண்டும் வளையல் செய்துபோட்டுக்கொள்கிறேன்” என்றாள். எதிர் காலத்தில் அவள் நடத்தை குடும்ப நிர்வாகத்தில் எப்படியிருக்கும் என்று எனக்கு ஒருவாறு தெரிந்துவிட்டது. அதை விளக்குவதற்கே இந்த நிகழ்ச்சி நடந்தது போலும். அவளைச் சிறுவயது முதலே நன்கு அறிவேன். ஆனால் தியாக உணர்வை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அன்றுதான் கிடைத்தது.
ஒரு மனிதனிடம் அடங்கியுள்ள மன ஆற்றல், நட்பு அளவு அவை சந்தர்ப்பங்களால்தான் வெளிப்படும். அவள் என்ன நினைத்து வளையல்களைக் கழற்றிக் கொடுத்தாளோ என்று, எனது நினைவு ஓடியது. நாலு வளையல்களில் வரப்போகிறவளுக்கும் இரண்டு வளையல்கள் உரியவை தானே என்று நினைத்தாளோ! நல்ல நாள் என்று குறித்த தினத்தில் மாங்கல்யத்திற்குப் பொன் கொடுக்க வேண்டும் என்ற எண்ண அழுத்தத்தில் அதை அளித்தாளோ! திருமணத்திற்கு எவ்வளவோ செலவுகள் உள்ளனவோ, அதோடு பொன் வாங்குவதற்கும் ஏன் தனியே செலவழிக்க வேண்டும்; இருப்பதைக் கொண்டே அலுவலை முடிக்கலாமே என்று நினைத்தாளோ! இதன் மூலம் இரண்டாந் திருமணத்தில், நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நிரூபித்துக்காட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாளோ! இவை எல்லாவற்றிற்கும் அவள் தியாகச் செயல் இடமளித்தது. வசதிகளோடு அமைந்த சொந்த வீட்டை வறுமை காரணமாக விற்றுவிட்டு வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் குடிபுகப் போகும் ஒருவர் உள்ளத்தில் நிலை எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது என் எதிர்கால வாழ்வை நினைக்கும்போது எனது உள்ளம். கண்ணீர் துளிர்ந்தது. மூன்று வகையில் கண்களிலிருந்து நீர்வரும். மகிழ்ச்சி பொங்கி வரலாம். துன்பம் மேலிட்டு வரலாம். கண்நோயுற்றால் வரலாம், எனக்கு கண் நோய் இல்லை. கண்ணீர் வந்தது. மகிழ்ச்சியினாலா அல்லது வருத்தத்தினாலா என்று பிரித்துக் கூற முடியவில்லை.
எனது வாழ்க்கை விளக்கம் – 8 – III
15-06-1943 தேதிதான் திருமணத்திற்க் குறித்த நாள். அந்த நாள் வந்துவிட்டது. இரண்டாந் திருமணத்தைப் பார்க்க வேண்டுமென்ற விழைவில் எங்கள் சுற்றத்தாரும் நண்பர்களும், சுற்றுப்புறக் கிராமவாசிகளும் வந்து குழுமிக்கொண்டிருந்தனர். திருமணத்திற்கு முன் இரவே கூட்டம் அதிகம். லுங்கி வியாபாரம் தலையெடுத்து நன்றாக நடைபெறும் காலம் அது. பல ஊர்களில் எனக்கு ஒப்பந்த நெசவாளர்கள் இருந்தனர். திருமணநாள் காலையில் அவர்களெல்லாருமே வந்து குவிந்து விட்டனர். இரண்டாந் திருமணத்தில் முதல் மனைவிதான் தாலி எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் முதல் மனைவியின் ஒப்புதல் மீதுதான், இரண்டாம் மனைவி இல்லத்துக்கு வருகிறாள் என்பதைச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மறைபொருள் விளக்கமே முதல் மனைவி திருமணத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்றும், அவள்தான் திருமாங்கல்யத்தை எடுத்துக் கணவன் கையில் கொடுக்க வேண்டுமென்றும், நமது முன்னோர்கள் இதை ஒரு சடங்காக வைத்துள்ளனர். இரண்டு பெண்களும், இருபுறத்திலும் உட்கார்ந்துதான் ஓமம் முதல் எல்லாச் சடங்குகளும் நடந்தன. வெளியிலிருந்து வந்து குழுமியிருந்த தாய்மார்கள், சகோதரிகள் எல்லோருக்கும் உள்ளத்தில் அடக்க முடியாத ஆவல். திருமாங்கல்யம் எடுத்து முதல் மனைவி, கணவன் கையில் கொடுக்கும்போது அவள் ஆற்றாமையால் கதறி அழுவாள். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும். நாமும் சிறிது கண்ணீர் சிந்தி நமது அனுதாபத்தைத் தெரிவித்து மனச் சுமையை இறக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டிருந்து பல நாட்களாக இத்திருமண நாளை எதிர்பார்த்து வந்திருந்த தாய்மார்கள் கூட்டம் வரவர அதிகமாகியது. மற்றச் சடங்குகள் முடிந்து தாலி எடுத்துக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. புரோகிதர் சொற்படி எனது முதல் மனைவி திருமாங்கல்யத்தை மனதிடத்தோடு எடுத்தாள். என் கையில் கொடுத்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் என்னை நோக்கினாள். “துணிவோடு தாலி கட்டுங்கள். எல்லாம் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்று சொல்லும் வீர உணர்ச்சி, அவள் பார்வையில் விளங்கிற்று. எனினும் நான்தான் கோழையாகிவிட்டேன். சிறிது கண் கலக்கம் ஏற்பட்டது. உடனே சமாளித்துக் கொண்டேன். இந்த நிலையில் நான் தோல்வி கண்டதற்கும் அவள் வெற்றி பெற்றதற்கும் காரணம் உண்டு என்பதைப் பின்னர் சிந்தித்து உணர்ந்தேன். அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி எண்ணி, உள்ளத்தைப் பண்படுத்தி வந்திருந்தாள். நான் பொதுவாக எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திருமணத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறையிலான உளப் பயிற்சியால் அவள் பரீட்சை வந்த போது நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுவிட்டாள். பாடத்தை அக்கரையோடு படிக்காமல் பரீட்சையில் வினாத்தாள் கையில் வாங்கியவுடன் திகைப்புற்ற மன நிலையில், கைகள் உதறலோடு விடை எழுதத் துவங்கும் மாணவன் போல என் நிலை வந்துவிட்டது. கைகளில் சிறிது உதறல் எடுத்து, பொதுவாக நான் பெற்றிருந்த தவச் சாதனையால் இந்த நிலையைச் சமாளித்துக்கொண்டு கொட்டு மேளம் முழங்கத் திருமாங்கல்யத்தைச் சூட்டி விட்டேன்.
எனக்குத் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை. மாறாக ஒரு திகைப்பும், குற்றம் புரிந்துவிட்டது போன்ற மனப்பான்மையுமே இருந்தன. எல்போர்டு (L.Board) போட்டு கொண்டு, கார் ஓட்டும் கணவனோடு அந்தக் காரில் முதல் முதலாகக் கணவன் வற்புறுத்தல் மீது பயணம் செய்யும் மனைவியின் மனநிலை போல, ஒரு பயங்கர மனோநிலைதான் எனக்கிருந்தது. எனக்கும் என் முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட இரண்டாந்திருமண ஒப்பந்த சூழ்நிலைகளும், உண்மை விளக்கங்களும் வெளியே உள்ளவர்கள் உணர்வார்களா? செல்வச் செருக்கால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுகிறான் என்று சிலர் நினைப்பார்கள். அறியாமையால் இரண்டு பெண்களை மனைவியாக்கிக் கொள்கிறான் என்று சிலர் நினைப்பார்கள். பெண் உள்ளத்தோடு பெண் உள்ளம் ஊடுருவி இணைந்து பரிதாபம் கொண்டு, அவள் மீது இரக்கமும், என்மீது வெறுப்பும் சிலர் கொள்வார்கள். இவற்றையெல்லாம் முன்னமே பலதடவை சிந்தித்து உணர்ந்துதான் இருந்தேன், என்றாலும் திருமணத்தில் குழுமியிருந்தவர்கள் முகங்களை நான் கண்ட போது, அவர்கள் நேரில் என்னைப் பார்த்து அவ்வாறெல்லாம் உரையாடுவதுபோல இருந்தது. இத்தகைய சிக்கலான மனோநிலையில் எனது இரண்டாம் திருமண விழா நடந்தது.
எனது வாழ்க்கை விளக்கம் – 8 – IV
முதல் திருமண விழாவோடு இரண்டாந் திருமண விழாவை ஒப்பிட்டுப் பார்த்தால், முற்றிலும் வேறுபட்ட மனோ நிலைகள் எனக்கு அமைந்திருந்தன. வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் துய்க்கத் தொடங்கும் நாளாக அன்றிருந்தது. வாழ்க்கை இன்பங்களை விட்டுத் துன்பங்களை ஏற்கும் தொடக்க நாளாக இரண்டாம் திருமண நாள் அமைந்தது. பார்த்த நாடகமாக இருந்தால், அடுத்து வரபோகும் காட்சிகளும் பாத்திரங்களின் உணர்ச்சிகளும் இவ்வாறிருக்கும் என்று யூகித்து எதிர்பார்க்கலாம். இதுவரை பாராத, அதன் கதையமைப்பும் அறியாத நாடகம், எனது இரண்டாம் திருமணம், தாலி கட்டும் காட்சியில் கதாநாயகிகள், நாயகன் உணர்ச்சிகள் இவ்வாறு தான் அமையும், அவற்றை நேரில் காணலாம் என்று, பலவிதமான மனச் சோடனைகளோடு வந்திருந்த தாய்மார்கள், ஏமாந்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்களில் முட்டிக்கொண்டிருந்த நீர் வெளியாக வாய்ப்பே இல்லை. இந்தப்பெண் என்ன இம்மாதிரி ஏமாற்றி விட்டாளே என்ற வருத்தத்தில் தான் சில தாய்மார்கள் கண்களில் நீர் சிந்தியிருக்கலாம்.
எப்படியோ இரண்டாந் திருமணம் என்ற காட்சி, என் வாழ்க்கை என்ற நாடகத்தில் முடிந்துவிட்டது. வாசலில் பெரிய பந்தல் போட்டிருந்தும் இடம் கொள்ளவில்லை. அவ்வளவு பேருக்கும் உணவு அளித்தாக வேண்டும். பந்தி ஒன்றுக்கு 200 பேர் உட்காரலாம். பகல் 12.00 மணிக்குத் தொடங்கிய உணவளிக்கும் வேலை மாலை 4 மணி வரையில் முடிவடையவே இல்லை. பந்திக்குப் பரிமாறுவதில், நானும் எனது இலட்சிய மனைவி லோகாம்பாளும், நேரில் பங்கு கொண்டோம். எங்கள் பாடு சோர்ந்துவிட்டது. ஒருவாறு திருமணம் முடிந்துவிட்டது. எனது இரண்டாம் மனைவியின் பெயர் கண்ணம்மா, திருமணத்திற்கு முன்னமே அப்பெயரை மாற்றி விட்டோம். அவளுக்கு “இலட்சுமி” என்ற பெயர் சூட்டி விட்டோம். இந்தத் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட எனது வாழ்க்கை விளக்கங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரெண்டு கவிகள் மூலம் விளக்கியிருக்கிறேன்.
எது பண்பு
நீதி வழுவாது மக்கள் உழைத்து உண்டு
நித்திய அநித்தியத்தின் விளக்கம் பெற்று
ஆதிநிலை அறிவுநிலை யுணர்ந்து அன்பால்
ஆன்மீக நெறியில்பலர் வாழ்ந்த நாட்டில்
சாதி, மொழி, நாடு, வெறி இவற்றின் மூலம்
தங்களையே உலக மக்களிடமிருந்து
பேதித்துப் பிரிவு பிரிவாக்கிக் காணும்
பித்து ஒருபெரிய களங்கமன்றோ ஆய்வீர்
நீங்களும் இதுபோலாகலாம்
அழுக்காறு அவா வெகுளி
கடுஞ்சொற்கள் எனும் நான்கு வேண்டாவற்றை
அத்தனையும் மாற்றிவிட்டுத்
தூய்மைப் பேறடைந்தபயன் அறிவறிந்தேன்
பழுத்தமனம் அருளாற்றல்
கணம் மறவா விழிப்புநிலை பிறழ்வதில்லை
பண்பட்டதென எண்ணம்
சொல், செயல் இவை விளைவாய் நலம் காண்கின்றேன்
ஒழுக்கமுடன் கடமை பிறர்க்
குதவி செய்யும் ஆற்றலிவை வாழ்வில் ஓங்கி
ஒளிவீசிப் பாருலக
மக்கள் நலநாட்டத்தில் தொண்டானானேன்
முழுத்திறமை வளர்கிறது
கொடுப்பதென்றிக் கேட்பதில்லை எதிர்ப்பார்ப்பில்லை
முதிர்ந்து வரும் அறிவு
சிவக்காட்சியென உள்ளுணர்ந்து நிறைவாயுள்ளேன்
எனது வாழ்க்கை விளக்கம் – 9 – I
இரண்டாவது திருமணம் நடைபெற்ற பிறகு எனக்குக் குடும்ப வாழ்க்கையில் பொறுப்பு மிகுந்துவிட்டது. இரண்டு பெண்களின் உள்ளங்களையும் ஊடுருவி ஆராய்ந்துதான், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். தன்னைப் புறக்கணித்து நான் எந்தச் செயலையும் புரிவதாக, இருவரில் ஒருவர் கூட நினைத்துவிடக்கூடாது. அத்தகைய கருத்து உருவாகிவிட்டால், பின்னர் அதனை ஒழுங்கு செய்வது கடினம். எனவே, மிகவும் விழிப்போடு ஒவ்வொரு செயலையும் செய்வேன். பரம் பொருளிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்பது, ஒரு தெளிவான விளக்கம். ஆயினும் உயிர்கள் அனைத்துமே பெண் குலத்தினிடமிருந்து தோன்றின என்ற விளக்கம் எனது சிந்தனையில் முதலிடம் பெற்றது. எனவே, நான் பெண்களை மிகவும் மதிப்போடு நடத்திவந்தேன். இந்தக் கருத்தை ஒட்டியே உலக சமாதானம் என்ற நூலில்.
பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்வே றென்ன
பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு?
என்ற கருத்து ஒரு கவியில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். ஒருவர் மனமும் நோகாமல் வாழ்வை நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு குடும்பத்தை நடத்தினேன். லுங்கி வியாபாரம் அப்போது நாளுக்கு நாள் மேலோங்கியது. வெளியிலே சாயம் தீர்த்து நூல் கொண்டுவருவது மிகவும் தொந்தரவாக இருந்தது. ஆகவே, ஒரு சாயத் தொழிற்சாலையையும் ஏற்படுத்திக் கொண்டேன்.
நான் அடைய விரும்பிய இலட்சியங்களில், வறுமையில்லா வாழ்வும் ஒன்று. எனது வறுமை ஒழிந்துவிட்டது. தேவைக்கு மேலாக வருவாய் பெருகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு லுங்கி விற்பனை, ஒன்றேகால் இலட்சம் ரூபாயை எட்டியது. இதனால் என் அளவில் வறுமை ஒழிந்து போயிற்று. ஆனால் என் போன்று வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் வறுமை ஒழிய வழி என்ன? இந்தச் சிந்தனை ஓங்கியது. முதலில் என்னிடம் தறி வேலை செய்யும் தொழிவாளர்களின் வறுமையை நீக்க வேண்டும். முதலில் செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் இதுவே. எனவே, தாராளமாகக் கூலியைக் கொடுத்தேன். பிறகு ஆண்டுதோறும் நிகர லாப வருவாயில் 25% போனசாகக் கணக்குப் போட்டு, நெசவாளர்கள் எல்லோருக்கும் கொடுத்து வந்தேன். நெசவாளர் மனைவி குழந்தை பெற்றால், உடனடியாக ரூ.15/- இனாமாக வழங்கும் ஏற்பாடும், தாயோ தந்தையோ இறந்துவிட்டால், ரூ.25/- இனாமாக வழங்கும் ஏற்பாடும் செய்தேன்.
நெசவுத் தொழிலையும் துணி விற்பனையையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டேன்.
அவை இந்தக் கவிகள் மூலம் விளங்கும்:-
“ஆடைகளைத் தோற்றுவிக்கும் பணியில் கண்ட
அனுபவமும் திறமையும் கொண்டெல் லோருக்கும்
கோடையிலும் குளிரினிலும் உடுத்திக் கொள்ளக்
குறைந்த விலையில் நல்லதுணி வகைகள்
ஊடை வலுபாவு வலு பொருத்தம் பார்த்து
ஒத்துநெய்து சரி அகல நீளம் வைத்துக்
கூடை சுமப்போனுக்கும் செல்வர்கட்கும்
குறித்த விலைவிற்கும் ஒருபணியைச் செய்வேன்.”
“விற்பனையில் ஒத்துழைக்கும் எவர்க்கும் லாப
விகிதத்தில் பெரும்பாலும் குறைந்திடாமல்
சிற்பிகளைப் போலறிவைப் புலன்களோடு
சேர்த்தொன்றித் தொழிலாற்றும் நெசவாளர்கள்
அற்புத செய்கைக் கேற்ற கூலி தந்தும்
ஆடைகள் நெய்தே விற்கும் மற்றையோர்கள்
கற்பனையாலும் என்னால் நட்டம் காணாக்
கருத்துடனே உடுத்துபவர் திருப்தி காண்பேன்.
இவ்வாறு கொள்கையை வகுத்துக்கொண்டு தொழிலை நடத்தி வந்தேன்.
மூன்றாவது ஆசான்
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் “பரஞ்ஜோதி” என்பவர் சென்னையில் ஒரு ஞான சபை அமைத்தார். அவர் தீட்சை முறையைப் பற்றி ஒரு நண்பர் என்னிடம் விளக்கினார். உடனே நான் அங்கு சென்று விசாரித்து அச்சபையில் உறுப்பினராகி விட்டேன். அவர் விளக்கியது குண்டலினியோக தீட்சை முறைதான். சாந்தியோகமென்னும் இறங்குபடிமுறை அவரிடம் ஒரு சிறப்பான பயிற்சி. ஒழுங்கான முறையில் தீட்சை பெற்றுச் சிந்தனையோடு பயின்றேன். என் மனதிற்கு ஒத்ததாக இருந்தது. இதுவரையில் யானறிந்திருந்த தத்துவ விளக்கம் தியான முறை இவற்றோடு இதை இணைத்து ஆராய்ந்து வந்தேன். பல அன்பர்கள் அச்சபைக்கு வருவார்கள். அவர்களில் பலர் எனக்கு நண்பர்களாயினர். எனது கருத்துக்களை விளக்குவதற்கும், கூட்டாகத் தவம் பயில்வதற்கும், பரஞ்ஜோதி சுவாமிகளின் ‘உலக சமாதான ஆலயம்’ என்ற ஞானசபை பொருத்தமாக இருந்தது.
இரண்டாம் திருமணமாகிப் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. குழந்தைப் பேறு இல்லை. எனக்கு குழந்தை இல்லையே என்ற கவலை சிறிது கூட இல்லை. ஆயினும் என் மனைவிகட்கு மட்டும் கவலை அதிகம். இரண்டு பெண்களை ஒருவர் மணம்செய்து கொள்வது கூடாது என்பது, எனது முடிவுதான் என்றாலும், நானே அந்தப் பாவத்திற்கு ஆளாகி விட்டேன். ஆனால் என்னைப் பார்த்து மற்றவர்கள் இதே தவறைப் புரியக் கூடாது என்று எண்ணினேன். இந்த எண்ணத்தில் என் அனுபவங்கள் அனைத்தும் கூடி “இரு தாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளாக உருவாயிற்று.
அவற்றைக் கீழே படியுங்கள்.
முதல் மணம்
“உத்தமியாள் அறிவுடடையாள் பதியாய் என்னை
உவந்தேற்றாளை மணந்து நலமாய் வாழ்ந்தேன்.
பத்துவருடம் கழிந்தும் குழந்தை இல்லை
பக்திநிலை அக்காலம் எங்களுக்குப்
புத்திரனில்லா தோர்கள் பாவி என்று
புனைந்த கற்பனைக் கதைகள் படித்ததோடு
நித்தம் அதனைச் சுட்டிக்காட்டி உற்றார்
நிந்திக்கும் சொற்களையும் கேட்டு நொந்தோம்.”
“பெண்குலத்தின் இரத்தினமாம் என்மனைவி
பெரும்அளவில் துன்புற்று என்னைநோக்கிக்
கண்கலங்கி “நீங்கள் மற்றும் ஒருபெண் தேடிக்
கல்யாணம் செய்தாக வேண்டும், இன்றேல்
பண்பறியா மனிதர்பலர் இழித்துக் கூறும்
பழிப்புரைகளைக் கேட்டுச் சகியேன்? என்றாள்.
புண்பட்ட என்நெஞ்சம் மேலும் புண்ணாய்ப்
பொறுத்திருநீ ஓர் ஆண்டு என்று சொன்னேன்.”
எங்கள் கருத்து
“பெண்டிரண்டு கொண்டாலும் சுகமில்லை
பெருநெருப்பு சாகளவும் துக்கம்” என்ற
பண்டைமொழி ஒரு ஆண்டு தினமும் பாடிப்
பார்த்திடுவேன் அவளை மனம்மாற்ற எண்ணி;
அண்டை அயலார் உற்றார் நிந்தைகேட்டு
அலுத்திருக்கும் அவளுக்கோ அமைதியில்லை;
“சண்டைவரும் என நீங்கள் எண்ண வேண்டாம்
சகல துறையிலும் ஒத்துவாழ்வேன்” என்றாள்.
மனிதன் இயல்பு
“இன்பமே எல்லோரும் விரும்புகின்றோம்
எப்போதும் கற்பனையால் பெரும்பாலோர்கள்
துன்பமே தோற்றுவிக்கும் செயல்கள் செய்து
துயரடையும் மனிதஇன இயல்புக் கேற்ப
அன்புருவாம் முதல்மனைவி அருகிருக்க
அடுத்து ஒருபெண்ணை மணம்செய்து கொண்டேன்
இன்றுவரை முன்னவள் சொல் மீறவில்லை
எனினும் பின்வந்தாட்கப் பொறுப்பு ஏது?”
வாழ்க்கைப் பளுவும் பொறுப்பும்
“பெரும்பளுவை வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டேன்
பெண்கள் இருபேர்களது உள்ளத் தூறி
வரும்வேக உணர்ச்சிகளைக் கூர்ந்துநோக்கி
வாழ்க்கையிலே அவ்வப்போ கடமையாற்றத்
துரும்பசைக்க நினைத்தாலும் உயர்வு தாழ்வு
தோற்றாத முறையினிலே எண்ணிச் செய்வேன்
அரும்நண்பர் உற்றார்கள் எங்கள் வாழ்வில்
அமைதிகண்டு மனநிறைவு கொள்ளும்வாறு.”
கவலையில் மாற்றம்
“மற்றும்ஒரு பத்தாண்டு கழிந்து போச்சு
மனைவிகட்கு யானும் எனக்கவர்ளன்றி
பெற்ற குழந்தை வேறுஇல்லை இப்போ
பேசுவது எதைப் பற்றி? பெண் ஒருத்தி
மற்றவளுடன் ஒத்துவாழ வென்றால்
மணாளனெனும் பொறுப்புடையான் அனுபவத்தில்
கற்றவித்தை மற்றும் ஒருசமயம் ஒவ்வா
கணத்திற்கு கணம் புதியநிலைமை தோன்றும்.”
இந்தியப் பெண்களின் உயர்ந்த நீதி
“சிந்தனையில் உயர்வான மனித வர்க்கம்
சிறப்பாக மதிக்கும் பலபொருட் களுண்டு
இந்திய நாட்டில் பிறந்த பெண்களுக்கோ
இல்வாழ்வில் கணவனிலும் உயர்ந்ததான
எந்தப் பொருளும் இல்லையெனில் ஓர்பெண்ணின்
எண்ணத்தில் எத்தகைய புயல் உண்டாகும்
பந்தத்தால் உடலுயிர்கள் ஒன்றுபட்ட
பதியையே மற்றும் ஓர்பெண் பங்குகொண்டால்.”
மேல் தோற்றத்தால் ஏமாறாதீர்
“எத்தனையோ சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால்
இரண்டு மனைவிகள் கொண்டோர் பல பேர் உண்டு
பத்து குடும்பம் தேர்ந்து வாழ்க்கை ஆய்ந்தால்
பல விதத்தும் அவர்கள் படும்பாடு காண்பீர்
சொத்தை பல உள்ளிருக்கும் வெளித் தோற்றத்தில்
சுகமே கற்பனை செய்து ஏமாறாதீர்
ஒத்து வந்தால் மூவருள்ளும் வாழ்நாள் எல்லாம்
உலக அதிசயங்களிலே அதுவும் ஒன்றாம்.”
அறிவின் ஒளி
“இரண்டாம் பெண் கொண்ட சில நாட்களுக்குள்
எனக்கு உள்ளுணர்வு நிலை விளங்கிப் போச்சு
மிரண்ட அறிவின் நிலையில் சோதி யான
மின்னலைப் போல் ஒளிகண்டேன் அறிவறிந்தேன்
புரண்டு வரும் இன்பதுன்ப வெள்ளம் தாங்கும்
பொறுமை யெனும் கடலானேன் உலகில் வாழ்ந்து
திரண்ட அனுபவங் கடமை முதலாய்க் கொண்டு
தெளிவுடனே வாழ்முறை வகுத்துக் கொண்டேன்.’
எனக்கமைந்த சூழ்நிலைகள்
“சுருங்கச் சொன்னால் எனக்கு அமைந்த நல்ல
சூழ்நிலைகள் பல அதனால் இரண்டு பெண்கள்
நெருங்கி உறவாடி ஒரு குடும்பமாக
நேசித்து வாழ்கின்றார் ஒவ்வோர் வேளை
இரும்பொத்த என் மனமே சலனங்கொள்ள
ஏற்ற மனக்கலக்கமுறும் நிகழ்ச்சி தோன்றும்
வருங்காலத் தவர்களுக்கு விழிப்பை ஊட்ட
வாழ்ந்து கண்ட அனுபவமாய் இதைச் சொல்கின்றேன்.”
சட்டத்திலும் பொத்தல்
“ஒருவர் இருமனைவிகளைக் கொள்ளும் செய்கை
ஒவ்வாது சட்டத்தால் எனினும் என்ன?
பெருமை படத்தக்க இந்த நாட்டின் பெண்கள்
பெற்றவர்கள் உற்றார்கட் கெதிர்ப் பென்றாலும்
அருமைக் கணவன் விரும்ப மற்றோர் பெண்ணை
அவனுக்கு மணம் முடித்தும் கடமை செய்வார்
வரும் தொல்லை வாழ்நாட்கள் முழுதும் ஏற்பார்
“வாதி” யார் அவளைவிட? சட்டம் எங்கே?”
எச்சரிக்கை
“பிள்ளைகளைப் பெற்றெடுத்தோர் வாழ்வில் காணும்
பெருந்துன்பம் நன்கறிவார் எனினும் இல்லாச்
சள்ளை இலாமல் வாழக் கண்ணால் பார்த்தும்
சலன புத்தியுடன் சொல்வதெல்லாம் கேட்டு
உள்ளத்தில் உறுதிகுலைந்திரு பெண் வாழ்வில்
ஒருவருமே மனைவிகளாய்க் கொள்ள வேண்டாம்
முள்வேலிக்கிடை நடக்கும் போக்கை ஒக்கும்
மூச்சுள்ள வரை துன்பம் எச்சரிக்கை!”
இந்தக் கவிகள் பன்னிரெண்டும் எழுதி முடித்த மறுநாள் எங்கள் இல்லத்திற்கு ஓர் அன்பர் வந்தார். அவர் அனந்தபுரத்திற்கு அடுத்த பனைமலைப்பேட்டைவாசி. அவர் பெயர் தண்டபாணி செட்டியார். இரவு சாப்பாடு முடிந்தவுடன் என்னுடன் ஏதோ பேச முயன்றார். அப்போது இந்தக் கவிகளைப் படித்து முடித்து விடுங்கள். பிறகு பேசலாம் என்று எழுதி வைத்திருந்த கவிகளைக் கொடுத்தேன். அவர் என் கவிகளைப் படித்துப் பொருளுணர்ந்து இரசிப்பவர்களில் ஒருவர். எப்போது வந்தாலும் நான் எழுதிய கவிகளைப் படித்து விவாதித்துவிளக்கம் பெறுவது வழக்கம். அந்த முறையில்தான் “இருதாரம்” என்ற தலைப்பில் உருவான கவிகளையும் படிக்கக் கொடுத்தேன். படித்தார்; ஆழ்ந்து சிந்தனை செய்தார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போல கவிகளை என்னிடம் கொடுத்து, இது பலர் வாழ்வைத் திருத்தி அமைக்க உதவும் என்று சொன்னார். பிறகு ஏதேதோ சிறிது நேரம் பேசிவிட்டு அவர் படுக்கப் போய்விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் ஊருக்குப் போய்விட்டது தெரிந்தது. அவர் வந்தவுடன் திரும்பிப் போவது கிடையாது. எங்கள் கம்பெனிக்கு அவர் மூலம் அறுபது தறிகள் பனைமலைப்பேட்டையிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் நெய்து வந்தன. அவர் நூல் பாவு, பணம் வாங்கிக் கொண்டுதான் போவார். அவர் உடனே திரும்பிப் போய்விட்டது எனக்கு வியப்பாக இருந்தது… எனது தம்பியிடம் மாத்திரம் சொல்லிவிட்டுப் போனது தெரிந்தது. முக்கியமான ஒரு குடும்ப விஷயத்தைப் பற்றிப் பெரியவரிடம் ஆலோசனை கேட்க வந்தேன். அவரிடமிருந்து பதில் கிடைத்துவிட்டது. வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனது தம்பி இந்தச் செய்தியைச் சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னை அவர் குடும்ப விஷயமாக ஏதும் கேட்கவில்லையே என்று கூறினேன்.
இரண்டு நாட்கள் பொறுத்து அவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. “எனது தாய் தந்தையர் எனக்கு இரண்டாம் திருமண ஏற்பாடு செய்திருந்தார்கள். பிள்ளையில்லாக் குறையைப் போக்க, அவர்கள் அவ்வேற்பாடு செய்தனர். அதுபற்றி உங்களைக் கேட்டு கருத்தறிந்த பிறகு பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு, உங்களிடம் வந்தேன். நான் உங்களைக் கேட்கக் கூட இல்லை. அதற்குள் நீங்கள் “இருதாரம்” என்ற தலைப்பில் பன்னிரண்டு கவிகளைப் படிக்க கொடுத்தீர்கள். அதைப் படித்த பின்னர் எனக்குப் போதிய பதில் கிடைத்து விட்டது. இது தெய்வச் செயலாக எனக்குத் தோன்றியது. வீட்டுக்கு வந்தவுடன் திருமண ஏற்பாட்டை ரத்து செய்து விட்டேன். என் மேல் என் பெற்றோர்கட்குச் சிறிது மனவருத்தம்தான். ஆயினும் அவர்களைச் சமாதானப்படுத்தி விட முடியும். என்னை நல்ல சமயத்தில் விழிப்பூட்டிக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று, கடிதத்தில் குறித்திருந்தது. எனக்குத் தாங்கொணா மகிழ்ச்சி. இந்தக் கவியை அச்சடித்துப் பலருக்குக் கொடுத்தால் நல்லது என்று எண்ணி இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டேன்.
எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து என் தம்பிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவது மாதம் அதன் தாய்க்குக் கடினமான நோய் கண்டுவிட்டது. அப்போது குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எனது இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் அந்தக் குழந்தையை நாங்களே வளர்த்து வருகிறோம். என் மனைவிகட்குப் பிள்ளையில்லாக் குறையை நீக்கிய அந்தப் பெண் செல்வத்தின் பெயர்தான் ஞானாம்பிகை. மிக்க கூர்மையான அறிவு அவளுக்கு. அதை நன்றாக விளங்கிக் கொள்ள அவளுக்குப் பத்து வயதில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரத்தை அடுத்த இதழில் விளக்குகிறேன்.
மனமாற்றம் வேண்டும்
நாசவழி போகாமல் உலக மக்கள்
நல்வாழ்வை யடைந்தமைதி காணவென்றால்
தேச மத சாதி மொழி இன பேதங்கள்
தனிஉடமைப் பற்றொழிய வேண்டும் ஆண்பெண்
நேச உடல் உறவினிலே களங்கமற்ற
நெறிநிலைக்கும் சூழ்நிலைகள் அமையவேண்டும்
பாசமென்ற மனமயக்க பழக்கம் விட்டு
பண்புடனே வாழவழி காணவேண்டும்.
பதினாறு பேறு
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் அறம் வாழ்க்கைத் துணைநலம் இளமை
அறிவு சந்தானம் வலிதுணிவு ஆண்மை வெற்றி
ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.
மனிதன் மதிப்பு
திறம்பல பெற்றும் சிறப்புள விஞ்ஞானத்தால்
அறம்தவம் இரண்டுமின்றி அறிவது குருடாய்ப் போச்சு
புறம் அகம் ஒழுக்கமின்றி பூவுலகெங்கும் பல்லோர்
மறந்திட்டார் மனிதன் என்ற மதிப்பையே மயக்கம்துன்பம்.
சிக்கல் அகற்ற
சீர்திருத்த முறையினிலே காலத்திற்கேற்ப
சிக்கனத்தை வாழ்க்கையிலே செயலாக்கி உய்ய
சிந்தனையைப் பேரியக்கத் தொடர்களத்தில் செலுத்தி
சிக்கல்களை யகற்றி மெய்யறிவு பெறச்செய்வோம்.
சமாதானம் காண்போம்
அலைஅலையாய் பெருக்கெடுக்கும் அறிவுவெள்ளம்படுத்தித்
தலையாய நம்சக்தித் தரமுணர்ந்துப் பொதுநிதியாம்
கலைகள்தமை விலையாக்கும் காலத்தை மாற்றிவிட்டு
நிலையான சமாதானம் நிலஉலகில் நாம்காண்போம்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – I
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும். உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே. அதிலிருந்து கிளைக்கும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களும் ஆகும். உடலை விட்டு உயிர் பிரிந்தால் அதோடு அந்த மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுகின்றன. எனினும் சமுதாயக் கூட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனுடைய சிக்கல்களில் வேறு பலர் பின்னப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஒருவன் வாழ்வு முடிந்து அவன் சிக்கல் முடிந்துவிட்டாலும் அவனோடு பின்னப்பட்டிருந்தவர்களிடம் சில புதிய சிக்கல்கள் உருவாகிவிடும். சிக்கலில்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில், எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான். தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்கள்தான் இதற்கு விதிவிலக்கு.
ஒரு மனிதனுக்குப் பசி, வெப்ப தட்ப ஏற்ற உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் இவையே அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் இயற்கை வழி வந்த சிக்கல்கள். இவற்றிற்கு இயற்கை வளம், அறிவு வளம், உடல் வளம் என்ற மூன்றும் கூடினால், முறையாகக் காலா காலத்தில் இயற்கைச் சிக்கல்களைப் போக்கிக் கொள்ளலாம். புலன் கவர்ச்சியில் வாழும் மனிதனுக்குத் தன்னை மறந்து அளவு மீறியும் முறை மாறியும் செயலாற்றும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் சிக்கல்கள் செயற்கை முறையில் – அறிவின் குறையால் உணர்ச்சி வயப்பட்டு ஆற்றும் செயல்களால் பெருகுகின்றன.
தன் இயற்கையான தேவைகட்கு இன்றியமையாத பொருள்களையும் வசதிகளையும் மாத்திரம் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் சிக்கல்கள் இருப்பதே தெரியாது. தினசரி வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு ஒரு மனிதன் வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகுகின்றன. தனது பாதுகாப்பில் வாழக்கூடிய மக்கள் எண்ணிக்கை பெருகும் அளவிற்கு அச்சிக்கல்கள் மேலும் பலமடங்கு பெருக்கமடைகின்றன. இவ்வளவையும் அறிந்த மனிதன்தான், சிக்கல்களை வளரவிடாமல், இருக்கதும் சிக்கல்களை நுட்பமான முறையில் போக்கிச்கொண்டு, தெளிவோடு வாழ்வான்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – II
என் வாழ்விலும் இத்தகைய முறையில் உருவான சிக்கல்கள் பல. அவற்றில் மக்கட்பேறு இல்லாமையும், அதன் காரணமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும், எவ்வளவோ சிக்கல்களைப் பெருக்கி விட்டன. எனினும் நான் சிந்தனையில் ஆழ்ந்து தத்துவ விளக்கம் தெளிவாகப் பெற்றபின் அச்சிக்கல்களை எதிர்த்து எளிதில் வெற்றிபெற முடிந்தது. முதலில் மக்கட்பேறு இல்லாத குறை இருந்தது. அது நாளுக்கு நாள் மறந்தே போய்விட்டது. மேலும் மக்கட் பேறின்மையும் எக்காரணத்தால் என்ற சிந்தனையில் ஆழ்ந்த போது எனக்குச் சில விளக்கங்கள் கிட்டின. மக்கட் பேரின்மைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இளமையில் திருமணம் மறுத்து சன்யாசம் கொள்ளுதல் (2) உடல்நலக் கேட்டினால் விந்து கெட்டுப் போய்விடல் (3) வினைகள் கழிக்கப் பெற்றுப் பரம் பொருளோடு உயிர் இணைந்து நிற்கும் தவம் சித்தி. இவற்றில் மூன்றாவது காரணத்தால்தான் எனக்குக் குழந்தை பிறக்கவில்லையென்பதைத் தெளிவாக உணர்ந்தேன். என் சிறுவயதில் அடிக்கடி பஜனைக்குச் செல்வேன். அங்கு தாயுமானவர் பாடல்களில் ஒன்றான “அங்கிங்கெனாதபடி” என்று தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தக் கவியில் பொருளுணர்ந்து அதே நிலையில் ஆழ்ந்து நின்று விடுவேன். பின்னர் வீட்டுக்கு வந்த பின்னும் அப்பாடலை மனனம் செய்து இரசிப்பேன்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்
இறைவனடி சேராதார்.
“வீழ்நாள் படா அமைநன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங்கல்.”
என்னும் வள்ளுவர் கருத்துக்கு ஒப்ப எனக்கு அடிக்கடி மெய்ப் பொருளோடு இணைந்து இலயமாகும் பேறு, சிறுவயது முதலே கிடைத்தது. ஆயினும் அதைத் தெளிவாக விளக்கம் பெறப் பல ஆண்டுகள் சென்றன. செயல்களிலும் ஒழுக்கம் பிறழாத அறவழியே செயலாற்றி வாழ்ந்தேன். கடவுளைச் சேர்ந்து முக்தி பெறவேண்டும் என்பதே, சிறுவயது முதல் ஏற்பட்ட அவா. இக்காரணங்களால் பிறவிக்கு உரிய தொடர்பு அறுந்துவிட்டது. மேலும் விந்தின் மூலம்தான் பிறவித்தொடர் என்ற விளக்கமும் கிடைத்த பின்னர், எனக்குக் குழந்தை இல்லைேயே என்ற குறை அறவே அற்றுப் போயிற்று. என் மனைவிகட்கும் ஞானாம்பிகையை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், ஓரளவு குழந்தை வேட்பு அடங்கி விட்டது. அவர்கள் ஆசைகளை யெல்லாம் குடும்பத்திற்கு ஒரே குழந்தையாக வந்த செல்வப் பெண் ஞானத்தை வளர்ப்பதில் திருப்பி விட்டார்கள். அவளைக் காலத்தோடு பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தோம். அவளுக்கு வயது பத்து இருக்கும். அப்போது ஒரு நாள் அவள் எனது நண்பர், அருட்செல்வர் திரு. ஆ. சொக்கலிங்கம் என்பவரை ஒரு கதை சொல்லும்படி கேட்டாள். அவர் மிகவும் அன்போடு திருவள்ளுவர் கதையை எடுத்துச் சொன்னார். அந்தக் கதையில் மணலைச் சோறாக்கி படைத்தார் வாசுகி. அதனால்தான் அவள் பெருமையுணர்ந்து அவளைத் திருவள்ளுவர் திருமணம் செய்து கொண்டார் என்று கதைப் போக்குப்படி என் நண்பர் கூறினார். பொறுமையோடு இதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த ஞானம். இங்கு சொக்கலிங்கம் அவர்களைக் குறுக்கிட்டாள். நீங்கள் சொல்வது பொய்க்கதை. மணலை எப்படி சோறாக்க முடியும்? அது முடியாத காரியம். ஆகவே, இந்த மாதிரி பொய்யான கதையை ஏன் சொல்லுகிறீர்கள்? என்று இடைமறித்து வினவினாள். நண்பர் ஏதேதோ சமாதானம் கூறிப் பார்த்தார். ஏற்கவே இல்லை. அந்த வேளையில் நான் அங்கு வந்தேன். உடனே நண்பர் என்னைப் பார்த்து என்னங்க திருவள்ளுவர் கதையைச் சொன்னேன். அதில் வரும் மணலைச் சோறாக்கும் நிகழ்ச்சி பொய் என்று கூறி வாதம் செய்கிறாள் ஞானம். நீங்களாகிலும் கொஞ்சம் அவளுக்குச் சமாதானம் கூறுங்கள் என்றார். உடனே நான் அவர்களோடு உட்கார்ந்தேன். கதை உண்மைதானம்மா. ஆனால் கருத்து அதில் மறைக்கப் பெற்றிருக்கிறது என்ற அந்த மறைபொருளை அவள் விளங்கிக் கொள்ளுமாறு உணர்த்தினேன். அவளுக்கும் நிறைவு ஏற்பட்டது. நண்பரும் மனமாற்றம் அடைந்தார். இரண்டு நாட்களில் அந்த நிகழ்ச்சிகள் ஐந்து பாடல்களாக உருவாயின. அவற்றைப் படியுங்கள்.
எனது வாழ்க்கை விளக்கம் – 10 – III
பகுத்தறிவு வாதம்
“எனது மகள் ஞானமெனும் சிறுமி ஓர்நாள்
என் நண்பரை நோக்கிக் கதை சொல்லென்றாள்
மனது மிக உற்சாகம் கொண்ட வட்கு
மாமுனிவர் வள்ளுவர் கதையைச் சொன்னார்
உனது கதை சரியில்லை மணலைச் சோறாய்
ஒருவருமே சமைக்கு முடியாதென்றாள் பின்
நினது கருத்தென்னென்று என்னைக் கேட்டாள்
நீதிபதி பொறுப்பேற்றேன் இருவர் முன்னே. “
அறிவின் திறனால் உணர்த்திய காதல்
“உத்தமியாள் அறிவுடையாள் பதியாய்த் தன்னை
உவந்தேற்பாள் ஒருவளைத் தேர்ந்திட வள்ளுவர்
பித்தனைப்போல் மணல் முடிச்சுடன் திரிந்தார்
பேரறிவால் வாசுகி யூகித்தறிந்தாள்
வித்தையெனப்பலர் முன்னே மணல் கைக்கொண்டாள்
வீசியெறிந்தாள் மறைவில் அரிசிச்சாதம்
சித்தம்மகிழ்ந்தே படைத்துச் சூழ்ந்தோர்க் கெல்லாம்
சிந்தை நிலையறிவித்தாள் எனநான் சொன்னேன்.”
நண்பர் சிந்தனை
“இப்படித்தான் அந்தகதை இருக்க வேண்டும்
ஏன்அதனை மாற்றிவிட்டார் என்றார் நண்பர்
ஒப்பற்ற உயர்வான அறிவின் ஆற்றல்
உடையவர்களில் கூட பலபேர் இன்று
எப்போதும் கற்பனையில் ஆழ்ந்து ஆழ்ந்து
இன்பமடையும் பழக்கம் கொண்டுள்ளார்கள்
அப்படியே அவரவர்கள் போக்குக் கேற்ப
அறிவிற்கு விருந்தளிக்கும் தொண்டீதென்றேன்.”
மனங்கவர வியப்பூட்டல்
“அணுவினிடம் பரிணாமம் ஈர்ப் பியக்கம்
அறிந்து விட்டோர் பெருகிவிட்ட காலம்ஈது
அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்து விட்டோம்
அரிசியின்றி சோறாக மணல் மாறாது
அணுஞானம் இன்னதென்றே தெரியா தோர்கள்
அறிவிற்கு வியப்பூட்ட விருப்பம் கொண்டோர்
அணுதத்துவத்திற்கே முரணாய் அந்நாள்
அனேக கதைகளை இதுபோல் செய்தார் என்றேன்.”
நண்பர் முடிவு
“பத்துவய துடைய சிறுபெண் தொடுத்த
பகுத்தறிவு வாதத்தைக் கேட்டேன் இன்று
இத்தனைநாள் வரையில் இந்தக் கதையின் நுட்பம்
என்னவென்று ஆராயப் புகுந்தேனில்லை
எத்தனையோ கதைகளில் வரும் இதனைப் போன்ற
இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்ச்சி நம்பும்
தொத்து நோய் தனிலிருந்து தெளிவு காணும்
துணிவுஇன்றே பிறந்து விட்டதென்றார் நண்பர்.”
இந்தக் கதையில் ஒரு நுட்பம் இருக்கிறது. வள்ளுவர் அறிவிற் சிறந்தவளாகவும், தன்னை விரும்பி, கணவனாக ஏற்றுக் கொள்பவளாகவும் ஒரு பெண்ணைத் தேர்தெடுக்கத் திட்டமிட்டார். மணலை முடிச்சுப் போட்டுக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து வந்தார். இந்த மணலை வாங்கிக் கொண்டு சாதம் சமைத்து எனக்கு அளிக்கும் ஒரு நல்லாளைத் தேடுகின்றேன் என்றார். எவரும் அதில் உள்ள நுட்பத்தை உணரவில்லை. வாசுகி அறிவு நுட்பத்தால் இந்த மறைபொருளை உணர்ந்து கொண்டாள். மேலும் வள்ளுவரை மணந்து கொள்ளவும் முடிவு கொண்டாள். நான் உங்களுக்குச் சோறு சமைத்துப் போடுகிறேன் என்று மணலை முறத்தில் வாங்கிக் கொணடாள். அதைக் கொட்டிவிட்டு அரிசி போட்டுச் சமைத்து, சாப்பாடு போட்டாள். திருவள்ளுவருக்கு இதனால் அவள் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்டாள் என்பது உணரப் பெறுகிறது. அதற்காகவே கையாண்ட தந்திரம்தான், மணல் முடிச்சு என்பதை உணர்ந்து, அதைப் பெற்றுக் கொண்டதனால், அவள் அறிவுக் கூர்மை உணரப் பெறுகிறது. இந்த இரண்டு தகுதிகளையே எதிர்பார்த்தார் திருவள்ளுவர். அத்தகுதியுள்ள ஒருத்தியைத் தேர்ந்து திருமணம் முடித்து இல்லறம் ஏற்றார். இவ்வாறு தான் அந்தக் கதையின் கருத்து இருக்க வேண்டும் என்று நான் விளக்கினேன்.
சித்து விளையாடல் மூலம் ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியும், இல்லாத பொருளை வரவழைத்தும் சிலர் காட்டுவார்கள். நாம் பார்க்கிறோம். இவ்வாறு வாசுகியம்மைறாரும் செய்திருக்கலாமல்லவா? எனச் சிலர் எண்ணலாம். சித்து என்பது ஒருவர் பிறரை, ஏமாற்றும், ஏய்க்கும், ஒருவித கலையாகும். இது அறிவின் உயர்வின்பாற் பட்டதல்ல. ஆன்மீக வளர்ச்சியின் உயர்வின் எடுத்துக் காட்டுமல்ல. அம்முறையில் வாசுகி செய்திருந்தால் வள்ளுவர் அவளை மணந்திருக்க மாட்டார். ஏன்? அவர் அறிவிற் சிறந்தவர். மெய் விளக்கம் பெற்றவர். இவ்வகையில் விரிந்த என் விளக்கம் கேட்டு இருவரும் அமைதி பெற்றனர். இந்தக் கவிகளையும் பிறகு அச்சடித்து அப்போது வெளியிட்டேன். பலர் படித்து மகிழ்ந்தார்கள்.
என் வாழ்நாட்கள் எல்லாம் சிந்தனையிலேயே கழித்து வந்தேன். சிந்தித்த முடிவுபடி செயல்புரிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனினும் பொதுவாக மனித இயல்பான மயக்கமும் அவ்வப்போது எழத்தான் செய்தது. எப்போதோ ஒரு செயல் பழக்கத்தின் வழியே நடந்து தவறான விளைவுகளையும் தரும்.
நான் செய்த இரண்டு கொடுமைகள்
என் வாழ்விலே நான் மறக்க முடியாத தவறாக இரண்டு கொடுமைச் செயல்களைச் செய்துவிட்டேன். அவை உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சினத்தின் எழுச்சியால் விளைந்தவை.
நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித் தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லையென்று, பிரம்பினால் கைபோனபடி கீழும் மேலும் திருப்பித் திருப்பி விளாசி விட்டேன். அந்தக் குழந்தை பதை பதைத்து அழுத காட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. “சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்” என்று அவன் கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்பு நிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன். இனிமேல் நன்றாக படியப்பா. நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன் என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மிவிட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய் விட்டேன். அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப் பிரம்பு. இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன். இது ஒரு கொடுமை. நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது.
என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்பட செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன். அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பில் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள். ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்துவிடும் என்று தலையில் ஊற்றிவிட்டாள். எனக்கு தாங்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டது. சினம் மீறி விட்டது. குளிர் எப்படி இருக்கிறது என்று நீ பார் என்று நான் ஒரு வாளி தண்ணீரை மொண்டு அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன். அவள் ஒன்றுமே பேசவில்லை. சிலைபோல் நின்றுவிட்டாள். தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்துவிட்டுக் கொண்டாள். ஆனால், அவள் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் புண்படும் வகையில், நான் சினம்கொண்டு அவளிடம் நடந்துகொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன். உடனே அவளுக்கு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்து உருவாகியது. தற்சோதனை எனும் உளப்பயிற்சி முறை உருவாயிற்று.
தவறு செய்தல் எல்லோருக்கும் இயல்புதான். சிந்தனை ஆற்றல் இல்லாதவர்கள். அந்தத் தவறுகளைப் பெருக்கிக் கொண்டே போவார்கள். சிந்தனைத் திறன் உடையவர்கள் தவறு செய்து விட்டால் அதன் விளைவைக் கணித்து, தாம் இனி அத்தவறு செய்யாத விழிப்பு அடைவதோடு, மற்றவர்களும் இத்தகைய தவறு புரியாமலிருக்க என்ன வழியுண்டு என்று ஆராய்ந்து முடிவு கண்டு, பயன் விளைப்பார்கள். இத்தகைய முயற்சியிலே விளைந்த கவி இங்கே படியுங்கள்.
“அறிவைப் புலன்களில் அதிக நாள் பழக்கினேன்
அதன்பயன் உணர்ச்சிகள் அறிவை வென்றன
அறிவை யறிவால் ஆராயப் பழகினேன்
அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்
அறிவு அகண்டா காரத்தில் நிலைபெற
அதிக விழிப்பும் பழக்கமும் பெற்றது
அறிவு புலன்களை அறிந்தது வென்றது
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்”.
மனிதனும் தெய்வமும்
இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.
பேரியக்க மண்டலத்தில் பெரிய பெருங்கோள்கள்
பிறப்பு இறப்பிடை மனிதன் பிறஉயிர் அனைத்தும்
சீரியக்க ஆற்றல் காந்த சிறப்பென உணர்ந்தால்
செத்துப் போகவே பிறந்து வாழும் மாந்தர் வாழ்வில்
போரியக்கக் காரணமாம் ‘தான்’ ‘தனது” என்னும்
பொருள், புகழ், செல்வாக்குப் புலன் மயக்கம் வாழ்வில்
வேரழிக்கும் அறுகுணங்கள் ஐந்து பழிச்செயல்கள்
விளையாது நட்பு அன்பு கருணை இவை ஓங்கும்.
அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம்
அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில்
பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம்
படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம்
வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே
வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும்
பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன்
பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.
எனது வாழ்க்கை விளக்கம் – 11
எனக்கு இளம் வயதில் ஏற்பட்ட ஐயங்கள் மூன்று. அவை :
முதலாவது, தெய்வத்தைப் பற்றியது. கடவுள் யார்? எங்கே எப்படி உள்ளார்? அவரைக் காண்பது எப்படி?
இரண்டாவது, ஐயம், உயிரைப் பற்றியது. உயிர் என்பது என்ன? எங்கிருந்து எப்படி வந்தது? பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் உயிரின் நிலை என்ன?
மூன்றாவது, வறுமையைப் பற்றியது. அது இயற்கையா? செயற்கையா? அதனைப் போக்க முடியுமா? அப்படியானால் எவ்விதம்? இம்மூன்று வினாக்களுக்கும், எனது வயது முப்பத்து ஐந்துக்குள் தெளிவான விளக்கங்களைக் கண்டு விட்டேன். தோற்றமாகக் காணும் எப்பொருளிலும் மெய்ப் பொருளாக இருப்பதுதான் தெய்வம். அதனுடைய நுண்ணிய இயக்க ஆற்றலே விண் எனப்படும் ஆகாசம், ஆகாசத்தின் திரட்சிநிலை வேறுபாடுகள்தான் காற்று, நெருப்பு, நீர், நிலம் மற்ற நான்கு பூதங்களும். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்திலும், ஆகாசமெனும் நுண்ணியக்கமே உணர்ச்சி ஆற்றல் பெற்று உயிராக இயங்குகிறது. உயிரே தனது புலன்கள் மூலம் அது மேலும் சிறப்படைந்த நிலையில்் அறிவுமாகி இயங்குகின்றது. மனிதன் இயற்கை வளத்தைத் தனது உழைப்பையும், அறிவுத் திறனையும் கொண்டு உருமாற்றித் துய்த்து வாழப் பழகிக் கொண்டான். இயற்கை ஒழுங்கமைப்பையும், உழைப்பின் பெருமையையும் உணராதோர், கடமை பிறழ்வதே வறுமையாக மலர்கின்றது. தெய்வநிலை, உயர்நிலை, அறிவு, உழைப்பு இரண்டின் மதிப்பு, இவற்றை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால், மகிழ்ச்சியோடும், அமைதியோடும் எல்லோரும் வாழலாம். சிலர் உணர்ந்து கடமை செய்தும், பலர் உணராமல் கடமை பிறழ்ந்தும் வாழ்வதே, உலகில் உள்ள வறுமைக்கும், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். எல்லாம் வல்ல மெய்ப்பொருளே உயிராகவும் அறிவாகவும் மலர்ந்து இருப்பினும், புலன்கள் மயக்கத்்தில் தனது ஆற்றலைக் கட்டுப்படுத்திக்கொண்டு மயக்க நிலையில், செயலாற்றுவதால் பழிச்செயல்கள் பெருகின்றன.
சிந்திக்கும் ஆற்றலுள்ள மக்களெல்லோரும் இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் அவர்கள் தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் எனும் ஐவகைக் கடமைகளையும் முறையாக ஆற்றினால் தனி மனிதன் வாழ்வும், சமுதாய வாழ்வும் இன்ப மயமாகவே இருக்கும். மனித சமுதாயம் என்ற பேரவையில் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனும், எல்லோருக்கும் ஒத்தும் உதவியும்தான் வாழ வேண்டு்ம். இன்றேல் ஒருவரால் பிறருக்கு உரிமைக்கேடும் துன்பமுமே விளையும். மயக்க நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களோடு தங்களுக்கோ பிறருக்கோ அறிவிற்கோ உடல் உணர்ச்சிக்கோ தீங்கு விளைவிக்காத முறையில் மக்கள் அனைவரும் கூட்டுறவு பூண்டு வாழ வேண்டும். அப்போதுதான் மனிதகுல வாழ்வில் அமைதி நிலவும் என மெய்யறிவு பெற்றவர்கள் உணர்ந்தனர். அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறியே மதம் (Religion) எனப்படுகின்றது. நெறி பிறழ்ந்தவர்களைத் திருத்தவும், தண்டிக்கவும் ஏற்ற ஒழுங்கு முறைகளும் மெய்யறிவு பெற்றவர்களால்தான், ஆட்சிச் சட்டமாகவும் அவற்றின் திருத்தங்களாகவும் புகுத்தப் பெற்றன.
எனது வாழ்க்கை விளக்கம் – 11 – II
எனினும் மதங்களும் ஆட்சியும் இன்று வரையில் மனிதகுல வாழ்வில் அமைதி ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. காரணம்; தெய்வநிலை, உயிர்நிலை, வாழ்வின் வளம் காக்கும் பொருளாதார நிலையறிந்தவர்கள் மதத்தையும் ஆட்சியையும்நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் நான் உணர்ந்துகொண்டேன். தெளிவான விளக்கம் பெற்றாயிற்று. எனினும் இந்த நிலையில் நான் செய்ய வேண்டியதென்ன? இந்த வினா என் உள்ளத்தில் எழுந்துிவிட்டது. உலகம், மனித சமுதாயம், ஒவ்வொரு தனி மனிதனையும் பெற்றெடுக்கின்றது. உடல்வலிவு, அறிவுத்திறம், செல்வ மேன்மை, செல்வாக்கு, இவற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் உயருகின்றனர். சமுதாயத்தால் அளிக்கப் பெற்ற இந்த நான்கு பேறுகளையும் கொண்டு மனிதன் சமுதாயத்திற்குக் கடனாற்ற வேண்டும். பிறந்தபோது தனி மனிதன் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதேபோல் அவன் இறக்கும்போது கொண்டுபோவதுமில்லை. எனினும் இறப்பை நோக்கி எல்லோரும் பிறக்கின்றோம்.
பிறப்பிலிருந்து இறப்பு தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் காலமே வாழ்வாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள ஆற்றல் சமுதாயத்தினுடையதே. சமுதாயத்தில் இருந்து தான் எல்லா ஆற்றலையும் பெற்றிருக்கும் உண்மையினை உணர்ந்தால் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவர்களே. அந்தக் கடனை உடல், அறிவு, உழைப்பின் மூலம் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். சமுதாயம் தனி மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல்கள் மூலம் சமுதாயத்திற்குப் பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துத் தொண்டு செய்வதன்மூலம் திருப்பி அளித்துக்கொண்டு வரவேண்டும். இந்த உணர்வே “நிஷ் காமிய கர்மம்” (பயன் கருதாத செயல்) ஆகும். நான் செய்யும் தொழிலுக்கு இன்னதைப் பதிலாகப் பெறுவேன் என்ற கணக்குப் போட்டுச் செயல்புரிந்தால், அது காமிய கர்மமாகும். இது மயக்க நிலையில் எழும் தப்புக் கணக்கு.
பிறந்தது முதல் இறக்கும்வரையில் எல்லோரையும் வாழ வைக்கின்றது சமுதாயம். அந்தச் சமுதாயத்திற்குத் தன் ஆற்றல் முழுமையும் அர்ப்பணித்து விட வேண்டியதுதானே நீதி. இந்தப் பேருிணர்வில் செயல்புரியும் போதுதான் , அது துறவறம் எனப்படுகின்றது. இவ்வாறத்தைப் பின்பற்றுபவர்கள்தான், தொண்டர்கள் (சந்நியாசிகள்), இந்தத் தொண்டினைக் குடும்பம் என்ற ஒரு சிறு வட்டத்தைத் தனது ஆற்றலுக்கு வரையறை செய்து கொண்டு செயல்புரிந்தால் அதுவே இல்லறம் ஆகும். இல்லறத்தார் எனில் பற்றுடையோர் என்றும், துறவறத்தார் எனில் பற்று இல்லாதவர் என்றும் பொருள் இல்லை. தனது தொண்டுக்கு உரிய பற்று ஒரு சிறு வட்டத்தை ஒட்டியதா? என்பதைக் குறிப்பிடுவனவே இல்லறம் துறவறம் என்ற வேறுபட்ட சொற்கள். எனது அறிவு, செல்வம், செல்வாக்கு, உடல் வலிவு இவற்றிற்கு ஏற்ப நான் எனது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டேன்.
இல்லறமும் துறவறமும் இணைந்த ஒரு நல்லறமே எனக்கும் வருங்கால உலகுக்கும் நலமென முடிவு செய்துகொண்டேன். அந்த முடிவை விளக்குவதே கீழ்வரும் கவி :-
“என் பிறப்பு என் இறப்பு
இரண்டையும் யானறியேன்
எனினும் இவ்விரு நிகழ்ச்சி
என் உள்ளத்தில் கொண்டே
பொன் முதலாய்ப் பொருளனைத்தும்
ஈட்டுகின்றேன் அவற்றைப்
புவிவாழ்வின் இயல்பொக்கப்
பொதுநலமே கருதி
நன்மை எனும் வழிகளிலே
வைத்துச் செலவாக்கி
நற்சமயம் வாய்்க்குமெனில்
அனைத்தையும்நான் அளிப்பேன்
இன்முகமும் இனிமையுமே
எனதுசெல்வம்; வீடோ
ஏகவெளியென் றெண்ணி
யான்துறவு கொண்டேன்”.
எனக்கு லுங்கி வாணிபத்தில் மிகுந்த வருவாய் கிடைத்துக் கொண்டே போயிற்று. இந்த நிலையில் போஸ்டல் ஆடிட் ஆபிஸில் வேலை செய்வது எனக்குப் பொருந்தவில்லை. மறுதலிப்பு (இராஜிநாமா) செய்துவிட வேண்டும் என்றே முடிவு செய்து கொண்டேன்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்